இலங்கையில் நடந்தது இனஅழிப்பே: வடமாகாணசபை பிரேரணை

இலங்கையின் இறுதிப்போர் காட்சி (ஆவணப்படம்)
இலங்கையின் இறுதிப்போர் காட்சி (ஆவணப்படம்)
இலங்கையின் வடமாகாணசபையில் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டு இழுபறி நிலையில் இருந்துவந்த இலங்கையில் நடைபெற்றது இனஅழிப்பே என்கிற பிரேரணை செவ்வாயன்று முதலமைச்சர் விக்னேஸ்வரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணையை, இனப்படுகொலையில் இருந்து தமிழ் மக்களைக் காப்பதற்கு சர்வதேச பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற தலைப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கடந்த ஆண்டு சபையில் சமர்ப்பித்திருந்தார்.
அப்போது, அந்தக் குற்றச்சாட்டுக்களுக்குப் போதிய ஆதாரங்கள் கிடையாது, அதனை சபையில் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் இதுவல்ல என்ற வகையில் காரணங்கள் கூறப்பட்டிருந்தது. அதனையொட்டி கடும் வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்று அந்தப் பிரேரரணை சமர்ப்பிக்கப்படாமலே இருந்துவந்தது.
இந்தப் பின்னணியில் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையே என தெரிவித்து, அந்தப் பிரேரணையை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் ஒப்புதலுடன் இன்று சபையில் சமர்ப்பித்திருந்தார்.
இந்தப் பிரேரணையை சபையில் சமர்ப்பித்த முதலமைச்சர் அது குறித்து தமிழில் விடேச அறிக்கையொன்றை வாசித்ததுடன், நீண்ட விளக்கம் ஒன்றை ஆங்கில மொழியில் வழங்கினார்.
பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் 30 உறுப்பினர்களும் எழுந்து நின்று அதனை வழிமொழிந்தனர். அதன்பின்னர் சபையில் நிறைவேற்றப்பட்டது.
சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தமது கட்சியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த பகுதியை நீக்கினால் பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்படும் என தெரிவித்தார். ஆயினும் அந்த விடயத்தை நீக்குவதற்கு மறுத்து, ஈபிடிபி என்ற கட்சியின் பெயர் மாத்திரம் நீக்கப்பட்டதையடுத்து, அவரும் பிரேரணையை ஆதரித்திருந்தார்.
வடமாகாண முதல்வர் இந்த பிரேரணையை சமர்ப்பித்தார்
வடமாகாண முதல்வர் இந்த பிரேரணையை சமர்ப்பித்தார்
சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்; ஐநா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான அறிக்கை திட்டமிட்டபடி வரும் மார்ச் மாதம் ஐநா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையே என்பதால் அந்த அறிக்கை பின்போடப்படக் கூடாது என்பதை இந்தப் பிரேரணை வலியுறுத்தியுள்ளது.
"இந்தப் பிரேரணை உண்மையை உலகிற்கு உணர்த்தும் பிரேரணை; உள்நாட்டு மக்களின் உன்மத்தங்களால் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை உலகத்திற்கு எடுத்துரைக்கும் பிரேரணை" என இந்தப் பிரேரணை பற்றி முதலமைச்சர் விக்னேஸ்வரன் சபையில் தெரிவித்துள்ளார்.
"கடந்த 1972ம் ஆண்டின் அரசியல் யாப்பினால் தமிழ் மக்களை நிர்க்கதிக்குள்ளாக்கினார்கள் சிங்கள அரசியல் வாதிகள். இதனை சிங்கள மக்களுக்கு எடுத்துரைக்கும் ஆவணமாகவே இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்துள்ளேன். இன்றைய சூழ்நிலையில் இராணுவ முகாம்கள் அப்புறப்படுத்தப் படாவிடில், ஜெனீவாத் தீர்மானம் உரிய காலத்தில் உண்மையை உரைக்காவிடில் எமது தமிழ் மக்களின் பாடு எவ்வாறு அமையப் போகின்றது என்பதைக் கட்டியம் கூறும் கருத்து மிகுந்த ஆவணமாகவே இந்தப் பிரேரணையை இந்த மதிப்புசால் சபை முன்னே பிரேரிக்கின்றேன். இதை இன்று இங்கு உங்கள் முன்னிலையில் பிரேரித்து அது ஏற்கப்படாது விட்டால் நாங்கள் இராணுவ கெடுபிடிகளுக்கு எமது வாழ்நாளெல்லாம் முகம் கொடுக்க நேரிடும். நடந்தது பிழையென்ற மனப்பக்குவத்தை எமது சகோதர சிங்கள அரசியல்வாதிகளின் மனதில் விதைக்கவே இதைக் கொண்டுவந்துள்ளேன்", என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் சபையில் விளக்கமளித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila