தன்வினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும்

பட்டினத்தடிகள் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. உடற்கூற்று வண்ணத்தில்  மனித உற்பவம் முதல் இறப்பு வரையான அத்தனை விடயங்களையும் பாடியவர்.

இது தவிர துறவுவாழ்வை மேற்கொண்டு இந்த உலகில் பற்றறுக்கும் வழிகளை திருப்பாடல்களாகப் பொழிந்தவர்.

பட்டினத்தடிகளின் திருப்பாடல்களைப் படித்துப் புரிந்து கொண்டவர்கள், நிலையற்ற பொருள்களை நிலையானவை என்று ஒரு போதும் எண்ணார். இவ்வாறு முற்றும் துறந்த பட்டினத்தடிகள் தன்வினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும் என்றார்.

இதற்குள் இருக்கக் கூடிய கதை நீங்கள் அறிந்ததே.

ஆக, ஓட்டப்பம் வீட்டைச் சுடுமோ இல்லையோ தன்வினை தன்னைச்சுடும் என்பது நூறு வீதம் உண்மையானது.

தன்வினை தன்னைச்சுடும் என்ற பட்டினத்தடிகளின் வாக்கும்; நீ எதனால் அளக்கிறாயோ அதனால் நீ அளக்கப்படுவாய் என்ற யேசுபிரானின் போதனையும்; ஊழிற் பெருவலி முந்துறும் என்ற வள்ளுவன் வாக்கும் ஒத்ததன்மை கொண்டவை.

ஆக, தன்வினை தன்னைச்சுடும் என்ற நியதி தற்போது இலங்கையில் ஆரம்பமாயிற்று.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தின் தடை உத்தரவு நிச்சயம் கோத்தபாயவுக்கு பயங்கரமான கடுப்பை - கோபத்தை - ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கும்.

ஆனாலும் எதுவும் செய்ய முடியாது. நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தால் அதனை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவது அனைவரதும் கடமையாகும். எனவே நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கோத்தபாய ராஜபக்­ வெளிநாடு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி கோத்தபாய ராஜபக்­ மீதான குற்றச்சாட்டுக்கள் இனிமேல் தான் வெளிப்படும். இந்தநாட்டில் மகிந்த ராஜபக்­ ஜனாதிபதியாக இருந்தபோது, கோத்தபாய ராஜபக்­ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தார்.

அவர் நினைத்தால் மட்டுமே எதுவும் நடக்கும் என்ற நிலைமை இருந்தது. கைதிகளின் விடுதலை, படைத்தரப்பின் நில ஆக்கிரமிப்பு எனப் பாதுகாப்புத் தரப்போடு சம்பந்தப்பட்ட அத்தனை விடயங்களிலும் கோத்தபாய ராஜபக்­வின் அதிகாரமே கோலோச்சியது.

படைத்தரப்பு சார்ந்த விடயங்கள் குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வுடன் கதைத்தால்; அவர்கூட, கோத்தபாயவுடன் கதைத்துவிட்டுக் கூறுகிறேன் என்று பதில் அளித்த சம்பவங்கள் பல உண்டு.

இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தபாய எப்படியயல்லாம் நடந்து கொண்டார். எத்தனையோபேரின் வெளிநாட்டுப் பயணங்களைத் தடுத்தார்.

தனக்கு எதிரானவர்கள் என்று யாரைக்கருதினாலும் அவர்களை ஏதோ ஒரு வகையில் சிறையில் அடைத்து வதைத்தார். இது போன்ற பல சம்பவங்களை அரங்கேற்றி மகிழ்ந்தார்.

ஆனால், இப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற பதவியை கோத்தபாய இழந்துள்ளார். பதவியிழப்பு என்பதே அவர்செய்த வினைப்பயன் என்றறிவது அவசியம். கூடவே அவரின் அண்ணன் மகிந்தராஜபக்­ ஜனாதிபதி பதவியைப் பறிகொடுத்து  வீட்டில் இருக்கும் துன்பம் சாதாரணமானதன்று.

என் தம்பிகளால் தான் எனக்கு இக்கதி என்று அவர் நினைப்பாராயின் அக்கணமே தம்பி கோத்தபாயவின் - ப´லின் பாடெல்லாம் வீணாகிப் போகும். நிலைமை இதுமட்டும் என்றில்லை. தான் செய்த வினை எந்தளவோ அந்தளவிற்கு அந்தவினை அவரைக் சுட்டெரிக்கும்.

இதைத்தான் பட்டினத்தார் தன்வினை தன்னைச்சுடும். ஓட்டப்பம் வீட்டைச்சுடும் என்று உரைத்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila