சர்வதேச விசாரணையை கோரி ஆனையிறவிலிருந்து நடை பயணம்


ஈழத் தமிழர்கள் மீதான இனப் படுகொலைக்கு நீதி கேட்டும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள பௌத்தமய மாக்கலை எதிர்த்தும் தமிழ் அரசி யல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்தக் கோரியும் நீதிக்கான நீண்ட நடைப்பயணத்திற்கான அழைப்பை கிளிநொச்சி கிராம மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்கங்களின் சமாசமும் பொது அமைப்புக்களின் ஒன்றியமும் இணைந்து விடுத்துள்ளன.

இது பற்றி அவர்கள் நேற்று கூட்டாக விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

எதிர்வரும் 22-ம் திகதி காலை 8.00 மணிக்கு ஆனையிறவில் ஆரம்பிக்கின்ற நடைபவனி கிளிநொச்சி வல யக்கல்விப் பணிமனை முன்பாக உள்ள ஐ.நா செயலகத்தைச் சென்றடையவுள்ளது.


தமிழர் தாயகத்தின் நயினாதீவில் 60 அடி புத்தர் சிலை வைக்கப்பட்டவுள்ளமை, கொக்கிளாய் கருநாட்டுக்கேணி விநாயகர் ஆலயம் இடிக்கப்பட்டு புத்த விகாரை அமைக்கப்பட்டமை,திருகோணமலை சாம்பல் தீவில் புத்த விகாரை அமைக்கப்பட்டமை, திருக்கோணேஸ்வரம்ஆலயச் சூழல் பத்த மயமாக்கப்பட்டமை, தம்புள்ளைக் காளி கோவில் இடிக்கப்பட்டமை, கிளிநொச்சிலும் பினி விகாரைக்காகத் தனியார் காணிகள் அபகரிக்கப்பட்டமை, இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயம் அருகே பௌத்த விகாரை அத்துமீறி அமைக்கப்படுகின்றமை, மாங்குளம், இரணைமடுச்சந்தி, பரந்தன், கிளிநொச்சி, திருக்கேதீஸ்வரம், பூநகரி வாடியடி, கனகராயன்குளம் பெரியகுளம், கிருஸ்ணபுரம் போன்ற பகுதிகளில் அத்துமீறிப் புத்தர் சிலைகளை நிறுவிப் பௌத்த ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வருகின்றமை,பள்ளிக்குடா புனித தோமையர் தேவாலயத்தையும் இரணைதீவு புனித அந்தோனியார் தேவாலயம் என்பவற்றைக் கடற்படை ஆக்கிரமித்தமை என்பவற்றுக் கெதிராகவும்,

மீள்குடியேற்றம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளுக்குப்பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தல், இனப்படுகொலைக்கு நீதியான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் இந்நடை பயணம் இடம்பெறவுள்ளது.

நீதி கோரும் நீண்ட நடைப் பயணத்தில் அரசியல் தலைவர்கள், மத குருமார்கள், மத அமைப்புக்கள், கிராமிய சமூக பொது சன நிறுவனங்கள், வர்த்தகப் பெருமக்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் என அனைவரையும் ஒன்றிணைந்து வலுச்சேர்க்குமாறு கிளிநொச்சி மாவட்டக் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசமும் பொது அமைப்புக்களின் ஒன்றியமும் அழைப்பு விடுக்கின்றது என சமாசத்தின் தலைவர் கறுப்பையா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila