தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இனியாவது பதியப்படுமா? செல்வரட்னம் சிறிதரன்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இனியாவது பதியப்படுமா?
செல்வரட்னம் சிறிதரன்:-

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஓர் அரசியல் கட்சயாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் மேலெழுந்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈபிஆர்எல்எவ், டெலோ, ஆகிய கட்சிகளுடன், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்த, தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது, விடுதலைப்புலிகளுக்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் தலைமைப் பொறுப்பையேற்றுச் செயற்பட்டு வருகின்றது.

யுத்தத்தில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, அவர்களின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதைப் போன்றே அவர்களின் அரசியல் செயற்பாடுகளும் மௌனித்துப் போயின. ஆயுதப் போராட்டத்தை முழுமையாக நம்பியிருந்த அவர்கள், பாராளுமன்ற அரசியலில் அதிக அளவு நம்பிக்கை வைத்திருக்கவில்லை. ஆயினும் அந்த அரசியல் அம்சத்தை, ஏற்கனவே பாராளுமன்ற அரசியலில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கட்சிகளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற குடையின் கீழ் ஒன்றிணைந்து செற்படத் தூண்டியிருந்தார்கள். இருந்தபோதிலும், அரசியல் தீர்வுக்காக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் விடுதலைப்புலிகளின் தலைவர்களே பங்குபற்றியிருந்தார்கள். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற அரசியல் தலைமையை அவர்கள் அதில் பங்குகொள்வதற்கு அனுமதித்திருக்கவில்லை.

இத்தகைய பின்னணியிலேயே, விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் நாட்டின் இராணுவ, அரசியல் அரங்கத்தில் இருந்து அகற்றப்பட்டதையடுத்து, தமது ஏகோபித்த அரசியல் தலைமையாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை, தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். யுத்தம் முடிவடைந்து ஐநு;து வருடங்களுக்கும் அதிகமான காலப்பகுதியில் தமிழ் மக்களின் பெரும்பான்மையானவர்கள், தமிழ்த்தேசிய கூட்டமைப்பை, ஓர் இறுக்கமான அமைப்பாக கட்டிக்காத்து வந்துள்ளார்கள்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பை, தமிழ் மக்களே கட்டிக்காத்தார்கள் என்றால், அந்தக் கூட்டமைப்பைக் கட்டிக்காக்கும் பணியில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் பங்களிப்புச் செய்யவில்லையா என்ற கேள்வி எழுகின்றது. இது தவிர்க்க முடியாதது. அரசியல் கட்சிகள் பொதுமக்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக, பல்வேறு கொள்கைகளைக் கடைப்பிடித்தும், மக்கள் முன்னால் வைத்தும் செயற்படுவதையே, பொதுவானதொரு நடைமுறையாகக் காண்கின்றோம்.

ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில், ஓரணியாகத் திரண்டுள்ள அந்த மக்கள், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற கூட்டு அணியைச் சிதறவிடாமல் கட்டிக்காத்து வந்துள்ளார்கள். நாட்டில் யுத்தம் முடிவடைந்ததையடுத்து, நடத்தப்பட்ட அனைத்துத் தேர்தல்களிலும், அவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகளின் தலைவர்களையும் முக்கியஸ்தர்களையுமோ தொடர்ச்சியாக ஆதரித்து வாக்களித்து வெற்றிபெறச் செய்திருக்கின்றார்கள்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கீழ் அணி திரண்டுள்ள தமிழ் மக்களுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ன செய்திருக்கின்றது? அந்த மக்கள் மத்தியில் நிலவி வருகின்ற ஒற்றுமையைக் கட்டிக்காத்திருக்கின்றதா? அந்த மக்களுடைய ஒன்றிணைந்த, இறுக்கமான அரசியல் சக்தியை சரியான முறையில் கூட்டமைப்பு வழிநடத்தியிருக்கின்றதா? அந்த மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து, எந்த அளவுக்குச் செயற்பட்டிருக்கின்றது? அரசியல் ரீதியாக அந்த மக்கள் கொண்டிருக்கின்ற அபிலாசைகள், எதிர்பார்ப்புக்கள் என்பன குறித்து, கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் ஆரோக்கியமான கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்களை நடத்தி, அரசியல் தலைமைக்கும் மக்களுக்கும் இடையிலான அரசியல் ரீதியான உறவை இறுக்கமாக்கியிருக்கின்றனவா?

யுத்தமோதல்களின்போது, இலங்கையிள் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் தொடர்ச்சியாக இரத்த ஆறு ஓடியது. அது மட்டுமல்லாமல், நாட்டின் தென்பகுதிகளில் ஆங்காங்கே, அவ்வப்போது, இரத்தம் சிந்தப்பட்டது, இதன் கரணமாக சர்வதேச அளவில் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் முக்கியத்துவம் பெற்றிருந்தது, இலங்கையில் என்ன நடந்தது என்பதைவிட, வன்னி யுத்த மோதல்களில் என்ன நடக்கின்றது என்று, விடுதலைப்புலிகள் என்ன செய்கின்றாரக்ள், யுத்தத்தில் சிக்கியுள்ள தமிழ் மக்களுக்கு என்ன நடக்கின்றது என்பதை உலக நாடுகளும், சர்வதேசமும் உன்னிப்பாக நோக்கியவண்ணம் இருந்தன.

யுத்தமுடிவுக்குப் பின்னரான நிலைமைகள்

யுத்தம் முடிவடைந்த பின்னரும்கூட, இந்த நிலைமையில் மாற்றங்கள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இறுதி யுத்தத்தின்போது நடைபெற்ற உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் ஐநாவும், அகில உலகமும்  அதிக கவனம் செலுத்தத் தொடங்கியிருந்தன. இறுதி யுத்தத்தின்போது உண்மையாகவே என்ன நடந்தது, அவற்றுக்கு யார் யாரெல்லாம் பொறுப்பு கூறப்போகின்றார்கள்? அவ்வாறான, பொறுப்பு கூறலுக்குரிய ஒட்டுமொத்தமான கடப்பாட்டை இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கின்றதா என்ற கேள்விகளை முன்வைத்து, ஐநாவும் சர்வதேசமும் தேடல்களில் ஈடுபட்டிருந்தன. அந்த நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன. அவற்றின் எதிர்வினையாகப் ஐநா மன்றம் உட்பட, சர்வதேசத்தின் பல் வேறு மட்டங்களில் பல்வேறு இடங்களில் பல்வேறு சம்பவங்கள் பகிரங்கமாகவும், திரைமறைவிலும் இடம்பெற்று வருகின்றன.

அது மட்டுமல்லாமல், யுத்தமோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்சகளில் நிலைமைகள் சீரடையவில்லை. யுத்தச் சூழலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் இராணுவ மயப்பட்ட அரசியல் அழுத்தங்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் தொடர்ச்சியாக முகம் கொடுக்க வேண்டிய மோசமான நிலைமைகளுக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றார்கள். இதனால், யுத்த காலச் செயற்பாடுகள் மட்டுமல்லாமல், அதன் தொடர்ச்சியாகத் தம்மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கான வழிமுறைகிளில் அவர்கள் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகினார்கள்.

ஊரும், உலகமும் ஓடுகின்ற ஒட்டத்தில் தமிழ் மக்களின் முக்கிய பங்காளிகளாக, அவர்களின் அரசியல் தலைமையாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் இணநை;து பயணித்தார்கள். ஆனால், வெளியில் கூட்டமைப்பு, உள்ளே கூத்தமைப்பு என்று நையாண்டி செய்யத்தக்க வகையிலான ஒரு போக்கிலேயே, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் இடம்பெற்று வந்திருக்கின்றன.

