விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளா? இல்லையா? நெதர்லாந்தின் உயர்நீதிமன்றத்தீர்ப்பு விரைவில்!

கடந்த 26.04.2010 இல் கைதுசெய்யப்பட்டு, முதல் தீர்ப்பின் முழுத்தண்டனையையும் அனுபவித்து விடுதலைபெற்ற 5 முக்கிய தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களிற்கும் எதிரான வழக்கானது உயர்நீதிமன்றத்தில் நீண்டகாலமாக தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதன் இறுதிவாதாட்டமும் செயற்பாட்டாளர்களின் இறுதிவார்த்தைகளும் எதிர்வரும் 16.02.2015 திங்கள் காலை 9.30 மணிக்கு டென் காக் உயர்நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த உயர்நீதிமன்ற விசாரணைகளின்போது நெதர்லாந்துத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளராகச் செயற்பட்டவரானவர் தான் தமிழீழவிடுதலைப் புலிகளின் நெதர்லாந்துக்கிளைப் பொறுப்பாளர் என்பதை அப்போதைய தனது சட்டத்தரணிகளின் எதிர்ப்பின் மத்தியில் தானாக முன்வந்து நீதிமன்றில் கூறியிருந்தார். இதனால், இவ்வழக்கின் விசாரணைகளில் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கியது. இதன்பின் இவ்வழக்கின் முக்கிய விசாரணைகள் நடைபெறமுன்பே, இவரின் அப்போதைய Bohler சட்டத்தரணிகளான Tamara, Pestman என்பவர்கள் திடீரென இவ்வழக்கிலிருந்து விலகிக்கொண்டனர். இதனால் இவ்வழக்கின் விசாரணைகளானது மேலும் தாமதமாகியது. இவரின் முதன்மை சட்டத்தரணியான Victor Koppe என்பவர் கம்போடியாவில் பிறிதொரு வழக்கில் வாதாடுவதால், அவருக்கு நேரமின்மையால் இவருக்குத் துணையாகசெயற்பட்ட மேலே குறிப்பிட்ட Tamara என்பவரே சட்டத்தரணியாக இவ்வழக்கை தொடர்ந்து நடாத்தி பின்பு திடீரென விலகியவராவார்.
இவ்வழக்கின் முக்கியமான விசாரணைகள், வாதாட்டங்கள் கடந்தஆண்டு 2013 ஓகஸ்ட் மாதம் நிறைவடைந்ததிருந்தது. ஆனால், இத்தீர்ப்பை த.வி.புலிகளிற்கெதிரான தடைவழக்கின் லக்சம்போர்க் தீர்ப்பு வரும்வரைக்கும் பிற்போடுமாறு அனைத்து சட்டத்தரணிகளும் வாதாடியிருந்தனர். ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளின் நெதர்லாந்துக்கிளைப் பொறுப்பாளரானவர், தான் இவ்வழக்கின் விசாரணைகளிற்கு முழுஒத்துழைப்பும் தந்திருப்பதால் லக்சம்பேர்க் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்க்காமல் இவ்வழக்கின் தீர்ப்பை நெதர்லாந்து நீதிமன்றமே கூறுமாறு நீதிபதிகளைக் கேட்டிருந்தார். இருப்பினும், லக்சம்பேர்க் தீர்ப்பானது வரும்வரைக்கும் நெதர்லாந்தின் தீர்ப்பானது கடந்தவருடம் பின் போடப்பட்டது.
லக்சம்பேர்க்கின் முதல் தீர்ப்பானது வெளியாகிய இன்றைய நிலையில், அத்தீர்ப்பில் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்பதுபற்றி ஒரு தெளிவாக குறிப்பிடவில்லை என்பதாலும் அவ்வழக்கிற்கும் நெதர்லாந்து வழக்கிற்கும் நேரடிச்சம்பந்தம் இல்லை என்றும் நெதர்லாந்தின் அரசதரப்பினர் டென் காக் நீதிமன்றில் வாதாடியிருந்தனர். அத்துடன் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளா இல்லையா என்பது குறித்து தங்களிற்கு (அரசதரப்பு) அக்கறை இல்லையென்றும் அதனால் இக்குற்றச்சாட்டைத் தவிர்த்து பிறகுற்றச்சாட்டுகளிற்கு நீதிமன்றம் தீர்ப்பபுக்கூறுவதற்காக குற்றம்சாட்டப்பட்ட இத்தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களின் அனைத்துச் சட்டத்தரணிகளுடனும் ஒரு உடன்பாட்டை அடைவதற்கு முயன்றனர். இதற்கு அனைத்து சட்டத்தரணிகளும் ஓத்துழைத்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட த.வி.புலிகளின் நெதர்லாந்துக்கிளைப் பொறுப்பாளர் மட்டும் ஒத்துழைக்க மறுத்திருந்தார். இவர் ஒத்துழைக்காததால், விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளா -இல்லையா என்பதில் தங்களிற்கு அக்கறை இல்லையென்றும் இதனால் இக்குற்றச்சாட்டிற்கு தீர்ப்புக்கூறுவதை தவிர்க்குமாறும் அரசதரப்புடன் இணைந்து வாதாடுவதற்கு தயாராகவிருந்த அனைத்து சட்டத்தரணிகளும் தங்கள் வாதாட்டத்தை கைவிட்டிருந்தனர்.

தனது சட்டத்தரணிக்கு ஒத்துழைக்க மறுத்த இக்கிளையின் பொறுப்பாளரானவர் தனது வேண்டுகோளில், த.வி.புலிகள் பயங்கரவாதிகளோ அல்லது குற்றவியல் அமைப்போ இல்லையென்றும் புலிகள் தமிழ்மக்களின் ஆதரவுபெற்ற ஒரு விடுதலை அமைப்பு என்றும் இலங்கையில் தமிழ்மக்கள் சிங்களஅரசின் அடக்குமுறைக்குள்ளும் இனப்படுகொலைக்குள்ளும் வாழ்ந்தார்கள் என்றும் இதற்காகவே த.வி.புலிகளின் தலைமையில் ஆயுதப்போராட்டம் நடந்தது என்றும் தனது விசாரணைகளில் எடுத்துரைத்து இதற்காகவே தானாக முன்வந்து இவ்வழக்கிற்கு தங்கள் செயற்பாடுகள்பற்றி ஒத்துழைத்ததாகவும் கூறினார். இதனால், நெதர்லாந்தின் இவ்உயர்நீதிமன்றமானது விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளா இல்லையா என்பதுபற்றியும் ஐரோப்பிய பயங்கரவாத தடைப்பட்டியலில் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்த்தது சரியா என்று தனது தீர்ப்பில் கூறவேண்டும் என்றும் நெதர்லாந்தில் நாங்கள் கட்டாயப்படுத்தி நிதிசேகரிக்கவில்லை எனவும் தடைப்பட்டியலில் அமைப்பு இடப்பட்டதால்தான் மக்கள் பயத்தின் அடிப்படையில் பொய்ச்சாட்சி கூறியிருக்கின்றனர் எனவும் இவ்வழக்கின் நீதியாணையாளரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அத்துடன் நிரந்தர மக்கள் தீர்ப்பாயமானது 2013 இல் யேர்மனியில் வெளியிட்ட அறிக்கையான “Peoples Tribunal on Sri lanka” மற்றும் அண்மையில் Phil miller என்பவரால் வெளியிடப்பட்ட “Britan’s Dirty War aganist the Tamil people” என்ற அறிக்கையும் இவ்விசாரணைகளில் சேர்த்துக்கொள்ளுமாறு, த.வி.புலிகளின் நெதர்லாந்துக் கிளைப்பொறுப்பாளரால் இந்நீதிபதிகளிடம் ஒப்படைக்கப்ட்டது. இதனை விசாரணையில் சேர்க்கக்கூடாது என்று 26.01.2015 திங்களன்று அரசதரப்பு வாதாடியிருந்தாலும் இவ்வறிக்கைகளையும் விசாரணைக்குள் சேர்ப்பதாகவும் இதுபற்றிய கருத்துக்களை எதிர்வரும் 16.02.2015 திங்கள் அன்று அரசதரப்பு முன்வைக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதனால் இவ்விரண்டு அறிக்கைகள் பற்றிய விவாதமும் குற்றம்சாட்டப்பட்ட செயற்பாட்டாளர்களின் இறுதிவார்த்தைகளும் எதிர்வரும் 16.02.2015 திங்கள் காலை 9.30 மணிக்கு டென் காக் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
எனவே, மக்களின் ஆதரவுபெற்ற ஒரு அமைப்பின் இவ் முக்கிய வழக்கின் இவ்முக்கிய நிகழ்வில் இங்குவாழும் தமிழ்மக்கள் பார்வையாளராக பங்கேற்பது முக்கியமானதாகும்.
பார்வையாளராக வருபவர்களின் அடையாளஅட்டைகள் பார்வையிடப்படுவதோ அல்லது அவர்களின் பெயர்கள் பதிவுசெய்யப்படுவதோ இல்லை என்பதையும் இத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவ்வழக்கு நடைபெறும் முகவரி:
Prins Clauslaan 60, 2595 AJ Den Haag (2ம் மாடி, பு1 நீதிமன்றம்)
பிரதான தொடரூந்து நிலையத்திற்கு Prins Clauslaan 60, 2595 AJ Den Haag அருகில்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila