ரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா?

தமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் நீரூபித்துள்ளார். ஏற்கெனவே முயற்சிக்காததால் தான் ஜனாதிபதியாகும் வாய்ப்பை இழந்தவர் இவர்.
இப்போது வடமாகாண தமிழ் மக்களின் சுயகௌரவத்துக்கு சவால் விட நினைத்து மூக்குடைபடப் போகிறார். இவரை நம்பி போட்டியிடப்போகும் விஜயகலா மகேஸ்வரனின் நிலைமை தான் பரிதாபகரமானது. ஏற்கனவே இலங்கையின் சுதந்திரத்தினத்தன்று அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினர் விடுவிக்கப்படுவார்கள் என அறிவித்து மூக்குடைபட்ட நிலையில் இருக்கிறார்.
இந்தியாவில் ஒரு மரபு உள்ளது. பதவியிலிருக்கும் பிரதமர் ஒரு மாநிலத்துக்கு விஜயம் செய்யும் போது விமான நிலையத்தில் அந்த மாநிலத்தின் முதலமைச்சர் வரவேற்க வேண்டும் என்பதே அது.
பிரதமர், ஜனாதிபதியைத் தவிர வேறு யாரையும் அவர் வரவேற்க வேண்டும் என்று கட்டாயமில்லை. இந்திராகாந்தி பிரதமராக இருக்கும் போது ராஜீவ்காந்தி முதலில் எம்.பி யாக இருக்கவில்லை. அந்நிலையில் இவர் ஒரு முறை ஆந்திர மாநிலத்துக்கு விஜயம் செய்தார்.
வெறுமனே பிரதமரின் மகன் என்ற நிலையில் இருந்த ராஜீவை வரவேற்க அந்த மாநில முதலமைச்சர் விமான நிலையம் சென்றார். அங்கு ஏதோ ஒரு அதிருப்தியால் மாநில முதலமைச்சரை ராஜீவ் விமான நிலையத்தில் வைத்துத் திட்டினார்.
அவ்வளவு தான் அதுவரை எந்த அரசியல் நோக்கமும் இல்லாதிருந்த பிரபல நடிகர் என்.ரி ராமராவ் கடும் சினமுற்றார். எமது முதலமைச்சரை அவமதிக்க ராஜீவ் யார் என்ற அவரது கோபமே தெலுங்கு தேசம் என்ற கட்சியை உருவாக்கும் எண்ணத்தை அவருக்கு ஏற்படுத்தியது.
நீண்ட காலத்துக்கு ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியைக் கைப்பற்ற முடியாத சூழலையும் விமான நிலையச் சம்பவம் உருவாக்கியது.
இந்த நிலையில் தான் வடமாகாண மக்களும் உள்ளனர். எங்களுக்குள்ளே ஆயிரம் முரண்பாடுகள், கருத்து மோதல்கள் இருக்கலாம். ஆனால் எமது முதலமைச்சரை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நாங்கள் இலட்சக்கணக்கில் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த முதலமைச்சர் அவர். நான் வடபகுதிக்கு வரும் போது முதலமைச்சரை சந்திக்கப் போவதில்லை என்கிறார் ரணில்.
எமது முதலமைச்சரை சந்திக்காமல் விட்டு விட்டாரே என்று இங்கு எவரும் தற்கொலை செய்து கொள்ளப் போவதில்லை. இவர் தனது சொந்தக் கட்சிக்குள்ளும் தமிழ் மக்கள் விடயத்திலும் கடந்த காலத்தில் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது தமிழ் மக்களுக்கு தெரியும்.
தன்னுடைய நரித்தனங்களுக்கு சம்பந்தன் ஜயா பலியானது போல முதலமைச்சர் பலியாகவில்லையே என்பது தான் அவரது கடும் சீற்றத்துக்குக் காரணம்.
முதலில் அவரது சொந்தக் கட்சி விவகாரத்தைப் பார்ப்போம். ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் ஒருவர் ஏற்கனவே அக் கட்சியின் தலைவராக இருந்தவரின் குடும்பத்தினரைக் கருவறுப்பது என்பது சிங்களவர்களின் பாரம்பரியம்.
ஐ.தே.க தலைமைப் பொறுப்பை ஏற்ற ஜே.ஆர் அக் கட்சியின் முன்னாள் தலைவர் டட்லியின் பெறாமகன் ருக்மன் சேனநாயக்காவை அரசியல் அநாதையாக்க முயற்சித்தார்.
ஏற்கனவே டெடிகம தொகுதி எம்.பியாக இருந்த அவருக்கு 1977 பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. ஒரு வேளை இவர் சுயேச்சையாகப் போட்டியிடலாம் என்ன செய்வது என்று சிந்தித்த ஜே.ஆரின் குள்ளப்புத்தி தலதா மாளிகையின் தியவதன நிலமே நிசங்க விஜேரத்னவை நிறுத்தினால் பௌத்த சிங்களவரின் வாக்குகளால் தக்கவைக்க முடியும் எனக் கணக்குப் போட்டது.
எனினும் அத்தேர்தலில் ருக்மன் கட்சியை எதிர்த்துப் போட்டியிடவில்லை. சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற மகிந்த அதன் முன்னாள் தலைவர் சந்திரிகாவை படாதபாடுபடுத்தினார்.