நாடு அந்நியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாள் முதலாக அல்லது அதற்கு முன்பிருந்தே ஆரம்பிக்கப்பட்ட சிறுபான்மை தேசிய இனத்தவராகிய தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும் என்பது மக்களின் அபிலாசையாக வேட்கை மிகுந்த அக்கறையாக இருந்து வந்துள்ளது. இதன் காரணமாகத்தான் பல அரசியல் கட்சிகள் செயற்பட்டிருந்த போதிலும், அனதை;துக்க கட்சிகளும் ஒன்றிணைந்து ஓரணியில் செயற்பட வேண்டும் என்ற போக்கு தமிழ் மக்களின் அரசியல் தந்தையாகிய செல்வநாயகத்தின் காலத்தில் இருந்தே தொடச்சியாக நிலவி வருகின்றது.

ஆனால் இந்த ஒற்றுமையும் ஐக்கியமும் புளியம்பழ ஓடாகவே நிலவி வந்திருக்கின்றதே தவிர, அது பலாப்பழ  தோலைப் போன்று இறுக்கமானதாக மாறவே இல்லை. மோசமான ஒரு யுத்தத்திற்கு முகம் கொடுத்து, அதன் பாதிப்புகளில் இருந்து மீண்டு, தமது அரசியல் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ள அந்த மக்களுக்குத் தலைமை ஏற்றுள்ள கூட்டமைப்பு, மக்களிடமிருந்து விலகிச் செல்கின்றதா என்ற அபாயகரமான கேள்வி இப்போது எழுந்துள்ளது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற கட்டமைப்பின் மீது அதிக நம்பிப்கை வைத்து அதன் தலைவர்களையே தமது அரசியல் தலைவர்களாக மக்கள் ஏற்றிருக்கின்றார்கள். தங்களின் இந்தத் தலைவர்களினால், பெரிய அளவில் எதையுமே செய்ய முடியாதுள்ளது. அதற்கக அரசியல் அங்கீகாரமும், அரசியல் அதிகாரமும் இந்த நாட்டின் இனவாதப் போக்கைக்கொண்ட அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என்பதை அவர்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். இருந்த போதிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பே தமது அரசியல் தலைமையாக இருக்க வேண்டும், கூட்டமைப்பின் தலைவர்களே, ஒற்றுமையாக ஒன்றாக இணைந்திருந்து தங்களுக்காகச் செற்பட வேண்டும் என்ற அழுத்தமான அரசியல் பிடிப்பைக் கொண்டிருக்கின்றார்கள்.

இதனை 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அவர்கள் மிகவும் அநாயசமாக வெளிப்படுத்தியிருப்பதைக் காண முடிகின்றது. குறிப்பாக வடமாகாண சபைக்கான தேர்தல், நடந்து முடிந்துள்ள ஜனாதிபதிக்கான தேர்தல் என்பவற்றில், ஆட்சியதிகாரம் கொண்டவர்களினதும், இராணுவத்தினரதும் உயிரச்சுறுத்தல் மிகுந்த கெடு பிடிகளுக்கு மத்தியில் அவர்கள் வாக்களித்துள்ள விதமானது, அவர்களின் அந்த அழுத்தமான அரசியல் பிடிப்பை உள்ளங்கை நெல்லிக்கனி போல பளிச்சென வெளிப்படுத்திருக்கின்றது.

கூட்டமைப்பின் பதிவு

தமிழ் மக்கள் தமது அரசியல் கட்சியாகவும், அரசியல் தலைமையாகவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பையே வரித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆயினும் அந்தக் கூட்டமைப்பை கட்டுக் கோப்பான ஓர் அரசியல் கட்சியாக வடிவமைப்பதில் கூட்டமைப்புக்குள்ளே முரண்பாடுகள் தொடர்ச்சியாக நிலவி வருகின்றன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஓர் அரசியல் கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் இன்னுமே பதிவு செய்யப்படவில்லை. அதற்கென ஒரு யாப்பு கிடையாது. தனியான ஒரு கட்சிக்குரிய சின்னம் அதற்குக் கிடையாது. அதனால், அதற்கென்று ஒரு கொடியுமில்லை.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அதன் பங்காளிக் கட்சிகளிடமிருந்தும், கூட்டமைப்பையே நம்பியுள்ள பொதுமக்களிடமிருந்தும் பல தடவைகள் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், அது குறித்து ஆக்கபூர்வமான செயற்பாட்டினை கூட்டமைப்பின் தலைமை மேற்கொள்ளவே இல்லை. பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழும்போதெல்லாம் கண்துடைப்பாக சில உறுதிமொழிகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்திருக்கின்றன. அந்த உறுதிமொழிகளுக்கு செயல் வடிவம் கொடுப்பதில் அவர்கள் அக்கறையோடு செய்பட்டதே கிடையாது. தேர்தல் திணைக்களத்தின் நடைமுறைகள், நாட்டில் அவ்வப்போது இடம்பெற்று வந்த தேர்தல்கள், மற்றும் சர்வதேச மட்டத்திலான தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலான செயற்hபட்டு நிலைமைகள் என்பவற்றைக் காணமாகக் காட்டி காலம் கடத்தப்பட்டு வந்துள்ளது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் தேர்தல் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து, கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகளின் உடன்பாட்டை  வெளிப்படுத்துகின்ற கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட ஆவணங்களை, தேர்தல் திணைக்களம் கேட்டிருந்ததாக மற்றுமொரு தகவல் வந்தது. அதேவேகத்தில் பின்னர், அத்தகைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அந்தக் கட்சி கையெழுத்திடவில்லை. கையெழுத்திடவில்லை என்ற கசமுசா தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதற்கிடையில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களின் கூட்டங்களிலும், நாடாளுமன்ற குழு கூட்டங்களிலும் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர், கூட்டமைப்பைப் பதிவு செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது என்றும், பதிவு விவகாரங்களை அது கவனிக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் நடைமுறையில் எதையும் காண முடியவில்லை.

மக்கள் இறுக்கமாக ஒன்றிணைந்துள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சக்தியையும், அருமையையும், பெருமையையும் அந்தக் கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகள் சரியாக உணர்ந்திருக்கின்றார்களா, தெரிந்திருக்கின்றார்களா என்பது தெரியவில்லை. ஆனால் நாட்டில் உள்ள பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் வலுவை நன்கு உணர்ந்திருக்கின்றார்கள். இதன் காரணமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற அரசியல் கட்சிக்கான பெயரைத் தங்களுக்கே தர வேண்டும் எனக்கோரி 15 வரையிலான விண்ணப்பங்கள் தேர்தல் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையாளரே தகவல் வெளியிட்டிருக்கின்றார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் ஏற்கனவே சமர்ப்பித்துள்ள தமது விண்ணப்பத்திற்கான ஆவணங்களை உரிய காலத்தில் சமர்ப்பிக்காவிட்டால், கூட்டமைப்பின் பெயரை வேறு ஏதாவது ஒரு விண்ணப்பத்திற்கு – அந்தப் பெயரைக் கேட்டு விண்ணப்பித்துள்ள வேறு யாராவது ஓர் அரசியல் குழுவிற்குக் கையளிக்க வேண்டிய நிலைமை எற்படும் என்று அண்மையில் தேர்தல் ஆணையாளர் அரசியல் கட்சிப் பிரதிதிகள் கலந்து கொண்ட ஒரு சந்திப்பில், கூட்டமைப்பின பிரதிநிதிகளுக்கு நேரடியாகவே தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றது.

கடந்த 2012 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 28 ஆம் திகதி தேர்தல் முல்லைத்தீவு மாவட்டத்தின், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் நடைபெறவிருந்தது. அப்போது, அரச தரப்பைச் சார்ந்தவர்களின் தூண்டுதலையடுத்து, தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில், நீதிமன்றம் இந்தத் தேர்தலுக்கு எதிராகத் தடையுத்தரவைப் பிறப்பித்திருந்தது. மூன்று வருடங்களின் பின்னர், அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதையடுத்து, பெப்ரவரி 28 ஆம் திகதி - இன்னும் சில தினங்களில் அந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தல் தடைபட்டிருந்ததனால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்வதும் சட்டரீதியான காரணங்களுக்காகத் தடைபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்தத் தடை நீங்கவிருப்பதானால், முல்லைத்தீவு தேர்தல் முடிவடைந்ததும், கூட்டமைப்பைப் பதிவு செய்வதற்கான ஆவணங்களைச் சமர்ப்பி;ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக, அந்தக் சந்திப்பில்; கலந்து கொண்டிருந்த கூட்டமைப்பு பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

ஆயினும் இத்தகைய ஒரு நிலைமைக்குப் பின்னரும்கூட, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இணைப்புக் குழு கூட்டத்தையோ, அல்லது கட்சித் தலைவர்களின் கூட்டத்தையோ, நாடாளுமன்ற குழு கூட்டத்தையோ அவசரமாகக் கூட்டி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கூட்டமைப்பின் தலைமை முயற்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கின்றது.  

எதிர்ப்புக்கள்

கூட்டமைப்பைப் பதிவு செய்யவில்லை என்ற ஆதங்கம் பலதரப்பினரிடமும் பரவலாகக் காணப்பட்ட போதிலும், அதனைப் பதிவு செய்யப் போவதில்லை, என்ற கருத்து பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் முன்வைக்கப்பட்டு வந்தது. அதேபோன்று அந்தக் கட்சியின் தலைவராகிய மாவை சேனாதிராஜா செயலாளராக இருந்த போது இத்தகைய கருத்தை வெளியிட்டு அதனால் சர்ச்சைகளும் ஏற்பட்டிருந்தன.

இந்த நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீவிர செயற்பாட்டாளரும், அந்தக் கட்சியின் உபதலைவருமாகிய பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும். அதனை கட்டுக் கோப்புள்ள ஒரு கட்சியாக வடிவமைக்க வேண்டும் என்ற காரசாரமான தொனியில் கருத்து வெளியிட்டுள்ளார். தமிழரசுக் கட்சிக்குள்ளேயே கூட்டமைப்பைப் பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள முரண்பட்ட நிலைமைகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. ஆயினும் இந்த முரண்பாடானது, கூட்டமைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதனைப் பலப்படுத்த வேண்டிய தற்போதைய காலத்தின் அரசியல் அவசியத்தை வலியுறுத்துவதற்கு வழிவகுத்துள்ளது என்றே கூற வேண்டும்.

கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாகப் பதவு செய்யவில்லை. அதன் தலைவர்கள் ஒன்றிணைந்து ஐக்கியமாகச் செயற்படுகின்றார்களில்லை என்ற ஆதங்கமும், அதிருப்தியும்  தமிழ் மக்கள் மத்தியில் நீண்டகாலமாக இருந்து வருகின்றது. கூட்டமைப்பில் இணநை;துள்ள கட்சிகளின் தலைவர்களை, அவர்கள் சார்ந்த கட்சிகளின் தலைவர்களாக அல்லாமல், கூட்டமைப்பு என்ற அரசியல் சக்தியின் தவைர்களாகவே பார்க்க விரும்புவதாகவும், அவ்வாறே தாங்கள் கருதுவதாகவும் தமிழ் மக்கள் அந்தத் தலைவர்களின் கிராமப்பற விஜயங்களின்போது அழுத்தமாகத் தெரிவித்திருக்கின்றார்கள். தமிழ் மக்களின் இந்த ஆதங்கத்தை சரியாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு, கூட்டமைப்பின் தலைமை தவறியிருப்பது தமிழ் மக்களின் எதிரகால அரசியல் நலன்களுக்கு நல்லதல்ல.

கூட்டமைப்பின் பதிவு விவகாரம் தீர்க்கப்படாமல், அல்லது ஏதோ ஒரு வகையில், அதற்குத் தீர்வு காண்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற நம்பிக்கையை ஊட்டத்தக்க வகையிலான நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறாத அதேநேரம், வேறு சில விடயங்களிலும், கூட்டமைப்பின் தலைவர்கள் மீது, மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. இந்த அதிருப்தியானது கசப்புணர்வாக மாற்றம் பெற்று கொடும்பாவி எரிக்கும் அளவுக்கு, மோசமான ஒரு நிலைமைக்கு இட்டுச் சென்றிருப்பதை இப்போது காண முடிகின்றது.

யுத்த மோதல்களின்போது, ஏதோ நடந்தது நடந்துவிட்டது. யுத்தம் முடிவுக்கு வந்தபின்னராவது, உண்மையான அமைதியும் சமாதானமும் கிடைக்கும், யுத்தத்தினால் அழிந்த வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பி வாழ்க்கையைத் தொடர்வோம் என்று தமிழ் மக்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அவர்கனின் நம்பிக்கை நிறைவேறவில்லை. மாறாக யுத்த காலத்திலும் பார்க்க, மோசமான நெருக்கடிகளையும், இடர்ப்பாடுகளையும், அடக்குமுறைகளையுமே அவர்கள், யுத்தத்தில் வெற்றி பெற்று கொக்கரித்துக் கொண்டிதுந்த அரசாங்கத்திடமிருந்தும், இராணுவத்தினரிடமிருந்தும் எதிர்கொண்டார்கள்.

யுத்த மோதல்கள் இல்லை. இரத்தம் சிந்துதலும் இல்லை. ஆனால், அவர்களின் இருப்பு கேள்விக்குறியாகியது. கௌரவம் சிதைக்கப்பட்டது. வாழ்வாதாரத்திற்குரிய சாதாரண உரிமைகள் அப்பட்டமாக அடக்குமுறை அரசியலின் மூலம் அபகரிக்கப்பட்டன. இதனால், யுத்தகாலத்திலும் பார்க்க யுத்தத்தில் வெற்றிபெற்ற அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்திருந்தார்கள். இந்த வெறுப்புணர்வே, நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னைய ஆட்சியாளர்களை வீட்டிற்குத் துரத்துகின்ற ஆவேசமாக வெளிப்பட்டிருந்தது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய தமிழ் மக்களின் இந்த ஆவேசத்தை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை, தங்களின் அரசியல் வழிநடத்தலில் மக்கள் கொண்டிருக்கின்ற அபிமானமாக, ஆதரவாக வெளியுலகத்திற்குக் காட்ட முயன்றிருந்த ஒரு போக்கும் வெளிப்பட்டிருந்தது.

தமிழ் மக்கள், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்களேயொழிய, அரசியல் ரீதியாக புதிய ஜனாதிபதியின் மீது எள்ளளவும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. ஆனால், மக்களின் தார்மீக ஆவேசத்தை தமக்கான அரசியல் பலமாகக் கொண்டு, நிபந்தனையற்ற ஆதரவை புதிய ஜனாதிபதி அணியினருக்கு தமிழ்த் தலைவர்கள் வழங்கியிருந்தார்கள். அது மட்டுமன்றி, புதிய அரசுக்கு தமிழ் மக்களின் சார்பில், அவர்களுடைய நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் இலங்கையின் 67 ஆவது சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொண்டிருந்தமை, அந்த மக்களை மேலும் எரிச்சலடையவும் ஆத்திரம் கொள்ளவும் செய்திருந்தது.

தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் சுதந்திரம் இல்லை என்பதை வெளிப்படுத்துவதற்காக பல தசாப்தங்களாக சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பகிஸ்வரித்து, அதில் கலந்து கொள்ளாமல், கலந்து கொள்கின்ற மன நிலையற்றவர்களாக இருந்த நிலையில் கூட்டமைப்பின் பெயரில் தலைவர்கள் இம்முறை அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை அவர்களை உசுப்பிவிட்டிருந்தது.

இதன் காரணமாகவே புலம் பெயர் சமூகத்தின் ஒரு சாரார் தமிழ்த் தலைவர்களின் கொடும்பாவியை எரித்திருந்தார்கள்.

போர்க்குற்றச் செயல்கள் தொடர்பான ஐநூ விசாரணை அறிக்கையை வெற்றிகரமாகப் பின்போடச் செய்திருந்த அரசாங்கம், ஐநாவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்குப் பதிலாக உள்ளக விசாரணையொன்றை நடத்தப் போவதாகத் தெரிவித்திருந்தது. அத்துடன், அந்த விசாரணை, சர்வதேச மட்டத்தில் அமைந்திருக்கும் என்றும் அறிவித்திருந்தது. ஐநா அறிக்கையைப் பின்போடச் செய்தால், அதற்குப் பதிலாக,  தான் செய்யப் போவது என்ன என்பதற்காகவே அரசாங்கத்தினால் அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

ஐநா அறிக்கையை தமிழ் மக்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். உயிரச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பலர் அந்த அறிக்கைக்காக சாட்சியமளித்திருந்தார்கள். அந்த அறிக்கையின் மூலம் பல விடயங்கள் வெளியில் வரும், அதன் ஊடாக தங்களின் பல பிரச்சினைகளுக்குத் தீரவு ஏற்படும் என்று அவர்கள் நம்பியிருந்தார்கள். இந்த நிலையில் அறிக்கை பின்போடப்பட்டது அவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், அரசாங்கத்தின் அந்த அறிவித்தல் வெளிவந்த சூடு ஆறுவதற்கு முன்பே, அதைப்பற்றி கூட்டமைப்பிற்குள் அலசி ஆராயாமல், அதனை வரவேற்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருந்தார். தமிழ் மக்களின் நிலைப்பாடு என்ற தோற்றப்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளியிட்ட இந்தக் கருத்தானது, தமிழ் மக்களை மேலும் ஆவேசப்படுத்தியிருப்பதைக் காண முடிகின்றது. இதன் வெளிப்பாடாகவே, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கொடும்பாவி எரிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

தலைவர்கள், மக்கள் மத்தியில் அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்க வேண்டியது முக்கியம். ஆகவே, தங்கள் மீது அதிருப்தியும், அவநம்பிக்கையும், ஆத்திரமும் ஏற்படக் கூடிய காரியங்களைச் செய்கின்ற போக்கினை தமிழ்த்தலைவர்கள் உடனடியாகக் கைவிட வேண்டும் என்பதை இந்த எதிர்ப்புக்கள் இடித்துரைத்திருக்கின்றன.

எல்லோரையும் திருப்திபடுத்தத்தக்க வகையில் அரசியல் செய்வதென்பது இயலாத காரியமே. ஆயினும், தங்கள் தலைவர்கள் தங்களைக் கைவிடமாட்டார்கள், தங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய காரியங்களைச் செய்ய மாட்டார்கள் என்ற பொதுவான நம்பிக்கையை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், அந்த நம்பிக்கையைச் சிதைக்காத வகையில் மிகவும் அவதானமாகக் காரியங்களை முன்னெடுத்திருக்க வேண்டும். அந்த வகையில் கருமங்களில் நடந்து கொள்ள வேண்டும். எனவே, கருத்துக்களை வெளியிடும்போதும் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.

உள்ளுர், அண்டைநாடு மற்றும் சர்வதேச மட்டங்களில் நிலவுகின்ற அரசியல் சூழல், அரசியல் போக்கு, அதனால் எழுந்துள்ள நெருக்கடிகள் என்பவற்றுக்கு மத்தியில், தமது மக்களுக்கு தாங்கள் நம்பிக்கையான வகையில் நடந்து கொண்டிருக்கலாம். ஆனால், மக்களுடைய தலைவர்கள் என்ற அடித்தளத்திற்கு, ஆதாரமாகவுள்ள மக்களுக்கு – தமது தலைவர்கள் தங்களுக்கு நம்பிக்கையாகவே நடந்து கொள்கின்றார்கள் என்பது தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். அத்தகைய நிலையில் தலைவர்களுடைய செயற்பாடுகள் அமையாவிட்டால், மக்கள் தலைவர்களைத் தூக்கி எறிவதற்கு தயங்கமாட்டார்கள். அத்தகைய அச்சத்திற்குரிய ஒரு நிலைமை தமிழ் அரசியலில் இப்போது துளிர்விடுகின்றதோ என்று இப்போதைய நிலைமைகள் பலரையும் எண்ணுவதற்குத் தூண்டியிருக்கின்றது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila