கிளிநொச்சியில் கண்ணீருடன் திரண்ட காணாமல்போனோரின் உறவுகள்! ஜனாதிபதிக்கு மகஜர்

காணாமல் போனோரின் உறவினர்களால் இன்று காலை கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
கடந்த பல ஆண்டுகளாக சிறிலங்கா அரசாங்கங்கள் மற்றும் ஒட்டுக்குழுக்களின் போர், வெள்ளை வான்கடத்தல்கள், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற பெரும்போர் என்பவற்றின்போது கடத்தப்பட்டும் காணாமல் போயும், இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போயும் உள்ள உறவுகளின் உறவுகளும் பல ஆண்டுகளாக அரசியல் கைதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் சொந்தங்களும் இன்று கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட காணாமல் போனோரின் உறவுகளின் அமைப்பு ஏற்பாடு செய்த இதில் பெருமளவான காணாமல் போனவர்களின் உறவுகளும் சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் உறவுகளும் கலந்துகொண்டு கண்ணீர் சிந்தி தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். பெரும்பாலான கோசங்கள் மாற்றத்திற்கான புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை நோக்கியே எழுப்பப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதி தமது கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து தமக்கு நிம்மதியான வாழ்வுக்கான தீர்வை தருவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே காணாமல் போன உறவுகளின் நம்பிக்கை குரல்கள் இடம்பெற்றிருந்தன. கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக ஒன்று திரண்டவர்கள் பின்பு கிளிநொச்சி மாவட்ட அரசசெயலகத்தை நோக்கிச்சென்று அங்கு தமது கோரிக்கைகளை முன்வைத்த மகஜரை வாசித்து, ஜனாதிபதிக்கான மகஜரை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்ததுடன் வடமகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரனுக்கான மகஜரை பா.உறுப்பினர் சி.சிறீதரனிடம் கையளித்தனர்.
 இன்றைய கவனயீர்பு போராட்டத்தில் பெருமளவான உறவுகள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள், மன்னார் பிரஜைகள் குழு பிரதிநிதிகள், மாந்தை கிழக்கு உப தவிசாளர் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இன்று அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பியுள்ள மகஜரின் முழுவிபரம் வருமாறு. அதிஉத்தம ஜனாதிபதி அவர்கள்,
ஜனாதிபதி செயலகம்,
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு,
கொழும்பு.
காணாமல் போனோரைக் கண்டறிந்து பொறுப்புக் கூறவும் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிப்பதற்குமான கருணை மனு,
கௌதம புத்தபெருமான் அவர்கள் சேவித்ததும் ஏனைய மதங்களின் இறைத்தூதர்கள் போதித்ததுமான அறம், பஞ்சசீலப் பண்புகள் மிகுந்ததாங்கள், இலங்கையின் அதிஉத்தம ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை, துயரங்களோடும் வலிகளோடும் வாழ்ந்துவரும் எமக்கு ஆறுதலையும் புதிய நம்பிக்கைகளையும் தந்திருக்கிறது.
தங்கள் மீது நாங்கள் கொண்டிருக்கின்ற உச்ச நம்பிக்கையின் அடிப்படையிலும், புதிய ஆட்சி மாற்றத்தின் ஊடாக புதிய அரசாங்கம் கொண்டிருக்கின்ற நல்லாட்சிக்கான சிந்தனைகளின் அடிப்படையிலும், துணிச்சல் மிகுந்தும் விரைவானதுமான நடவடிக்கைக்காக இக்கருணை மனுவைச் சமர்ப்பிக்கின்றோம்.
கடந்த கால கசப்பான வரலாறு துயரமிக்கதும், மனிதமனங்களால் ஜீரணிக்க முடியாத பேரிடரையும், இன முரணையும் கொண்டிருந்தது.
இனமுரணுக்கான அடிப்படைகளையும், அதனால் எழுந்த விளைவுகளையும், பட்டறிவோடு பார்க்கின்ற அரசியல் பக்குவம் தங்களுக்குண்டு.
கடந்த இறுதி யுத்தத்தின்போது சர்வதேச போர் விதிமுறைகளுக்கமைவாக ஆயிரக்கணக்கான தாய்மார்கள், தங்கள் பிள்ளைகளையும், நூற்றுக்கணக்கான இளம் மனைவியர் தங்கள் கணவர்களையும், பச்சிளம் பாலகர்கள் தங்கள் தந்தையர்களையும், இராணுவத்திடம் கையளித்துவிட்டு தவிக்கிறோம்.
அவர்களின் அன்புக்காக ஏங்கித் தவிக்கிறோம். வறுமையிலும், சமூக கலாச்சாரப் பிரச்சினைகளாலும், மீள முடியாத மனநிலை பாதிப்படைந்து இருக்கிறார்கள்.
இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் எங்கே? என்று ஐந்து வருடங்களாகத் தேடி அலைகின்றோம். கடந்தகால அரசு இது தொடர்பாக பொறுப்பு கூறமுன் வரவோ,எமது வேதனைகளையும் கண்ணீரையும் புரிந்துகொள்ளும் மனிதாபிமான அரசாகவோ அதுசெயற்படவில்லை என்பது கசப்பான உண்மை.
மாறாக உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இராணுவப் புலனாய்வாளர்களால் நாங்கள் அச்சுறுத்தப்பட்டோம்.
விசாரணைகளின்போது மக்களோடு மக்களாக புலனாய்வாளர்களும் இருந்தார்கள். சாட்சியங்களை ஒலி, ஒளிபதிவு செய்தார்கள், புகைப்படங்களை எடுத்தார்கள்.
இராணுவத்திற்கெதிராக மற்றும் அரசுக்கெதிராக சாட்சியங்கள் சொல்லப்பட்டால் குடும்பத்தில் ஏனையவர்களும் உயிர் விலை கொடுக்கநேரிடும் என்று எச்சரித்தார்கள்.
மீறிச்செயற்பட்ட சிலரை பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தார்கள். நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் காணமல் போனோர் சிலருக்கு நஷ்டஈடும், மரணச்சான்றிதழும் வழங்கி சாட்சியங்கள் பதிவு செய்யப்படுவது தடுக்கப்பட்டது.
இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி ஆணைக்குழுவினர் நேர்மையாகச் செயற்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அவர்களது விசாரணை முறைகள், கேட்ட கேள்விகள், திசைதிருப்பும் கருத்துக்கள், நட்டஈடு வழங்குவது தொடர்பான அவர்களின் குறிப்புரைகள் என்பன மகிந்த ராஜபக்ச அரசுதலைமையிலான போர்க்குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்கு வலுச்சேர்ப்பதாகவே அமைந்தது.
இதனைத் தவிர சர்வதேச மனிதாபிமான நியமங்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைத் தீர்மானங்களுக்கும் அமைவாக அவர்களிடம் சாட்சியம் அளிப்பதற்கு நாங்கள் தடுக்கப்பட்டோம். அச்சுறுத்தல்களும், எச்சரிக்கைகளும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கோரத் தன்மைகளும் எம்மை மௌனிக்கும் அடிமைகளாக உருவாக்கி இருந்தது.
எஞ்சி இருப்பவர்களின் உயிர்ப்பாதுகாப்பு அச்சமே மேலோங்கி இருந்ததைத் தாங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்.
காணாமல் போனோரின் உறவுகளின் பிரச்சினை ஒருபுறம். மறுபுறம்பல நூற்றுக்கணக்கான இளைஞர்களும்,யுவதிகளும் அரசியல் கைதிகள் என்றவகையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் விசாரணைகளின்றி, வழக்குகளுமின்றி, தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
பதினைந்து இருபது வருடங்களுக்கு மேலாக சிறைகளில் வாடுகின்ற இவர்களின் உணர்வுகளை ஒரு தந்தை என்ற மாண்பின் அடிப்படையில் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
அவ்வாறுசிறை இருப்பவர்களின் குடும்பத்தவராகிய நாங்கள், மிக வறுமையின் கீழ் வாழ்ந்;து கொண்டிருக்கிறோம். இத்தகைய வாலிபர்களும், யுவதிகளும் தங்களின் எதிர்காலத்தைச் சூனியமாக்கிய நிலையில் பல்லாண்டுகளாகச் சிறைகளில் வாடுவது நீதிக்கும் நல்லாட்சிக்கும், எதிரானதாகும்.
தர்மமே மனித வாழ்வையும், அரசியலின் நல்லாட்சித்தன்மைiயும் தீர்மானிக்கின்றது என்பதை உண்மையான பௌத்தன் என்ற வகையில் தாங்கள் அறிவீர்கள் எனவே மனுநீதியின் படியும் இறைநீதியின் படியும்,காணாமல் போனோரைக் கண்டறிந்து பொறுப்புக் கூறுவதுடன் அரசியல் கைதிகளுக்கு தற்துணிவோடு பொதுமன்னிப்பை வழங்க வேண்டும் என தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இலங்கைத்தீவில் நல்லாட்சியின் பண்புகளான சமத்துவத்தையும் சமநீதியையும் நிலைநாட்டும் ஜனநாயகப் பயணத்தில் தமிழ் பேசும் மக்களாகிய எங்களையும் அரவணைத்துச் செல்லுமாறு கோரி இம்மனுவைச் சமர்ப்பிக்கின்றோம்.
நன்றி
தலைவர் மற்றும் செயலாளர்,
காணாமல் போனோருக்கான அமைப்பு,
கிளிநொச்சிமாவட்டம்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila