துன்பம் தரும் ஆசிரியர் இடமாற்றம்! பொருத்தமான பொறிமுறை அவசியம்

பாலும் சோறும் உண்ணத்தந்து படிக்கச் சொல்லும் அம்மா...அழுதிடாமல் பள்ளிக்கூடம் அழைத்துச் செல்லும் அம்மா... பள்ளிக்கூடம் விட்ட நேரம் பாதி வழிக்கு வந்து...  வித்துவான் வேந்தனாரால் இயற்றப்பட்டு அன்றைய நாளில் நாங்கள் பாடியது இந்தப் பாடல்.
இன்று பாடலுமில்லை... பாற்சோறுமில்லை. ஆம் வன்னிக்கு ஆசிரிய இடமாற்றம் பெற்ற ஒரு அம்மாவால் பள்ளிக்கூடம் விட்ட நேரம் பாதிவழிக்கு வந்து எங்ஙனம் பிள்ளையைத் தூக்கமுடியும்?
வன்னிக்கான ஆசிரியர் இடமாற்றம் என்பது கல்வித்துறை சார்ந்த அனைவரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் இருந்து வன்னி மாவட்டங்களுக்கு ஆசிரியர் இடமாற்றங்களை வழங்கும் போது, 99 சதவீதமான ஆசிரியர்கள் தமது இடமாற்றத்தை ரத்துச் செய்யும்படி மேன்முறையீடு செய்கின்றனர்.
இவ்வாறு மேன்முறையீடு செய்கின்றவர்களின் காரணங்களைப் பார்க்கும் போது, உடல் சுகவீனம், சிறுபிள்ளைகளின் பராமரிப்பு, வயதுபோன பெற்றோர்களின் பராமரிப்பு என்றவாறாக இருக்க கூடவே, குழந்தை இல்லாக்குறைக்கு சிகிச்சை பெறுகிறோம்,  குழந்தைப்பேறு சுகப்பிரசவமாக இல்லாமல், சத்திர சிகிச்சை மூலமாகவே பிரசவம் நடந்தது. இதனால் தூரப்பயணம் கடினமானது என்ற காரணங்களும் இணைந்து கொள்கின்றன.
அக்ரஹாரா காப்புறுதி என்று அறிமுகமாகியதோ அன்றிலிருந்து வடக்கு மாகாணத்தில் அரசபணியாளர்களுக்கு சுகப்பிரசவம் என்பது இல்லாமல் போயிற்று என்ற உண்மையையும் இவ்விடத்தில் சொல்லித்தானாகவேண்டும்.
இது ஒரு புறம் இருக்க, வன்னி மாவட்டங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள் எங்களுக்கு யாழ். மாவட்டத்திற்கு இடமாற்றம் தாருங்கள் என்று கேட்பதிலும் நிறைந்த நியாயம் இருக்கின்றது.
இந்த இரண்டு நியாயப்பாடுகளின் மத்தியில்; வடக்கு மாகாணத்தின் கல்வி அமைச்சர், கல்விச் செயலர், மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப் பாளர்கள், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் என சகல தரப்பினரும் மிகப்பெரும் நிர்வாகச் சிக்கல்களையும் மன உளைச்சலையும் எதிர்கொண்டுள்ளனர்.
அதாவது இடமாற்றம் தாருங்கள் என்கின்ற வன்னி மாவட்ட ஆசிரியர்கள் ஒரு புறம். இடமாற்றம் வேண்டாம் என்று கெஞ்சுகின்ற யாழ்.மாவட்ட ஆசிரியர்கள் மறுபுறம் என்ற இரு தரப்பிற்குமிடையில் தீர் மானம் எடுத்தல் என்பது மிகக்கடினமான விடயம்.
அதேசமயம் விருப்பமில்லாத இடமாற்றம், விருப்பமில்லாத இடத்தில் சேவை என்ற இரண்டும் கற்பித்தல் என்ற செயற்பாட்டை வினைத்திறனுடையதாக்காது.
எனவே, ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் பொருத்தமான பொறிமுறை ஒன்று உருவாக்கப்படுவது அவசியம்.
குழந்தை உள்ள ஆசிரியர் ஒருவரை வன்னிக்கு இடமாற்றம் செய்வது பொருத்தமற்றது என்பதை வடக்கின் கல்வி அமைச்சர், கல்விச் செயலாளர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் உட்பட அனைவரும் ஏற்றுக் கொள்வர். அப்படியானால் இடமாற்றம் ஏன் வழங்கப்படுகின்றது? என்ற கேள்வி ஏற்படும்.
இங்குதான் மாற்றுவழி இல்லை என்ற பதில் வெளிப்படும். குறித்த பதில் நியாயமானதாயினும் ஆசிரியர் இடமாற்றம் எனும் போது எழுகின்ற சோகக் கதைகளும் கண்ணீர் விட்டு அழும் நிலைகளும் பரிதாபத்திற்குரியவை என்பதால், வடக்கு மாகாண அரசு ஆசிரிய இடமாற்றம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
இடமாற்ற முரண்பாட்டை சமன் செய்யும் வகையில் புதிய ஆசிரியர் நியமனம் பற்றிச் சிந்திப்பது பொருத்தமானது.
குறிப்பாக வன்னி மாவட்டத்தில் தகைமை உள்ளவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி, அவர்கள் தங்களது சொந்த இடங்களில் நீண்டகாலம் பணி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது பொருத்தமான பொறிமுறைகளில் ஒன்றாகும்.
எனவே ஆசிரிய நியமனம் தொடர்பில் வடக்கு அரசு அவசரமாகச் சிந்திப்பது கட்டாயம்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila