சுதந்திர தின வைபவத்தில் ஒரு வித்தியாசமான உரை

நாட்டின் 67-வது சுதந்திர தின நிகழ்வு நேற்று முன்தினம் 4-ந் திகதி நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரதின உரையை ஆற்றியிருந்தார்.
மகிந்த ராஜபக்ச ஆற்றவேண்டிய உரையாக இது இருந்த போதிலும் ஆண்டவனின் கட்டளை மைத்திரியை உரையாற்ற வைத்தது.
கடந்த காலங்களில் நாட்டின் சுதந்திரதின நிகழ்வுகளில் தலைவர்கள் ஆற்றிய உரைகள் எப்படி அமைந்திருந்தன என்பதற்குச் சான்றாதாரங்கள் உண்டு. சிங்கள மக்கள் விருட்சம் எனில் சிறுபான்மை மக்கள் அதில் படரும் கொடிகள் என்றார் ஜே.ஆர்.
இந்த நாடு பெளத்த சிங்களவர்களுக்கு உரியது என்பார் மகிந்த. கூடவே நெஞ்சை நிமிர்த்தி சர்வதேசத்தை, ஐ.நா சபையை அதட்டுவது போலவும் அவரின் பேச்சு இருக்கும்.
உண்மைகள் ஒருபுறமாக இருக்க, மகிந்தவின் சுதந்திர தின உரை சர்வாதிகாரம் கொண்ட கர்வத்தைக் காட்டுவதாக அமையும். ஆனால் 67-வது சுதந்திர தின நிகழ்வு மிகவும் எளிமையாக நடந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றினார். அவரின் உரை உள்ளார்ந்தமான கவலையை வெளிப்படுத்தி நின்றது.
அதாவது வடக்கு கிழக்கு மக்களையும் தெற்கு மக்களையும் ஒன்றிணைக்க முடியவில்லை என்பதே அவர் வெளியிட்ட கவலை.
66 ஆண்டுகளாக உணரப்படாத அல்லது வெளியில் சொல்லாமல் ஆட்சித் தலைவர்கள் மறைப்புச் செய்த ஒரு பெரும் உண்மையை 67-வது வருடத்தில் ஜனாதிபதி மைத்திரி வெளிப்படுத்தியது சுதந்திரதின நிகழ்வை அர்த்தமுள்ளதாக்கியது எனலாம்.
உண்மையான சுதந்திரம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமல் ஆட்சியாளர்கள் சுதந்திரதின நிகழ்வுகளை அனுஸ்டித்து வந்துள்ளனர். எனினும் இலங்கைத் திருநாட்டின் சுதந்திரதினம் என்பது சிங்கள மக்களுக்கு சொந்தமானதாகவே கருதப்பட்டது.
நாட்டின் சுதந்திரதினத்தை அனைத்து மக்களும் உணர்வுபூர்வமாகக் கொண்டாட வேண்டும் என்று எவரும் நினைத்திலர். ஆனால் அந்த நினைப்பு ஜனாதிபதி மைத்திரியிடம் இருந்ததென்பதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
ஏனெனில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா சுதந்திர தின நிகழ்வில் ஆற்றிய உரை வித்தியாசமானது. ஒரு சுதந்திரதின நிகழ்வில் வடக்கு கிழக்கு மக்களையும் தென்பகுதி மக்களையும் இணைக்க முடியவில்லை என்று கூறியதற்குள் சிறுபான்மை இனங்களின் அடிப்படைப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்ற உண்மை உறுதிசெய்யப்படுகின்றது.
அதேநேரம் நாட்டின் சுதந்திர தின நிகழ்வென்பது இனத்துவ ஒற்றுமையோடு நடக்கவில்லை என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒட்டு மொத்தத்தில் 67-வது சுதந்திரதின நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரையின் அடிப்படை நாடு சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் கடந்த போதிலும் இன ஒற்றுமையை ஏற்படுத்த முடியவில்லை. எனவே மூவின மக்களும் ஒற்றுமைப்பட வேண்டுமென்பதாகும்.
ஆக, கடந்த காலங்களில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில் ஆட்சித் தலைவர்கள் பேரினவாத சிந்தனையை தூண்டுவதாக தமது உரைகளை அமைத்துக் கொண்டனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மட்டும் இன ஒற்றுமை ஏற்படுத்தப்படவில்லை என்ற உண்மையை முதல் தடவையாக சிங்கள மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் சாட்சியப்படுத்தியுள்ளார்.
அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சிப் புலம் திருப்தியாக அமையும் என்பதுடன், மைத்திரி ஆற்றிய உரை தென்பகுதி மக்களின் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பலாம்.
நாட்டில் பாரிய அபிவிருத்தி ஏற்படாவிட்டாலும் மக்களின் மனங்களில் இனக் குரோதம் ஏற்படாமல் இருப்பது அவசியம்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila