தமிழர்கள் தொடர்பில் கதைப்பதற்கு சரத் பொன்சேகாவுக்கு அருகதை இல்லை

இனவாதத்தைத் தூண்டி நன்மை பெற வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் முயற்சிப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.கூடவே, போரில் மனிதப் படுகொலை இடம்பெற வில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் இனப் படுகொலை நடைபெற்றது என்ற தீர்மானம் வடக்கு மாகாண சபையில் நிறைவேறியதால் சீற்றமடைந்த சரத் பொன்சேகா போரில் மனிதப் படுகொலை இடம் பெறவில்லை என்று கூறுவது நகைப்புக்குரியது. குற்றவாளி ஒருவர் தான் குற்றம் செய்யவில்லை என்றே கூறுவான். அதற்காக அதை ஏற்றுக் கொள்ள முடியுமா என்ன?
வன்னியில் நடந்த போரில் தரைவழிப்போரை தானே வழிப்படுத்தியதாகவும் படையினருக்கு கட்ட ளைகளைப் பிறப்பித்தது தானே என்றும் கூறும் சரத் பொன்சேகா, எனவே போரில் மனிதப் படு கொலை இடம்பெறவில்லை என்றும் கூறியுள்ளார்.


வன்னியில் நடந்த இறுதிப் போரில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர். முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலைகளுக்கு சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப் படங் கள் மிகப் பெரும்சாட்சி.

இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என்ற தீர்மானம் ஐ.நா அரங்கில் நிறைவேறியிருக்கும் வேளையில் மனிதப் படுகொலை நடக்கவில்லை என்று சரத் பொன்சேகா கூறுவது எந்த வகையில் நியாயமாகும்?
தமிழ் இனத்தின் கருவறுத்து கயமை புரிந்ததில் சரத் பொன்சேகாவுக்கு பெரும் பங்கு உண்டு. எனவே தமிழ் இனம்தொடர்பில் அவர் எந்த வகையிலும் கருத்து உரைப்பதற்கு தகுதி அற்றவர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மன்னிப்புப் பெற்று, இழந்த பட்டங்களை பெறுவது போல இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் உயிர்களை மீளப் பெற முடியாது என்பதை பொன்சேகா முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் தமிழர்கள் வாழமுடியுமே தவிர ஆளவும் முடியாது; உரிமை கேட்கவும் முடியாது என்று இனவாதம் கக்கிய சரத் பொன்சேகாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
ஒரு முறை நடந்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருக்கலாம். அதற்காக தான் செய்த கொடுமைகளை தமிழ் மக்கள் மறந்து விட்டார்கள் என்று சரத் பொன்சேகா கருதியிருப்பாராயின்; அது அவர் சிறையில் அடைபட்டதன் பின்னர் அவரின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றமாக இருக்க முடியுமே அன்றி வேறு எதுவுமாக இருக்க முடியாது.

தமிழ் இனப் படுகொலை நடைபெறவில்லை என்று கூறும் சரத் பொன்சேகா, மைத்திரியின் மன்னிப் போடு பெற்ற பட்டம் என்பது, தமிழ் மக்கள் போட்ட பிச்சையின் பிச்சை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

எதுவாயினும் போர்க்குற்றம் தொடர்பில் சர்வ தேச விசாரணை என்பதை வலியுறுத்தி அதனை நடைமுறைப்படுத்துவதன் மூலமாகவே சரத் பொன் சேகா போன்ற இனவாதிகளை வேரோடு பிடுங்க முடியும் என்ற உண்மையை தமிழர் எவரும் மறந்து விடலாகாது. அதிலும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறந்துவிடக் கூடாது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila