ஓமந்தை சோதனை சாவடியில் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட அனைத்து சோதனை நடவடிக்கைகளும் இன்று முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போர் முடிவுற்ற பின்னரும் குறித்த சோதனை சாவடியில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது முற்றாக சோதனை நடவடிக்கைகள் யாவும் தளர்த்தப்பட்டுள்ளன.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியிலிருந்த வேளை ஓமந்தை சோதனைச் சாவடியில் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன.அத்துடன் வாகனப் பதிவுகள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வடமாகாணத்திற்கு வரும் பயணிகளின் பாதுகாப்பு அனுமதி தொடர்பிலும் சோதனைகள் இடம்பெற்றன.
எனினும் புதிய அரசின் ஆட்சியில் வாகன சோதனைகள் மற்றும் பதிவுகளும் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தன.இதேவேளை இன்று முதல் அனைத்து சோதனை நடவடிக்கைகளும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.