மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாஹ் சாம்ராஜ்யம் சரிகின்றதா?

செயல்வீரன், துணிச்சல்மிக்க வல்லவன், மக்கள் சேவையாளன், காத்தான்குடியின் மண்ணின் மகிந்தன், காத்தான்குடியின் சாம்ராஜ்ய மன்னன் என்றெல்லாம் பெயர் பெற்றுக் கொண்ட முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், நாட்டு நிலைமையை சரியாகப் புரிந்து கொள்ளாது 25 வருட அரசியல் அனுபவம் முதிர்ச்சிமிக்கவர்,
 மஹிந்த கம்பனிக்கு ஆதரவளித்து தான் நின்ற அணி தோல்வியுற்றதனால் காத்தான்குடி என்ற சாம்ராஜ்யத்தில் ஹிஸ்புல்லாவின் கோட்டை சரியத் தொடங்கி விட்டதாகவே சொல்லப்படுகின்றது. காரணம் ஹிஸ்புல்லாஹ் என்ற அரசியல்வாதி எப்போதும் ஆளும் தரப்பினருடன் கைகோர்த்து நிற்பவர். 
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அமைச்சர் ரிஷாத் திடீரென்று மஹிந்தவுக்கு தான் ஆதரவளிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்து மைத்திரிக்கு ஆதரவு என்ற முடிவை ரிஷாத் எடுத்த போது ஹிஸ்புல்லாஹ் தான் மட்டும் மஹிந்தருக்குத்தான் ஆதரவு என்ற வெளிப்படையான முடிவை ஹிஸ்புல்லாஹ் எடுத்திருந்தார்.
அத்துடன் நிற்காது அமைச்சர் ரிஷாத்தின் கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற கோதாவில் அமைச்சர் ரிஷாத்திற்கு எதிராக தான் நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் ரிஷாத் தன்னிச்சையாக முடிவு எடுத்து விட்டார் என்றும் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருந்தார்.
ஹிஸ்புல்லாஹ் என்ற ஜாம்பவான் மஹிந்தருக்கு ஆதரவு வழங்கப் போய் காத்தான்குடியில் சற்றுச் செல்வாக்கு இழந்து தனித்து நிற்கின்றார். இழந்துள்ள தனது செல்வாக்கை மீளப் பெற ஹிஸ்புல்லாஹ் பல தந்திரோபாயங்ளைக் கையாள்வார். அதனால் காத்தான்குடியில் ரிசாத் அணியின் செல்வாக்குச் சற்று அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
காரணம் அண்மையில் அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஓட்டமாவடி, காத்தான்குடி, கல்முனை, பொத்துவில் ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்தார். அவருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடியில் ஒரு ஜாம்பவானாக இருந்தவர் ஹிஸ்புல்லாஹ். அவரது கோட்டைக்குள் இன்று ஹிஸ்புல்லாஹ் இல்லாமல் ரிஷாத் அணி படையெடுத்துள்ளதானது ஹிஸ்புல்லாவுக்குப் பின்னடைவா என்ற கேள்வி பலமாகத்தான் உள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அமைச்சர் ரிஷாத் அணி ஐ.தே.கவில் இணைந்து போட்டியிடவுள்ளது. மஹிந்தவை விட்டு அமைச்சர் ரிஷாத் வெளியேறுதற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்காவுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
அதன் போது ரிஷாத் அணிக்கு தேசியப்பட்டியல் எம்.பி ஒன்று வழங்கவும் ரணில் விக்கிரமசிங்க இணங்கியுள்ளதாகத் தெரிகிறது. அதனால் ஹிஸ்புல்லா ரிஷாத்தின் ஆதரவு இல்லாமல் ஐ.தே.க. வில் இணைந்து போட்டியிடும் வாய்ப்பு மிகவும் குறைவுதான். காரணம் ஐ,தே.கவில்தான் ஹக்கீம் தரப்பும் போட்டியிடவுள்ளது.
ஆனாலும் ஹிஸ்புல்லாஹ் ரிஷாத்தின் கட்சியை விட்டுச் செல்லவில்லை. ஹிஸ்புல்லாஹ் மஹிந்தருக்கு ஆதரவு வழங்கினார். ரிஷாத் மைத்திரிக்கு ஆதரவு வழங்கினார். ஆனால் ஹிஸ்புல்லாஹ் அடக்கி வாசித்திருக்கலாம்.
இருந்தாலும் ரிஷாத் கட்சியில் ஹிஸ்புல்லாஹ்வை இணைக்கலாம் அதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. அதற்கான வழியை சிப்லி திறந்து விட்டார். அப்படியானால் ஐ.தே.கவில் ஹிஸ்புல்லாஹ் போட்டியிடக் கூடிய அதிக வாய்ப்புள்ளது.
வெற்றிக்கான வாய்ப்பும் அதிகமாகவே உள்ளது. சிப்லி அவசரப்பட்டு விட்டார். அதன் பலன்தான் ஹிஸ்புல்லாவுக்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்தி விட்டது.
இந்த நிலையில் ஹிஸ்புல்லா மீண்டும் அமைச்சர் ரிஷாத் அணியில் இணைந்து போட்டியிடலாம். அல்லது சந்திரிகா மைத்திரியூடாக சுதந்திரக் கட்சியில் போட்டியிடலாம். ஹிஸ்புல்லாவைப் பொறுத்த மட்டில் அவர் எந்தக் கட்சியிலும் போட்டியிடலாம்.
ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஒரு போட்டியாக உருவெடுத்த மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் மு.கா வுக்கு மாறிய பின்பு சரிந்து போன ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவு என்பது கட்டியாக உள்ளது என்பதுதான் உண்மை.
அதனால் ஹிஸ்புல்லாஹ் சுதந்திரக்கட்சியில் போட்டியிடலாம். சுதந்திரக் கட்சிக்கு காத்தான்குடியில் ஒட்டு மொத்தமாக காத்தான்குடி மக்கள் வாக்களித்தால் ஹிஸ்புல்லாஹ் வெற்றியடையலாம். ஆனால் அங்கு மாகாண சபை உறுப்பினர் ரிஷாத் அணியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.அத்துடன் நல்லாட்சிக்கான இயக்கம் சுமார் 4 ஆயிரம் வாக்குகளைப் பிரிக்கும்.
இந்த நிலையில் ஹிஸ்புல்லாஹ்வின் பின்னடைவு எப்படிச் சரி செய்யப்படும் என்ற கேள்வி பலமாகத்தான் உள்ளது. இதே நேரம் ஏறாவூரில் அலி சாஹிர் மௌலானா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஏறாவூரில் இருந்து நஸீர் ஹாபீஸ் களமிறங்குகின்றார். நஸீர் ஹாபீஸ் வெற்றியடைந்து மத்திய அரசுக்குச் சென்றால் அலிசாஹிர் மௌலானா முதலமைச்சராகின்றார்.
இதுதான் ஏறாவூர் ஒப்பந்தம்.அம்பாரைக்கு முதலமைச்சர் பதவி சென்றால் தற்போதைய ஹசன் அலி என்கின்ற பிரதி அமைச்சர் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்கு தலைமை தாங்க முடியாதாம். அதனால்தான் முதலமைச்சர் பதவி மட்டக்களப்புக்குச் சென்றுள்ளது என்று சொல்லப்படுகின்றது.
சிப்லி பாறூக்கின் கருத்து ஏற்புடையதா?
காத்தான்குடியில் சிப்லி பாறூக் இன்று ஹிஸ்புல்லாஹ்வை விட சற்று அதிக ஆதரவில் உள்ளார். அனால் அவர் வந்த வேகத்தில் மு.கா முதலமைச்சர் விடயத்தில் மு.கா வுக்கு தன்னிச்சையாக ஆதரவு வழங்கிதுடன் கட்சித் தலைமைக்குத் தெரியாமல் மு.கா.வுக்கு ஆதரவு வழங்கியதன் பின்னணியில் சிப்லியின் ஆதரவை மங்கச் செய்து விட்டார்கள்.
காரணம் சிப்லி காத்தான்குடியில் ரிஷாத் அணியூடாக ஐ.தே.க. யில் களமிறங்கினால் ஹிஸ்புல்லாஹ்வுக்குப் பெருத்த சவால்தான். ஆனால் திட்டமிட்டு ரிஷாத் அணியின் சிப்லி மு.கா வுக்கு திசை திருப்பப்பட்டுள்ளார்.
