உள்நாட்டு விசாரணை தீராத தலைவலி!

மைத்திரிபால சிறிசேன - ரணில் விக்ரமசிங்க கூட்டு அரசாங்கம் அரசியல் ரீதியான சவால்களைப் பெரும்பாலும் வெற்றி கொண்டு விட்ட போதும் இன்னமும் நிம்மதிப் பெருமூச்சு விடமுடியாத நிலையில் தான் இருக்கிறது.
அடுத்தடுத்து தேர்தல்களை எதிர்கொண்டு மகிந்த ராஜபக்சவின் பலமான சவால்களையும் சமாளித்து புதிய அரசாங்கத்தை அமைத்து விட்டாலும் நிம்மதியாக அவர்களால் உறங்க முடியாதுள்ளது.
அண்மையில் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தானும் ஜனாதிபதியும் உறக்கமற்ற சாரதிகள் என்று குறிப்பிட்டிருந்தார்.
தாம் உறங்கிப்போனால் அரசாங்கத்தை இன்னொருவர் பறித்துக்கொண்டு போய்விடக்கூடும் என்ற தொனியில் அவர் அவ்வாறு குறிப்பிடவில்லை. தூக்கத்தைக் கெடுக்கின்ற பிரச்சினைகள் அவர்கள் முன்பாக இருக்கின்றதால் தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
தற்போதைய அரசாங்கம் எதிர்கொள்கின்ற மிகப்பெரிய நெருக்கடி போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறல் சார்ந்தது தான்.
மகிந்த ராஜபக்சவுக்கும் இந்த நெருக்கடி வந்தது. அவர் எந்த விசாரணையும் மேற்கொள்ள முடியாது என்ற அதிகாரத்தனத்துடன் கூறித் தட்டிக்கழித்தார். அதன் விளைவாக அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களை எதிர்கொண்டது.
ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதானே இந்த அழுத்தம் வருமென்று அலட்சியமாக கூறிவிட்டிருந்தார் அவர்.
ஆனால் இப்போதைய அரசாங்கத்தினால் அவ்வாறு கூற முடியாது. அதேபோல நிம்மதியாக இருக்கவும் முடியாது.
உள்நாட்டில் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரித்துப் பொறுப்புக் கூறுவோம் என்ற வாக்குறுதியை வெளிநாடுகளுக்குக் கொடுத்து தான் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது.
சர்வதேச சமூகத்துக்கு கொடுத்துள்ள இந்த வாக்குறுதியை முறையாக நிறைவேற்றுவது தான் இப்போதைய அரசாங்கத்தின் பிரதான சவால்.
உள்நாட்டு போர்க்குற்ற விசாரணைக்கு அமெரிக்கா இணங்கிவிட்டது. ஐநா மனித உரிமைகள் பேரவையில் அதற்கு ஆதரவான ஒரு தீர்மானத்தை அமெரிக்காவே கொண்டுவந்து நிறைவேற்றப் போகிறது என்பதெல்லாம் இலங்கைக்கு சாதகமான விடயம் தான்.
ஆனால் கழுத்துக்கு மேலாக தொங்கிக் கொண்டிருந்த கத்தி இப்போது சற்று கீழாக இறங்கி நெஞ்சுக்கு நேராக வந்து நிற்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம்.
உள்நாட்டு விசாரணை என்பதால் சர்வதேச சமூகத்தை இலகுவாக ஏமாற்றிவிடலாம் என்று அவ்வளவு இலகுவாக கணக்குப் போட முடியாது.
இலங்கையை அமெரிக்கா காப்பாற்ற முன்வருகிறது என்றாலும் அதிலும் சில விடயங்களை எதிர்பார்க்கவே செய்யும்.
நாளை தொடங்கவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் 30வது அமர்வில் கொண்டுவரப்படும் தீர்மானத்தில் தான் உள்நாட்டு விசாரணை எப்படிப்பட்டதாக அமைய வேண்டும் எந்தக் காலவரையறைக்குள் நடக்க வேண்டும் என்றெல்லாம் கூறப்படும்.
