ரிறீவர் கிராண்ட் - தமிழில் குளோபல் தமிழ் செய்திகள்:-
நயவஞ்சகம் என்ற பெயர்ச்சொல்லானது,
1948 ஆம் ஆண்டு இலங்கையை பிரித்தானியா சிங்களவர்களிடம் ஒப்படைத்த பிற்பாடு
வந்த அடுத்தடுத்த சிங்கள அரசாங்கங்களினதும் சருவதேச சமூகத்தினதும்
நடவடிக்கைகளினை விபரிப்பதற்கு தமிழர்கள் பொதுவாக பயன்படுத்தும் சொல்லாக
உள்ளது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக இலங்கையில் நடந்தேறும் நயவஞ்சக
வரலாற்றைக் குறிப்பிடுவதற்கு இது மிகவும் பொருத்தமான சொல்லாகும்.
சுதந்திரத்திற்கான கூட்டு முயற்சியில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் தொடர்பாக 1920 இல் ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டினை சிங்களப் பேரினவாதிகள் மீறினார்கள். அதிலிருந்து தொடர்ச்சியாக தமிழர்கள் ஏமாற்றப்பட்டார்கள். 1948 இல் பிரித்தானியர்கள் இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் அவர்களால் வரையப்பட்ட அரசியலமைப்பின் மூலமாக தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என உறுதியளித்த காலம் தொட்டு இன்று வரை தமிழர்கள் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
புதிய சனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவின் உறுதியளிப்பிற்கும் அவரது செயல்களிற்கும் இடையேயான முரண் தன்மையை விபரிக்க மூத்தவரான தமிழ் அரசியல்வாதி விக்னேஸ்வரன் பயன்படுத்திய இந்த வார்த்தைப் பிரயோகத்தில் இற்றை வரையான இலங்கையின் வரலாற்றைப் பார்க்கலாம்.
வடக்கில் திருடி அபகரிக்கப்பட்ட தமிழர்களின் நிலத்தை விடுவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சிவில் விடையங்களில் இராணுவப் பிரசன்னங்கள் அகற்றப்படுவதாகவும் சொல்லப்படுவது பற்றியதான உண்மை நிலைப்பாட்டை விபரிக்கும் போதே “ நான் எங்களை ஏமாற்றுவதற்கு சதி செய்யப்படுவதை உணர்ந்தேன்” என விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
சருவதேச சமூகத்தினை சமாதானப்படுத்தி அமெரிக்க மற்றும் இந்திய ஆதரவுடனான ஆட்சி மாற்றத்தினை அனுமதித்து கொடூரமான, ஊழல் நிறைந்த ராஜபக்ச அரசாங்கத்தை விட தாம் அக்கறையும் பரிவும் உடையவர்கள் என்ற தோன்றத்தை ஏற்படுத்தி தம்மீதான நம்பகத்தன்மையை மேலும் ஏற்படுத்த விளைய வடிவமைக்கப்பட்ட வஞ்சகப் பொய்களே இந்த புதிய அரசாங்கத்தின் உறுதியளிப்புக்கள் என இந்த வார ஊடக அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.
தமிழர்களின் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தின் பிரசன்னம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக வோசிங்டனில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் வைத்து இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சரான மங்கள சமரவீர தெரிவித்தார். புகைப்பட ஆதாரத்துடன் கூடிய பல அறிக்கைகளின் படி, பாடசாலைகளையும், கோயில்களில் நடைபெறும் வழிபாடுகளையும் கூட இராணுவத்தினர் கண்காணித்து வருகின்றமை தெளிவாகின்றது.
தமிழ்ப் பாடசாலை ஒன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றிற்கு பிரதமவிருந்தினராக, யுத்தக் குற்றச்சாட்டுள்ளவரும் 2009 இல் போரின் முடிவில் 70,000 அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்ததில் பங்குவகிப்பவராக கருதப்படுவதால் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு விசா மறுக்கப்பட்டவருமான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் சென்றுள்ளமை ஆத்திரமூட்டும் வகையில் இருக்கின்றது.
இராணுவத்தின் தேவைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட தமிழர்களின் நிலங்கள் மீள கையளிக்கப்படும் என புதிய சனாதிபதி உலகிற்கு அறிவித்தமை நற்பெயரை ஏற்படுத்தும் மற்றுமொரு சூழ்ச்சியாக அமைகின்றது. 1000 ஏக்கர் நிலம் மீளக் கையளிக்கப்பட உள்ளதாக சொல்லப்பட்டது. மீளக்கையளிக்கப்படப் போவதாக கூறப்படும் நிலங்கள் தமிழர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட அதே காணிகள் அல்ல எனவும் அவற்றில் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் 18 விடுதிகள் உள்ளன எனவும் ஏற்கனவே தெரியவந்துள்ளது. அவரவர்களிற்கு சொந்தமான அதே நிலத்தை கையளிக்க வேண்டுமாயின் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் விடுதிகள் எல்லாம் இடத்தழிக்கப்பட வேண்டியிருக்கும்.
இது முந்தைய சனாதிபதியும் உலகத்தின் கவனம் இலங்கையின் பக்கம் இருந்த போது, அதாவது, 2013 ஆம் ஆண்டு கொழும்பில் பொதுநலவாய கூட்டத்திற்கு சற்று முன்னர் முன், தற்போது குறிப்பிடப்படும் அதே நிலப்பகுதியை மீளக்கையளிக்கப் போவதாக குறிப்பிட்டிருந்தார்.
தான் சரியான திசையில் நகருவதாக உலகிற்கு காட்டும் நோக்கிலான பிரச்சாரத் தந்திரம் அதுவென அது பின்னர் நோக்கப்பட்டது. புதிய சனாதிபதியின் இந்த சமீபத்திய அறிவிப்பும் அதே தன்மையிலானது. அமெரிக்க இராஜாங்க செயலாளரான ஜோன் கெரி என்பவரை சிறிசேனவின் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பதற்கு சற்று முன்னரே, ராஜபக்ச முன்னர் குறிப்பிட்ட அதே நிலம் மீளக்கையளிக்கப்படப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சனாதிபதியும் தனக்கு முந்தையவர் கையாண்ட அதே பிரச்சாரத் தந்திரத்தினையே பயன்படுத்துகின்றார்.
இவைகள் எல்லாவற்றையும் முன்னரே தமிழர்கள் பார்த்து விட்டதால் அவர்கள் இந்த ஏமாற்றுத்தனங்களை எல்லாம் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். இவற்றை மீண்டும் ஒரு நயவஞ்சகம் என குறிப்பிடும் வட மாகாண சபை முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அவர்கள், இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே என தீர்மானம் நிறைவேற்றி அதனை விசாரிக்கும் படி ஐக்கிய நாடுகள் சபைக்கு அறைகூவல் விடுத்துள்ளார். தற்போதைய சூழலில் இந்த இனப்படுகொலை தீர்மானமானது புதிய அரசாங்கத்தையும் அதன் முக்கிய வெளிநாட்டு ஆதரவுகளான அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளையும் ஆத்திரமூட்டும் என்று கருதப்படுகிறது.
ராஜபக்சவை தோற்கடித்த சிறிசேனவையும் அரசாங்கத்தின் உறுதியளிப்புகளையும் ஏற்று தமிழர்கள் அமைதியாக இருந்திட வேண்டும் எனவே உலகம் நிச்சயமாக விரும்பும். சிறிசேனவின் பழைய பக்கங்களை மறக்கச் செய்து அவரை தமிழ் மக்களின் மனக்குறைகளை செவி சாய்க்க தயாராக உள்ள ஒரு சமரசப் போக்கு உடையவர் என காட்டிக்கொள்வதற்காக உள்நாட்டிலும் சருவதேசத்திலும் தீவிர பிரச்சாரங்கள் தற்போது நடந்து வருகிறது.
உண்மையில், ராஜபக்சவின் அமைச்சரவையில் 10 ஆண்டுகளாக பதவி வகித்தும், போர்க்குற்றவாளியாகவும் சிறிசேனா இருந்ததற்கும் அப்பால், சிறிசேனா என்பவர் தமிழர்களை பேரினவாத அடக்குமுறைக்குள் வைத்துக் கொண்டு அவர்களின் மரியாதை மற்றும் கவுரவம் போன்றவற்றை மறுதலிக்கும் பேரினவாதக் கருத்தியலை ஆழ வரிந்து வைத்திருக்கும் ஒரு பிறவிச் சிங்களப் பேரினவாதியாவார். இந்த நாடு சிங்களவர்களிற்கு மட்டுமே சொந்தமானது என்றவாறே இவர் முனைவார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சி புரிந்தால் என்ன மைத்திரிபால சிறிசேனா ஆட்சி புரிந்தால் என்ன இலங்கையில் ஆழ வேரூன்றி இருக்கும் சிங்கள மேலாதிக்கமே இலங்கை அரசாங்கத்தை இயக்கும் உந்து சக்தியாக உள்ளது. இதுவே முரண்பாட்டின் மூல காரணம் ஆகிறது.
