புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் முன்பாகவுள்ள பொதுமக்களின் காணிகள் எதிர் வரும் 17ஆம் திகதி, இராணுவத்தினரிடம் சட்ட பூர்வமாக ஒப்படைக் கப்படவுள்ளன.
அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குப் பணிப்புரை விடுத்துள்ளார் என்று தெரியவருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 44 ஏக்கர் காணி இராணுவத் தேவைக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளது என்ற வர்த்தமானி அறிவித்தல் கடந்த வருடம் வெளியிடப்பட்டது.
விசுவமடு மேற்கில் 3 ஏக்கர் காணியும், மாணிக்கபுரத்தில் 2 ஏக்கரும், சுதந்திரபுரத்தில் 20 ஏக்கர் தென்னங்காணியும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள 19 ஏக்கர் காணியும் அதில் உள்ளடங்குகின்றன.
இந்தக் காணிகன் காணி சுவீகரிப்புச் சட்டத்தின் 38 (ஏ) பிரிவின் கீழ் சுவீகரிக்கப்பட்டுள்ளன. சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளில், விசுவமடு மேற்கு மற்றும் மாணிக்கபுரத்தில் உள்ள காணிகள் கடந்த 3 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் எஞ்சிய காணித் துண்டுகளில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள 19 ஏக்கர் காணியில், எட்டே முக்கால் ஏக்கரையே அடுத்த கட்டமாக சுவீகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 19 ஏக்கர் காணியில் மிகப் பெரிய 8 கல்வீடுகள் அமைந்துள்ளன. அந்த ஒட்டுமொத்தக் காணியும் 20 குடும்பங்களுக்குச் சொந்தமானது.
எட்டே முக்கால் ஏக்கர் காணியையும் இராணுவத்தினரிடம் கையளிப்பதற்கு எதிர்வரும் 17 ஆம் திகதி ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, கிளிநொச்சி மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குப் பணிப்பு விடுத்துள்ளார்.