ஊழலும், ஊதாரித்தனமும் நிறைந்ததாக் நாட்டின் பொருளாதாரத்தை நாசப்படுத்தியிருப்பதாக முன்னைய அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது. அரச திறைசேரி கிட்டத்தட்ட காலியாக்கப்பட்ட நிலையிலேயே புதிய அரசாங்கம் பொறுப்பேற்றிருந்ததாக அரச முக்கியஸ்தர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இப்போது இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணங்களை, கொடுப்பனவுகளை புதிய அரசாங்கம் எவ்வாறு ஈடுகட்டப் போகின்றது என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. ஆயினும் முன்னைய அரசாங்கத்தைப் போன்று ஆடம்பரச் செலவுகளைச் செய்யாமல் அவற்றைக் கட்டுப்படுத்தியுள்ளதன் மூலம், மக்களுக்கான சலுகைகளை வழங்க முடியும் என்றும், அது இந்த வரவு செலவுத் தி;ட்டத்தில் துண்டு விழுகின்ற தொகையை அதிகரிக்கச் செய்யமாட்டாது என்று புதிய நிதியமைச்சர் உறுதியளித்திருக்கின்றார்.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், ஊழல், நிதிமோசடிகள், அதிகாரத் துஸ்பிரயோகம், ஆடம்பரச் செயற்பாடுகளின் மூலமாக அரச நிதியை வீண்விரயம் செய்தமை, ஜனநாயக விழுமியங்களைக் குழிதோண்டிப் புதைத்து, குடும்ப ஆட்சி நடத்தியமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு புதிய அரசாங்கம் தீர்வு காணும் என்று நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது இந்த ஆட்சியாளர்கள் வாக்குறுதியளித்திருந்தனர்.
இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல நன்மைகளை உள்ளடக்கியதாக புதிய அராங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. பொதுமக்கள் வெடிகள் கொளுத்தி ஆரவாரம் செய்தும், சிலர் பாற்சோறு பொங்கி பகிர்ந்துண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும் இந்த வரவு செலவுத் திட்டத்தை வரவேற்றிருக்கின்றார்கள்.
புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடனேயே, அதிரடியாகப் பல மாற்றங்களைச் செய்திருந்தது. அந்த மாற்றங்களுக்கு மேலாக, அதிரடியாக பல சலுகைகளையும் நிவாரணங்களையும் வழங்கும் வகையில் அரசு தனது இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருக்கின்றது. இது வரவேற்கத்தக்கது.
எனினும், இன்னும் மூன்று மாதங்களில் எதிர்நோக்கப்படுகின்ற பொதுத் தேர்தலில் மக்களைக் கவர்வதற்காக இந்த வரவு செலவுத் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கின்றதோ என்ற கேள்வி பல முனைகளில் எழுந்திருக்கின்றது. பல ஊடகங்கள் இந்த வினாவை எழுப்பியிருப்பதைக் காண முடிகின்றது.
நீதித்துறை மாற்றங்கள்
புதிய அரசு தனது 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் பல மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக இரவும் பகலும் அயராமல் செயற்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றார். இந்த 100 நாள் திட்டத்தின்படி ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான முக்கிய செயற்பாடுகளில் ஒன்றாக முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீண்டும் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டு, ஒரு நாள் பதவி வகித்ததன் பின்னர் அந்தப் பதவியில் இருந்து அவர் பணி ஓய்வு பெற்றிருக்கின்றார். புதிய பிரதம நீதியரசராக நீதியரசர் ஸ்ரீபவன் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
பிரதம நீதியரசர் விடயத்தில் முன்னைய அரசாங்கம் ஜனநாயக நடைமுறைகளையும், அதன் பெருமைகளையும் சிதைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க திவிநெகும சட்டம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் விருப்பத்திற்கமைவாக நடந்து கொள்ளத் தவறியதற்காக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு எதிரணிகள் அற்ற நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றின் விசாரணைகளின் அடிப்படையில் பதவியில் இருந்து தூக்கப்பட்டிருந்தார். நீதி தேவதையே நீதிகேட்டு வீதியில் நிற்கும் நிலை இதனால் அன்று உருவாகியிருந்தது.
நிதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவைப் பதவி நீக்கம் செய்து, தனக்கு விசுவாசமான – ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த மொஹான் பீரிஸை புதிய நீதியரசராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமித்திருந்தார். நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா ஜனநாயகத்திற்கு விரோதமான முறையிலேயே பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்றும், அவருக்குப் பதிலாக மொஹான் பீரிஸ் சட்டத்திற்கு விரோதமான முறையிலேயே பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டிருந்தார் என்றும் குறிப்பிட்டு, இவற்றை ஏற்றுக் கொள்ள முடியாதென தெரிவித்து, புதிய பிரதம நீதியரசராக ஷிராணி பண்டாரநாயக்காவை புதிய அரசாங்கம் நியமித்திருந்தது. ஆயினும் அந்தப் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவதற்கு அவர் விரும்பவில்லை. பணிஓய்வு பெற்று சென்றுள்ளார்.