காரணம் காத்தான்குடியில் மு.கா.வுக்கு ஆதரவு குறைவு சிப்லி திசை திருப்பப்பட்டுள்ளதனால் ஹிஸ்புல்லாஹ்வின் வெற்றி வாய்ப்பு இன்னும் விட்டுச் செல்லவில்லை எனலாம்.
மு.கா வுக்கு தன்னிச்சையாக ஆதரவு வழங்கிய சிப்லி சொல்லும் காரணம் முதலமைச்சர் முஸ்லிம்களுக்கு வேண்டுமாம்.
அதை தமிழர் கொண்டு சென்று விடுவார்களாம். அதை விடாமல் தடுத்து முஸ்லிம்கள் பக்கம் கொண்டு வந்துள்ளாராம். இந்த சிப்லி முஸ்லிம் தமிழர் மத்தியில் விஷம் விதைப்பது மாதிரி இல்லையா.
இந்த முதலமைச்சரால் முஸ்லிம் இனம் ஒரு நன்னையும் அடையப் போவதில்லை. ஆனால் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒரு கசப்பை ஏற்படுத்தயுள்ளது.
ஹிஸ்புல்லாஹ் கூட மனக்கசப்பு என்றாலும் இந்த முதலமைச்சர் பதவியை பிள்ளையானுக்கு விட்டுக்கொடுத்திருந்தார். பிள்ளையான் முதலமைச்சராக இருந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு ஏதும் அநியாயம் நடந்துள்ளதா. பிள்ளையான் செய்யாத, செய்ய நினைக்காத அநியாயத்தையா கூட்டமைப்பு செய்யப் போகின்றது.
இந்தக் கதிரையில் ஒன்றுமில்லை. ஆனால் வடக்கில் கிழக்கில் தமிழர்கள் ஆட்சியுள்ளதாக வெளிநாடுகளில் பறைசாற்றலாம். தமிழர் தரப்புக்கு எதிரான அரசியல் முன்னெடுப்புக்கள், தமிழர் விரோதச் செயல்பாடுகள் போன்ற மனித நேயமற்ற செயல்களால் முஸ்லிம் சமூகம் இன்று மிகவும் ஆதாள பாதாளம் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.
முஸ்லிம்களுக்குப் பாதிப்பில்லாத நன்மைகள்
வடக்கிலோ அல்லது கிழக்கிலோ முஸ்லிம்களுக்கு தீங்கில்லாத, ஆபத்தில்லாத முன்னெடுப்புக்களை தமிழர் தரப்பு செய்வதில் என்ன தப்புள்ளது. தமிழர் தரப்பு எவ்விதமான நன்மைகளும் பெறக் கூடாது என்று தமிழர் தரப்பை கிள்ளுக் கீரையாக சிங்களவர்கள் போன்று முஸ்லிம் அரசியல் வியாபாரிகளும் நினைத்து ஒதுக்கி வந்தால் முஸ்லிம்களின் எதிர்கால அரசியல் பிழையான பாதையில் செல்கின்றது என்பதை முஸ்லிம் சமூகம் சிந்திப்பதில்லையா.
தமிழர்களை இன்னும் இன்னும் எட்டி உதைத்துக் கொண்டு முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் அரசியல் பிழைப்பு நடத்தி வருவதற்கு ஒருநாள் அதிக விலை கொடுக்க வேண்டிவரும் என்பதை மீண்டும் மீண்டும் எத்தி வைப்போம்.
முஸ்லிம்கள் என்றால் விட்டுக் கொடுப்பு.சகிப்புத் தன்மை ,வாக்குச் சுத்தம், நீதி, நேர்மை இப்படி அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஆனால் இதில் ஏதாவது ஒன்று இந்த முஸ்லிம் அரசியல் வியாபாரிகளிடம் உள்ளதா. அத்தனை முஸ்லிம் அரசியல் வியாபாரிகளும் நெஞ்சைத் தொட்டுச் சொல்லட்டும். செத்த சவத்தின் மேல் நின்று கொண்டு உணவு உண்பது போல் நடப்பது முஸ்லிம் இனத்திற்கே அவமானம்.
கேவலம் இந்த ஈனச் சாதிகள் தமிழ் முஸ்லிம் கலவரம் ஒன்றிற்கு வித்திடுகின்றார்கள். இனமுறுகல் முத்தி விட்டது. 
முதலமைச்சர் பதவி என்பது தனிநபரை அழகுபடுத்தும் பதவி என்றும் அதுவெறும் கதிரைதான் என்றும் அண்மையில் மு.கா. செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்திருந்தார்.
அதுதான் உண்மை. ஆனால் இந்த முதலமைச்சரை கூட்டமைப்பக்கு விட்டுக் கொடுக்காத காரணம் மு.கா.வுக்கு முதலமைச்சர் பதவி கிடைக்காது போனால் முஸ்லிம்கள் மு.கா.வுக்கு வாக்களிக்கமாட்டார்களாம் என்று மு.கா. கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளது. அப்படியானால் முஸ்லிம்களை ஏமாற்றவும் ஏமாற்றி வாக்குப் பெறவும் இந்த முதலமைச்சர் என்ற கதிரையை பலாத்காரமாக பின்கதவு வழியாக மு.கா. பெற்றுள்ளது என்பதுதானே உண்மை.
பாருங்கள் சாய்ந்தமருதுவில் ஒருவர் தனக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்ற கனவில், நப்பாசையில் ஹக்கீமுக்கு குரல் கொடுத்து வந்தார். ஆனால் தனக்கு பதவி கிடைக்கிவில்லை என்ற போது கட்சித் தலைமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம், பொம்மை கட்டி அடித்தல் போன்ற அநாகரீக செயலில் ஈடுபட்டார்கள்.
உடன் அவரைக் கட்சியில் இருந்து நீக்கினார்கள். பின்பு சுமார் 24 மணிநேரத்திற்குள் பாவமன்னிப்பு என்ற ரீதியில் கட்சிக்குள் சேர்த்துக் கொண்டார்கள். இது கட்சியா, கசாப்புக் கடையா? ஒரு கொள்கை கட்சிக்கு உள்ளதா அல்லது கட்சியின் உறுப்பினர்களுக்கு உள்ளதா? ஏன் முஸ்லிம்கள் இப்படி கேவளமான அரசியலில் இறங்கியுள்ளார்கள்.
அதெல்லாம் இல்லப்பா, தமிழன் முதலமைச்சராக வரக் கூடாது. அதற்காக முஸ்லிம்கள் நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம். அதுதான் எங்கள் கொள்கை. அது மட்டுமல்ல தமிழன் எதுவும் பெறவும் கூடாது அதற்கு நாங்கள் விடவும் மாட்டோம்.
சிங்களக் கட்சிகளுடனும் சிங்களத் தலைவர்களுடன்தான் ஒட்டி உறவாடுவோம் இதுதான் எங்கள் கொள்கை. அதில் சகோதர இனம் அழிந்தால் என்ன, செத்தால் என்ன. நமக்கு வேண்டும் பதவி. அதுதான் எங்கள் லட்சியம். அதற்காக நாங்கள் எனன் வேண்டுமானாலும் செய்வோம். நல்ல கொள்கை நாசமாகப் போக.
இன ஐக்கியத்திற்கு சாவு மணி அடித்து இன ஒற்றுமையை தூக்கி எறிந்து விட்டு அவசர அவசரமாக ஏறாவூர் நஸீரைக் கொண்டு முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துள்ளதானது, தமிழர் மத்தியில் முழு முஸ்லிம்கள் மீதும் ஒரு வெறுப்புத் தன்மையை ஏற்படுத்தியுள்ளது.
காலா காலங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்துதான் இனக்கலவரம் ஏனைய மாவட்டத்திற்கும் இறக்குமதியாகி வந்தது. இப்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தான் இனமுறுகல் விரிவடைந்துள்ளது.
ஐ.தே.க.யுடன் இணைந்து மு.கா.போட்டி
இதேநேரம் முஸ்லிம் காங்கிரஸ் இம்முறையும் ஐ.தே.க. யில் இணைந்து போட்டியிடவுள்ளதாக மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தான் கண்டியில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனாலும் அப்படி ஹக்கீம் சொன்னாலும் மக்களின் கவனத்தை ஹக்கீம் திசை திரப்புவதற்காகவே கண்டியில் போட்டியிடவுள்ளதாகச் சொல்லியுள்ளார்.
கண்டியில் அஸாத் சாலி பெரும் வெற்றியடைவார். அப்படி ஹக்கீம் கண்டியில் போட்டிட்டால் அஸாத் சாலியிடம் தோல்வி அடைவார். இந்தக் கணக்கை ஹக்கீம் பார்க்காமலா விடுவார். ஹக்கீம் திருகோணமலையில் போட்டியிடும் அதிக வாய்ப்புள்ளது.
இப்போதே கிண்ணியா, மூதூரில் தளம் அமைத்து களம் கண்டு வருகின்றார். ஆனாலும் திருகோணமலையில் ஹக்கீம போட்டியிடுவதற்கு பாரிய எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
ஐ.தே.க.யின் யானைச் சின்னத்தில் மு.கா போட்டியிடுதற்கு ஐ.தே.க.யின் தேசிய அமைப்பாளர் அம்பாறை தயா கமகே தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். அதனால் ஐ.தே.கயுடன் மு.கா இணைந்து போட்டியிடுமா அல்லது தனியாக களமிறங்க வேண்டி வருமா என்பது நாடாளுமன்றம் கலைககப்பட்ட பின்புதான் அறிய வரும்.
மட்டக்களப்பில் மு.கா காத்தான்குடியில் இருந்து ஒருவர் அது சிப்லியாக இருக்கலாம், ஏறாவூரில் முதலமைச்சர் நஸீர் அஹமட்(ஹாபீஸ்) அலிசாஹிர் மௌலானா, ஓட்டவாவடி வேட்பாளர் அமீர் அலி ஆகிய மூன்று அணியினரும் ஐ.தே.க.யில் இணைந்து போட்டியிட்டால் இரண்டு எம்பிக்களை முஸ்லிம் அணி பெறும்.அதில் ஓட்டமாவடி மற்றும் காத்தான்குடியில் எம்பிக்ள் வெற்றியடைய அதிக வாய்ப்புள்ளது. காரணம் ஏறாவூhல் மனாப்பைப் போட்டியுள்ளது. காத்தான்குடி மற்றும் ஊட்டமாவடியில் தலா ஒருவர் வீதம் களமிறங்கினால் இந்த வெற்றி நிச்சயமே.
ஆனால் இந்த மூன்று அணிகளும் ஒரே அணியில் போட்டியிட்டால் அணிக்குள் சக்களத்திச் சண்டை அதிகரிக்கும். அணிக்குள் மனாப்பைப் போட்டி அதிகரிக்கும். ஓட்டமாவடி, வாழைச்சேனையில் வாக்குச் சிதறல் ஏற்படுமானால் மீண்டும் ஓட்டமாவடி ஆசனம் இல்லாமல் போய்விடும்.
ஆனால் காத்தான்குடியில் நல்ல அலையோடு பிந்திய களத்தில் முன்னணியில் திகழ்ந்த மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், ரிஷாத் அணியை விட்டு மு.கா அணியில் சங்கமித்து வருவதால் ஹிஸ்புல்லாவின் மங்கிச் சென்ற ஆதரவு அதிகரிக்க அல்லது மீண்டும் வெற்றிபெறக் கூடிய அதிக வாய்ப்புள்ளது.
அதாவது ஹிஸ்புல்லாஹ் எந்தப் பக்கம் சென்றாலும் வெற்றியடையக் கூடிய வாய்ப்புள்ளது. ஹிஸ்புல்லாஹ்வின் சரிந்து சென்ற ஆதரவை சிப்லி பாறூக் ஓரளவு சரி செய்துள்ளார் எனலாம். கல்குடா ஆசனம் இம்முறை காப்பாற்றப்பட வேண்டுமானால் ஓட்டமாவடி மக்கள் ஒன்றிணைய வேண்டும்.
வாழைச்சேனை மக்கள் மட்டும் தனியாக ஒருபக்கமாக முஸ்லிம் காங்கிரஸ் அணிக்கு வாக்களித்து எம்.பி பெற முடியாது. வாழைச்சேனை மக்கள் தனித்து நின்று இலக்கை அடைய முடியாது. அதனால் வாழைச்சேனை மக்கள் ஒன்றுபட வேண்டும்.
காத்தான்குடியில் பெருமளவு மக்கள் அமைச்சர் ரிசாத்தின் பின்னால் அணிதிரண்டுள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தொகுதியில் சுமார் 36 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளார்கள்.
ஆனால் கடந்த காலங்களாக கல்குடா தொகுதி ஓட்டமாவடி முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.க. மற்றும் அரசு அணி என்று நாலா பக்கமும் இந்த ஓட்டமாவடி மக்கள் வாக்குகளைச் சிதறடிப்பதனால் ஓட்டமாவடி எம்.பி பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடுகின்றது.
கடந்த பொதுத் தேர்தலில் ஓட்டமாவடிப் பிரதிநித்திதுவம் 84 வாக்குகளால் இல்லாமல் போய்விட்டது. இம்முறை அந்தத் தவறை தாங்கள் செய்யமாட்டோம் என்கின்றார்கள் ஓட்டமாவடி மக்கள்.
ஓட்டமாவடி முஸ்லிம் ஆசனத்தை இல்லாமல் செய்வதற்காக தோற்கடிப்பதற்காக இன்று பலர் புதிதாக அரசியிலில் குதிப்பதற்காக ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனையில் களமிறங்கவுள்ளதாக அறிய வருகின்றது.
அந்தளவு அவர்களுக்கு ஆசை வார்த்தைகளும் பசப்பு வார்த்தைகளும் பேசப்பட்டு வருவதாக அறிய வருகின்றது. ஆனால் ஊரின் ஆசனத்தை இவர்கள் இல்லாமல் செய்வதற்காக ஓட்டமாவடி ஆசனத்தைச் இழக்கச் செய்து ஏறாவூருக்கு ஹக்கீம் வகையறாக்களை வாழவைக்க பார்க்கின்றார்கள் என்கின்றனர் ஓட்டமாவடி வாக்காளர் மக்கள்.
அம்பாறையில் அமைச்சர் ரிஷாத்துக்கு அதிகரிக்கும் ஆதரவு
அம்பாறையில் அமைச்சர் ரிஷாத் மு.கா அளவுக்கு ஆதரவில் உள்ளார். இதனால் அம்பாரையில் ரிஷாத்தின் ஆதரவு வளையத்தை மு.கா உடைக்க வேண்டிய தேவையில் உள்ளது.
இம்முறை அம்பாறையில் ஐ,தே.க. சார்பாக ரிஷாத் அணி ஒரு ஆசனம் வெல்லக் கூடிய நிலையுள்ளது. அம்பாறையில் மு.கா தனித்தும் ரிஷாத் அணி ஐ,தே.க.யுடன் இணைந்து போட்டியிட்டால் மு.கா பெரும் சவாலைச் சந்திக்க வேண்டிவரும்.
காத்தான்குடி சிப்லி அவசரப்படா விட்டால் ரிஷாத்தின் தேசியப் பட்டியல் ஆசனம் மூலமாக சிப்லி எம்பியாக நியமிக்கப்பட்டிருக்கலாம். அதனால் அந்த வாய்ப்பு கல்முனை ஹமிட்டுக்குச் செல்ல அதிக வாய்ப்புள்ளது. ஏன் என்றால் ஓட்டமாவடி அமீர் அலி ஓட்டமாவடியில் தோல்வியுற்றால் அவர் தேசியப் பட்டியல் ஆசனம் மூலமாக எம்பியாக நியமிக்கப்படவுள்ளதாக சிறிகொத்தா வட்டாரத் தகவல்கள் சொல்கின்றன.
ஆனால் இம்முறை ஓட்டமாவடிக்கு எம்பி ஆசனம் வேண்டும் என்று ஊர் மக்கள் ஆவேசத்தில் உள்ளார்கள். அதனால் அமீர் அலியின் வெற்றி என்பது ஓட்டமாவடியின் வெற்றியாகப் பார்க்கப்படுகின்றது.
எம்.எம்.நிலாம்டீன்
mmnilamuk@gmail.com
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila