ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற இலங்கை மனித உரிமை மீறல் விவகாரம் குறித்த விசாரணை அறிக்கை இம்முறை கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதால் இலங்கையிலிருந்து அமைச்சர்கள் மட்ட தூதுக்குழு கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒருவேளை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படாவிடினும் இலங்கையின் நிலைப்பாட்டை அறிவிக்கும் நோக்கில் உயர்மட்ட பங்கேற்பு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் ஜெனிவாவில் அமைந்துள்ள இலங்கை வதிவிடப் பிரதிநிதி அலுவலகத்தின் அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. அல்லது உயர் மட்ட அதிகாரிகள் குழுவினர் கலந்துகொள்ளலாம். எதிர்வரும் மார்ச் மாதம் 25 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை மனித உரிமை மீறல் குறித்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு ஏற்பாடாகியுள்ளது.எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதியிலிருந்து 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 28 ஆவது கூட்டத்தொடரிலேயே மார்ச் மாதம் 25ஆம் திகதி இலங்கை விசாரணை குறித்த அறிக்கை பேரவைக்கு சமர்ப்பிக்கப்படுவதற்கு ஏற்பாடாகியுள்ளது. ஆனால், இலங்கை குறித்த அறிக்கையை மார்ச் மாதம் சமர்ப்பிக்காமல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும் மனித உரிமைப் பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுப்பதற்கு இராஜதந்திர காய்நகர்த்தல்கள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு இந்த அறிக்கையை தள்ளிப்போட முடியாது என்றும் வேண்டுமெனின் அறிக்கையின் அழுத்தத்தை குறைத்து நீர்த்துப்போன அறிக்கைய ஒன்றை சமர்ப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது. காரணம் கடந்த 2014 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான பிரேரணை ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டபோது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வாய்மூல அறிக்கை 27 ஆவது கூட்டத்தொடரிலும் இறுதி அறிக்கை 28 ஆவது கூட்டத் தொடரிலும் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. அதன்படி தற்போது இலங்கை விவகாரம் குறித்த விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைப் பேரவையின் 27 ஆவது கூட்டத் தொடரில் வாய்மூல அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. எனவே மார்ச் மாதம் 25 ஆம் திகதி நீர்த்துப்போகச் செய்யப்பட்ட அறிக்கையாவது முன்வைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனால் இந்த அறிக்கை மனித உரிமைப் பேரவைக்கு சமர்ப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. |
ஜெனிவா கூட்டத்தொடரில் நீர்த்துப் போன அறிக்கை?
Add Comments