மீறப்பட்டுள்ள சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகள்
புதிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள போதிலும், புரையோடிப் போயுள்ள இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்து புதிய அரசு உறுதியான நிலைப்பாடு எதனையும் இன்னும் வெளியிடவில்லை.
அறுபது வருடங்களுக்கு மேலாக ஊசிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, முன்னைய அரசாங்கம் இனவாதத்தைத் தூண்டிவிட்டு, சிறுபான்மை தேசிய இனத்தவராகிய தமிழ் மக்கள் தமக்குரிய ஜனநாயக ரீதியான அரசியல் உரிமைகளைக் கோருவது என்பது தேசத் துரோகம் என்று நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
இலங்கையை, ஜனநாயகப் பாரம்பரியங்களைப் பேணுகின்ற ஒரு நாடாக, பலரும் போற்றுகின்ற போதிலும், முன்னைய அரசாங்கம் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்டிருந்த அடக்குமுறைளும், யுத்தத்தின் மூலம் தோற்கடிக்கப்பட்ட பயங்கரவாதம் மீண்டும் உயிர்த்துவிடாமல் தடுப்பதற்குரிய தேசிய பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் என்ற போர்வையில் அந்த மக்களை இலக்கு வைத்து மேற்கொண்டிருந்த செயற்பாடுகளும் ஜனநாயகத்துக்கு முரணாகவே அமைந்திருந்தன. இந்தச் செயற்பாடுகள் ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதிப்பதற்கு சமனான வகையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் மோசமான மனித உரிமை மீறல்கள், மோசமான சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்களுக்கு மத்தியிலேயே யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டிருந்தார்கள். ஆயினும், அந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் சிலர் முன்னைய அரசாங்கத்தின் ஆத்ம நண்பர்களாக்கப்பட்டு, அவர்களுக்கு அரச பதவிகளும் சொகுசு வாழ்க்கையும் வழங்கப்பட்டிருந்தன. அதேவேளை, பாதுகாப்பும் பொதுமன்னிப்பும் வழங்கப்படும் என்று உத்தரவாதமளித்து, யுத்தம் முடிவடைந்த கையோடு இராணுவத்தினரிடம் சரணடையுமாறு கோரப்பட்டதையடுத்து, சரணடைந்தவர்களில் பலருக்கு என்ன நடந்தது, அவர்களை அரசாங்கம் எங்கு கொண்டு சென்றது, எங்கு வைத்துள்ளது என தெரியாமல் இருக்கின்றது. இது விடயம் குறித்து, அவர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது வெளிநாடுகளுக்குத் தப்பியோடியிருக்கலாம் என்று பொறுப்பற்ற வகையில் கதைகளைப் புனைந்திருந்ததே தவிர, பொறுப்புள்ள அரசு என்ற வகையில் முன்னைய அரசாங்கம் நடந்து கொள்ளவில்லை.
சரணடைந்தவர்கள் மற்றும் தேடிச் சென்று கைது செய்யப்பட்டவர்களில் பதினோராயிரத்துக்கும் மேற்பட்டவர்களை புனர்வாழ்வளித்து சமூகத்தில் இணைத்துள்ள போதிலும், பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் ஆகியவற்றின் அதிகாரப் பலத்தைப் பயன்படுத்தி, விடுதலைப்புலிகளுக்காகச் செயற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளை உரிய முறையில் நீதி விசாரணைக்கு உட்படுத்தவில்லை. குற்றம் சுமத்தப்படாமலும், வழக்கு தாக்கல் செய்யப்படாமலும் பத்து வருடங்கள், இருபது வருடங்கள் என அவர்கள் இன்னும் சிறைச்சாலைகளில் வாடுகின்றார்கள்.
இந்;த ஜனநாயக உரிமை மீறல்களுக்கு, சிதைக்கப்பட்டுள்ள இந்த ஜனநாயக விழுமியங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு புதிய அரசாங்கம் எடுக்கப் போகின்ற நடவடிக்கைகள் என்ன என்பது பெரிய கேள்விக்குறியாகியிருக்கின்றது.
பெரும்பான்மை இன மக்கள் சார்ந்த விடயங்களில் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்காக, துரித நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது போன்று இந்த விடயங்களிலும் அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பாக மாறி வருகின்றது.
சர்வாதிகாரத்தை நோக்கிச் சென்ற முன்னைய ஆட்சியை மாற்றுவதற்காக நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலை, எதிரணியில் இணைந்திருந்த அரசியல் கட்சிகளும், இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் பயன்படுத்தியிருந்தன. இந்த ஆட்சி மாற்றத்திற்குத் தமிழ் மக்களும், அவர்களுடன் முஸ்லிம் மக்களும் ஏகோபித்த ஆதரவை வழங்கியிருந்தார்கள். முன்யை ஆட்சியில் பங்காளிகளாக இணைந்து அமைச்சுப் பதவிகளை வகித்து, அந்த அரசாங்கத்தில் முஸ்லிம் மக்களுக்குப் பல நன்மைகளைப் பெற்றுக்கொடுத்திருந்த முஸ்லிம் அரசியல் கட்சிகள் இறுதி நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சகைவ் கைகழுவிவிட்டு. எதிரணியின் பொது வேட்பாளராகிய மைத்திரிபால சிறிசேன அணியைத் தழுவியிருந்தனர். ஆனால் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகவே, முன்னைய ஆட்சியின் ஜனநாயக விரோதப் போக்கினை எதிர்த்து வந்திருந்தார்கள். ஒரே வழியில் நின்று அவர்கள் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக மைத்திரிபால சிறிசேனாவை தேர்தலில் ஆதரித்து வாக்களித்திருந்தார்கள்.
எனவே, முன்னைய ஆட்சியில் நாட்டில் சீரழிக்கப்பட்ட ஜனநாயகத்திற்குப் புத்துயிரளிக்கும் செயற்பாட்டில், புதிய ஜனாதிபதியாகிய மைத்திரிபால சிறிசேனவும், புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், மீறப்பட்டுள்ள தங்களுடைய ஜனநாயக உரிமைகளை மீட்டுத் தருவதற்கு தாமதிக்காமல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள். ஆயினும் புதிய ஆட்சியில் தமது விருப்பம் நிறைவேற்றப்படுமா என்பது குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கின்றார்கள்.
சந்தேகங்கள்
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் முன்னைய அரசாங்கங்கள் பலவற்றுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. பல சிங்களத் தலைவர்களுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்;டன. ஆயினும் பேச்சுவார்த்தைகளும் சரி, செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் சரி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குரிய வழிமுறைகளை வகுக்கவில்லை. மாறாக பிரச்சினையை மேலும், மேலும் சிக்கலாக்கவே உதவியிருந்தன.
ஆயுதப் போராட்டம் ஒன்றின் ஊடாக அரசாங்கங்களுக்கு இராணுவ ரீதியாக பெரும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டபோது, யுத்தத்தை நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்துடன் கூடிய பேச்சுவார்த்தைகளும் வெற்றியளிக்கவில்லை. இறுதியில் முன்னைய ஆட்சியில் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்ததுடன் யுத்தம் முடிவுக்கு வந்தது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது, இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்காகக் கொடுக்கப்பட்ட இராணுவ அழுத்தமும் வெற்றிகரமாக இல்லாமற் செய்யப்பட்டது. ஆயினும் இனப்பிரச்சினையின் தாக்கம் தொடர்ந்தது. ஓர் அரசியல் தீர்வின்றி இனப்பிரச்சினை மேலும் சிக்கலாக்கப்பட்டது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்ற நிலைமையில் மாற்றம் ஏறு;பட்டு, தமிழ் மக்கள் தமது பாரம்பரிய நிலங்களில், தமது தாயகப் பிரதேசத்தில் குடியிருப்பதே கேள்விக்குறியாக்கப்படும் வகையில் காணிகள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டன. அபகரிக்கப்பட்டன.
ஆனால் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட மாகாணசபை நிர்வாக முறைமையே, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக நடைமுறையில் கொண்டு வரப்பட்ட ஓர் அரசியல் தீர்வாக அமைந்தது. இதுவும் ஓர் அரைகுறை தீர்வேயொழிய தமிழ் மக்களாலோ அல்லது தமிழ்த் தலைவர்களினாலோ மனம் ஒப்பி ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல.
இந்த மாகாண சபை முறைமையின் கீழ் வடமாகாணத்தில் நடைமுறைக்கு வந்துள்ள மாகாணசபையை உரிய முறையில் நிர்வகிப்பதற்கே வழியில்லாத நிலைமையையே முன்னைய அரசாங்கம் ஏற்படுத்தியிருந்தது. அதில் பல சிக்கல்கள். அந்த சிக்கல்களில் சிலவற்றை நீக்குவதற்குப் புதிய அரசு முன்வந்துள்ள போதிலும், 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் கிடைத்துள்ள தீர்வுக்கு அப்பால், இன்னும் கூடிய அதிகாரங்கள் கொண்டதாக ஆட்சிப் பலம் தமிழ் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக இருந்து வருகின்றது.
