தென் ஆபிரிக்காவை பின்பற்றப் போவதில்லை என இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். தென் ஆபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முறைமையை முழுமையாக இலங்கை பின்பற்றாது எனவும், அதனை உதாரணமாகக் கொண்டு உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்மட்ட தென் ஆபிரிக்கப் பிரதிநிதிகள் எதிர்வரும் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தென் ஆபிரிக்கா செய்த விடயங்களை நாம் செய்யப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென் ஆபிரிக்காவிடமிருந்து கற்றுக்கொண்டு நிபுணர்களைக் கொண்டு முறைமை ஒன்று உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமை நிலைமைகளை மாற்றத்தை ஏற்படுத்த புதிய அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை சில நாடுகள் பாராட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான், இந்தியா போன்ற நாடுகள் இலங்கையின் நிலைமைகளை பாராட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை காலம் தாழ்த்துவதற்கு சந்தர்ப்பம் கிட்டியமை மிகப் பெரிய ராஜதந்திர வெற்றியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.