இந்த ஆட்சி மாற்றத்தின் பின்னால் இருந்த புறச்சக்திகள் தொடர்பான அக்கறை இங்கே குறைவாகவே இருக்கும். இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் எப்போதும் எந்தவொரு நாட்டுடனும் தமது சொந்த பூகோள-அரசியல் நலன்களிற்கு ஏற்பவே இணங்கும். குறிப்பாக, உலகின் இரு பெரும் வல்லரசுகளான அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே இந்து சமுத்திரத்தின் மத்தியில் மிகவும் கேந்திரமாக இருக்கும் இலங்கையிலும் அதனடிப்படையிலேயே அதன் அக்கறை இருக்கும்.
இந்த சூழலில், இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் யுத்தக் குற்ற விசாரணை வெளியீடு ஆறு மாதங்களிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது சீனாவின் கைகளிற்குள் தானாக சென்ற ஒருவரிற்கு பதிலாக தனக்கு உவப்பானவரும் தமது ஆளுகைக்குள் இருக்கக் கூடியவருமான ஒருவரை ஆட்சியில் அழகாக வைக்கும் வோசிங்டன் மற்றும் புதுடில்லியினால் கவனமாக திட்டமிடப்பட்ட ஒன்றாகும்.
இலங்கை மீண்டும் அமெரிக்காவின் வழிகாட்டளிற்குள் வந்தவுடன், அமெரிக்க ஆதரவு போர்க்குற்ற தீர்ப்பு குறித்து ஏதாவது செய்ய வேண்டி இருந்தது. அதனால் போர்க்குற்ற தீர்மானம் தற்காலிகமாக தள்ளிப்போடப்பட்டுள்ளது. ஆதலால், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் பங்குனி மாதத்தில் வெளியிடப்போவதாக பல தடவை கூறி வந்த போர்க்குற்ற அறிக்கையை சடுதியாக புரட்டாதி மாதத்திற்கு தள்ளிப்போட்டுள்ளது.
ஒத்திவைப்பிற்கான காரணமாக சொல்லப்படுவது என்னவெனில், ஆதாரங்களை சேகரிப்பதற்கு விசாரணையாளர்களிற்கு வழங்கப்படும் மேலதிக நேரம் இதுவெனவும், தமது முந்தைய ஆட்சியாளரைப் போல் அல்லாது இந்த விசாரணைகளிற்கு ஒத்துழைப்பதற்கு தயார்ப்படுத்த புதிய அரசாங்கத்திற்கு கொடுக்கும் காலம் இது போன்றனவாகும்.
கால அவகாசத்தை கோரிய இந்த புதிய அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை எந்தவொரு நிபந்தனையையும் இன்னும் விதிக்கவில்லை. அதாவது, போர்க்குற்ற சாட்சியங்கள், போர்க்குற்றத்தால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களின் குடும்பங்களிடம் நேர்காணல்களை நடாத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்ற எல்லாவற்றிலும் அடிப்படையான நிபந்தனையைக் கூட விதிக்கவில்லை.
ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமைகளிற்கான உயர்ஸ்தானிகரான அல் குசைன் என்பவர் பங்குனி மாதத்தில் போர்க்குற்ற அறிக்கை வெளியிடப்படும் என பல மாதங்களாக வலியுறுத்தி கூறி வந்தார். சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றே ஏற்றுக்கொள்ளக் கூடியதொன்று என அவர் மேலும் தெளிவுபடுத்தியும் இருந்தார். ஆனால், அவர் சடுதியாக இதிலிருந்து பின்வாங்கி, இவர் குறிப்பிட்ட விசாரணையை உறுதியாக நிராகரிக்கும் அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசத்தை வழங்குவதாக கூறியுள்ளார்.
உயர்ஸ்தானிகரின் இந்த அறிவிப்பிற்கு இரண்டு நாட்களின் பிற்பாடு, சிறிசேனவின் புதிய நீதி அமைச்சரான விஜயதாச ராஜபக்ச என்பவர் சருவதேச விசாரணைக்கு எந்த தேவையும் இல்லை என கூறியதன் மூலம் புதிய அரசாங்கத்தின் எண்ணத்தை மீண்டும் எடுத்துக் கூறியமை வியப்பானதொன்றல்லவே.
தற்போது, இந்த ஒத்திவைப்பானது இந்த ஆட்சி மாற்றத்திற்கு பின்னால் இருந்தவர்களால் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டுள்ளது. அடுத்ததாக, இலங்கையானது சமாதானம் மற்றும் அமைதி நிலவும் நாடு என உலகத்திற்கு சொல்வார்கள். இவ்வாறாக, திரை மறைவில் சதித்திட்டங்கள் தீட்டப்படுகின்றன. தமிழர்கள் தொடர்ந்தும் இன்னமும் வேகமாக வஞ்சிக்கப்படுகிறார்கள்.