ஆனால் புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடனேயே இந்தியாவுக்குப் பறந்து சென்று பேச்சுக்கள் நடத்திய இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர 13க்கு அப்பால் செல்ல முடியாது என்ற வகையில் இந்தியாவுடன் பேச்சுக்கள் நடத்தி, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, இராணுவ பாதுகாப்பு உறவு தொடர்பில் பேரம் பேசி முடிவுகள் எட்டப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன.
முன்னைய அராசங்கம் யுத்தம் நடைபெற்ற காலம் தொட்டு, விடுதபை;புலிகளை என்ன விலை கொடுத்தாவது இல்லாமல் அழித்துவிட வேண்டும் என்ற தனது இராணுவ தேவைக்காக சீனாவிடம் உறவு கொண்டு இராணுவ தளபாடங்களைப் பெற்றிருந்தது. அந்த உறவு அத்துடன் நின்றுவிடவில்லை. இலங்கையின் வீதி அபிவிருத்தி, துறைமுக அபிவிருத்தி போன்ற பல்வேறு அபிவிருத்திகளில் உள்நாட்டில் ஆழமாகக் கால் பதித்ததையடுத்து. இந்தியா தனது பாதுகாப்பையும், பிராந்தியத்தில் தனது இருப்பையும் தக்க வைத்துக் கொள்வதற்காக இலங்கையில் ஓர் ஆட்சி மாற்றத்தை விரும்பியிருந்தது.
கடும் போக்கு கொண்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குப் பதிலாக மென்மையான போக்கு கொண்ட மைத்திரிபால சிறிசசேனாவை ஆட்சியில் அமர்த்துவதற்கான திட்டத்தை வரவேற்று, அதற்கு ஆதரவு வழங்கியிருந்தது. இந்தப் பின்னணியிலேயே இலங்கையின் ஓர் எல்லைக்கு அப்பால் செல்லாத வகையில் தேசிய பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணும் விடயத்தைக் கையளர்வதற்கான முயற்சிகளில் இலங்கை காய் நகர்த்தியிருப்பதாக தமிழ் ம்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது.
இனப்பிரச்சினைக்கு நிரந்தரமாக ஓர் அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதில் இலங்கையின் பெரும்பான்மை அரசியல் கட்சிகளாகிய ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் கடந்த காலங்களில் உளப்பூர்வமாக ஆர்வம் கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாகவே, இனப்பிரச்சினை இன்று கிளைவிட்டு பல பிரச்சினைகளின் கூட்டாக பல்கிப் பெருத்து பூதாகரமாகியிருக்கின்றது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அதிகார மோகமும், குடும்ப ஆதிக்க ஆசையும் கொண்ட ஆட்சிப் போக்கின் காரணமாக சீரழிக்கப்பட்டுள்ள ஜனநாயக விழுமியங்களை நிலைநாட்டுவதற்கு ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் என்ற வகையில் புதிய அரசாங்கத்தையும், புதிய ஆட்சி முறையையும் உருவாக்கியிருக்கின்றன.
இந்தப் புதிய அரசாங்கம் தனது 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டு மக்கள் குறிப்பாக பெரும்பான்மை மக்களாகிய சிங்கள மக்களின் பேராதரவைப் பெற்று அடுத்து வரப் போகின்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சவை முழுமையாக அரசியலில் ஓரங்கட்டுதவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன.
ஆனால், இந்த அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறுவதற்கு உறுதுணையாக இருந்த தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை உரிய முறையில் தீர்க்காமல், அரசியல் தீர்வுக்கான அவர்களுடைய எதிர்பார்ப்பை சிதைத்து, ஓர் அரைகுறை தீர்வை அவர்கள் மீது திணிப்பதற்கு முயற்சிக்குமேயானால், ஆட்சி மாற்றத்தின் மூலம் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் ஸ்திரத்தன்மை உடையதாக மாட்டாது. மாறாக பல வடிவங்களில் பிரச்சினைகள் தலையெடுத்து, புதிய அரசாங்கத்திற்குத் தீராத தலையிடியையும் தொல்லைகளையும் கொடுப்பதாகவே வழிசமைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே, புதிய அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் நேசத்தையும் அரவணைப்பையும் கருத்திற் கொண்டு தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக் காண்பதற்கான வழிமுறைகள் குறித்து சிந்தித்துச் செயலாற்றுவதே ஆரோக்கியமானதாக இருக்கும்.
- செல்வரட்ணம் சிறிதரன் -
நன்றி – வீரகேசரி