அதுகூடப் பிரச்சினையல்ல. உள்நாட்டு விசாரணையை செயற்படுத்துவது தான் முக்கியமான பிரச்சினைக்குரிய விடயம்.
அரசாங்கத்தினால் ஒரு விசாரணைப் பொறிமுறைக் கட்டமைப்பை உருவாக்குவது ஒன்றும் கடினமானதல்ல.
அதனைக்கொண்டு விசாரணைகளை முன்னெடுப்பதுதான் சிக்கலானது. போரில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தவர்களை விசாரிக்கவோ தண்டிக்கவோ கூடாது. என்ற மனோநிலையில் இருக்கும் பெரும்பான்மையான சிங்கள மக்களையும் உள்நாட்டு விசாரயைின் மூலம் தமக்கு நியாயம் கிடைக்காது என்று அவநம்பிக்கையில் இருக்கும் தமிழ் மக்களையும் ஒரே நேர்கோட்டுக்கு கொண்டு வந்தால் தான் இந்த விசாரணை சாத்தியமாகும். உள்நாட்டு விசாரணைகளைப் பொறுத்தவரையில் அரசாங்கத்தரப்பில் உள்ள படைத்தரப்பில் உள்ள அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும்.
அதேவேளை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும் ஒத்துழைக்க வேண்டும். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உள்நாட்டு விசாரணையின் மூலம் தமக்கு நியாயம் கிடைக்கும் என்று துளியளவு நம்பிக்கையும் இல்லாத நிலையில் உள்ளனர்.
காணாமல்போனோரைக் கண்டுபிடிப்பதற்காக என்று அமைக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு உள்நாட்டு விசாரணை மீதான கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் பாழ்படுத்திவிட்ட நிலையில் தமிழ் மக்களின் தரப்பில் இருந்து ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதும் பெறுவதும் மிகக் கடினமானது.
அவ்வாறு ஒரு பகுதி தமிழ் மக்கள் உள்நாட்டு விசாரணைகளுக்கு ஒத்துழைக்க முன்வந்தாலும் கூட அரசாங்கத் தரப்பிலோ படைத்தரப்பிலோ இருந்து விசாரகை்கு ஒத்துழைப்பு கொடுக்கப்படுமா என்ற கேள்வி இருக்கிறது.
விடுதலைப் புலிகளை போரில் தோற்கடித்த படையினரையோ அவர்களை வழிநடத்திய அரசியல் தலைமையை விசாரிக்கவோ தண்டிக்கவோ கூடாது என்ற கருத்து அடிமட்ட சிங்கள மக்களில் இருந்து உயர்மட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் வரை பரவியிருக்கின்றது. இத்தகைய நிலையில் அவர்களிடம் இருந்து எப்படி ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியும்?
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணமல்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு லெப்.கேர்ணல் தர அதிகாரிகளை கைதுசெய்ய முயன்றபோது அதற்கு பாதுகாப்புச் செயலராக இருந்த பி.எம்.யூ.டி. பஸ்நாயக்கவும் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
காரணம் அந்த இரண்டு இராணுவ அதிகாரிகளும் போரில் முக்கிய பங்காற்றியவர்கள். அதனால் அவர்களைக் கைது செய்யவோ தண்டிக்கவோ கூடாது என்பது தான்.
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மீது தாம் அளவுகடந்த மதிப்பு வைத்திருப்பதாகவும் அதனால் அவரைக் காப்பாற்ற பொயச்சாட்சி கூறியதாகவும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் ஊழல் மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்துள்ளதாக ஒரு தகவல்.
ஊடகவியலாளர் பிரகீத எக்னெலிகொடவை தடுத்து வைத்திருந்த கிரித்தல இராணுவ முகாமுக்குள் சென்று தேடுதல் நடத்த நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவு அனுமதி கோரிய போது அதற்கு இராணுவத்தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேடுதல் நடத்தப்படுவதும் பதிவேடுகளை ஆராய்வதும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று இராணுவத்தரப்புக் கூறியிருக்கிறது.
போரில் வெற்றியைப் பெற்றுத் தந்தவர்கள் நீதி்துறை முன் நிறுத்தப்படக் கூடாது என்ற எந்த விதிமுறையும் கிடையாது. அவர்கள் எந்த சட்ட நடவடிக்கையில் இருந்தும் விதிவிலக்குப் பெற்றவர்களுமல்ல.
ஆனாலும் அவர்களைப் பாதுகாக்க அதிகார மட்டத்தில் இன்னமும் பலர் இருக்கின்றனர். குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானோரை பாதுகாக்கும்  விசுவாசம் கொண்டோரை அவ்வளவு இலகுவாக வழிக்குக் கெண்டுவர முடியாது.
குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானோரை பாதுகாக்க முனையும் அதிகாரிகளை இந்த அரசாங்கம் எப்படி சமாளிக்கப் போகிறது என்பது முக்கிமான கேள்வியாக இருக்கிறது.
விசாரணைகளுக்கு இராணுவத்தின் ஒத்துழைப்பு முக்கியமானது. இராணுவ முகாம்களில் தேடுதல்கள் நடத்துவதும் பதிவேடுகளை ஆராய்வதும் ஒரு கட்டமாகவே இருக்கும்.
ஏனென்றால் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் பலர் காணாமல் போயிருக்கிறார்கள். தாம் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட சித்திரவதைகள், செய்யப்பட்ட இடங்கள் பற்றிய தகவல்களை பலர் வெளியிட்டிருக்கிறார்கள். இப்படியான நிலையில் இராணுவ முகாம்களையும் படையினரையும் உள்நாட்டு விசாரணை தரப்பில் இருந்து எப்படி மீட்டக முடியும்?
தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி இதையெல்லாம் நிராகரித்தால் நியாயமான உள்நாட்டு விசாரணை எவ்வாறு மேற்கொள்ள முடியும்?
உள்நாட்டு விசாரணை விடயத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்து பி.என்.யூ.டி. பஸ்நாயக்க கடும்போக்குள்ளவராகவே இருந்ததாகத் தகவல்.
அவர் இப்போது அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டிருக்கிறார். அது உள்நாட்டு விசாரணையை இலகுபடுத்தும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
ஆனாலும் படைத்தரப்பில் இருந்து விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு பெறுவது கடினமானது.
உயர் அதிகாரிகளையும் தம்மை வழிநடத்தியவர்களையும் பாதுகாக்கும் கவசமாக இருப்போர் விசாரஒகளை நேர்த்தியாக மேற்கொள்வதற்கு தடையாகவும் தடங்கலாகவுமே இருப்பர்.
இந்தப் பிரச்சினையை அரசாங்கம் எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதுதான் மிகப் பெரிய கேள்வி.
மைத்திரிபால சிறிசேனாவோ ரணில் விக்ரமசிங்கவோ கூட இதே மனநிலையில் உள்ளவர்கள் தான்.
என்றாலும் வெளியுலக அழுத்தங்களால் அவர்களைச் சற்று வளைந்து கொடுக்க இணங்கினாலும் போர்க்கால மீறல்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்த படைத்தரப்பினரோ ஏனைய அதிகாரிகள் வட்டமோ தயாராக இருக்கப்ப போவதில்லை.
அவர்களை இத்தகைய விசாரணைக்குத் தயார்ப்படுத்தும் திறன் தற்போதைய அரசாங்கததுக்கு இல்லையென்றே தெரிகிறது.
இந்தத் திறனை தற்போதைய அரசாங்கம் பெறாதவரையில் உருப்படியான உள்நாட்டு விசாரணையை நடத்த முடியாது. அவ்வாறு நடத்த முனைந்தாலும் அது தோல்வியாகவே அமையும்.
உள்நாட்டு விசாரணை என்பது இப்போதைக்கு அரசாங்கத்துக்கு சற்று மூச்சு விடும் அவகாசத்தைக் கொடுக்கலாம். ஆனால் அது நிரந்தரமான விடுதலையாக இருக்காது.
சுபத்ரா
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila