விடுதலைப்புலிகளை மீளுரு வாக்கும் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த திருமதி பாலேந்திரன் ஜெயக்குமாரி மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் (ரி.ஐ.டி) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி எதிர்வரும் 16 ஆம் திகதி பயங்கரவாத குற்றத்தடுப்பினரின் அலுவலகத்திற்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்ப ட்டுள்ளது. ஆட்பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த ஜெயக்குமாரி வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதுடன் கடவுச்சீட்டும் முடக்கம் செய்யப்பட்டிருந்தது.
அதேநேரம் ஜெயக்குமாரி கைது செய்யப்பட்டபோது அவருடைய அடையாள அட்டை, வங்கிப்புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களையும் பொலிஸார் பெற்றிருந்தனர். இந்த நிலையில் மீண்டும் ஜெயக்குமாரி விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளமை மனிதவுரிமை செயற்பாட்டாளர்களிடையே பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
மேலும் ஏற்கெனவே ஜெயக்குமாரி மீது பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டான விடுதலைப்புலிகளை மீளுருவாக்கும் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருந்தார் என்பது தொடர்பிலேயே இந்த விசாரணையும் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிய முடிகின்றது.