அமைச்சரவைத் தீர்மானம் மூலம் சந்திரிகாவுக்கு காணி வழங்கியது தவறு என்று ஒரு வழக்கு போடவைத்து, வேண்டாமப்பா இந்த சோலி என்று அவராகவே அதைக் கையளிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தினர். ஒரு தசாப்த காலம் அரசியல் அஞ்ஞாதவாசம் செய்யும் சூழ்நிலையையும் உருவாக்கினர்.
முதல் நாள் மகிந்தவுடன் முட்டை அப்பம் சாப்பிட்ட சிறிசேன, அடுத்த நாள் ஜனாதிபதி வேட்பாளராகி தேர்தலில் வென்று கொஞ்சம் கொஞ்சமாக மகிந்தவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்.
யோசித வாங்கிய விமானம், சிரந்தி பெயரில் போலியான அடையாள அட்டை எண் கொடுத்துத் திறந்த வங்கிக்கணக்கு என நீண்டு கொண்டே போகிறது.
ஆனால் விதிவிலக்காக பிரேமதாஸ மட்டும் இளைஞர் விவகார அமைச்சராக இருந்த ஜே.ஆரின் மருமகன் ரணிலை கல்வியமைச்சராக அந்தஸ்த்தில் உயர்த்தினார். அந்த பிரேமதாஸ குடும்பத்தை ரணில் எப்படிக் கருவறுத்தார்.
ஜ.தே.கவில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட விரும்பினார். கேமா பிரேமதாஸ ரணிலும் சம்மதித்தார். அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளும் செய்தார்.
வேட்பாளர் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யும் தினத்தன்று கொழும்பு கச்சேரிக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றார் கேமா.
தலைமை வேட்பாளர் என்ற வகையில் ரணில் நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்தார். அதன் பின்னர் தான் தெரிந்தது வேட்பாளர் பட்டியலில் கேமாவின் பெயர் இல்லை என்பது.
அவமானத்துடன் வீடு திரும்பினார் கேமா. அத்துடன் ஜே.வி.பி யின் மோசமாகப் படுகொலை செய்யப்பட்ட அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுமாறு சஜித்துக்கு கூறினார்.
கொழும்பில் கேமா போட்டியிட்டால் தன்னைவிட விருப்புவாக்கை கூடுதலாகப் பெற்றுவிடுவார் என்ற பயமும் அவருக்கு. இதே பயம் தான் வட தமிழ்த்தலைவர் ஒருவருக்கும் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினால் தன்னைவிட கூடுதலாகப் பெற்றுவிடுவார் என்பதற்காக பெண்மணி ஒருவருக்கு இப்போதே கதவடைப்பு செய்துவிட்டார்.
கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய சகாவை கூட்டிக்கொண்டு நயினாதீவு முதலான இடங்களுக்கும் போகும் அவர் பெண்மணியை மட்டும் பழிவாங்குகிறார்.
கேமாவுக்கு சந்தர்ப்பம் வழங்க விருப்பமில்லாவிட்டால் 'அம்மணி உங்கள் பெயர் வேட்பாளர் பட்டியலில் உள்ளதா என்று உறுதிப்படுத்திய பின் கச்சேரிக்குப் போகவும்" என்று ஒரு அனாமதேய தொலைபேசி அழைப்பு ஒன்றின் மூலமாகவாவது தெரிவித்திருக்கலாம்.
வேண்டுமென்றே அவரை அவமதித்தார் ரணில். என்ன இருந்தாலும் இந்த நாட்டின் முதற் பெண்மணியாக இருந்தவரல்லவா என்று கூட எண்ணவில்லை.
அவ்வளவு குரூரவஞ்சகம். தமிழர் விவகாரத்தைப் பொறுத்தவரை தன்னை சமாதானப் பிரியனாகக் காட்டி தேர்தலில் வென்றார். பின்னர் பேச்சுவார்த்தை என்று தொடங்கி கருணாவைப் பிரித்தார்.
உங்களைப் போல ஒரு தளபதி எமக்கு இருந்திருந்தால் எமது இராணுவம் எங்கேயோ போயிருந்திருக்கும் என்று குழையடித்ததில் கருணா மயங்கித்தான் போனார்.
பிரபாகரன் என்ற ஒன்றுக்குப் பின்னால் நின்றால் தான் கருணா என்ற பூச்சியமான தனக்குப் பெறுமதி. என்று உணராத அவர் ஒன்றுக்கு முன்னால் நிற்கப்போய் பெறுமதி இழந்தார்.இன்று அழிக்கப்பட்ட தரவை மாவீரர் துயிலுமில்லத்தடியில் கடும் போதையுடன் உங்களுக்கெல்லாம் துரோகம் செய்துவிட்டேன் என்று அழுது புலம்பும் நிலையை ரணில் உருவாக்கிவிட்டார்.
யாழ் நூலக எரிப்பு மூலம் புகழ்பெற்ற காமினி திஸநாயக்காவின் மகன் நவீன் திஸ நாயக்கா 'எமது தலைவரின் சாணக்கியமே புலிகளை உடைத்தது என்று 2005 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சொன்னார்.
அதிதீவிர சிங்கள வாக்குகளை எதிர்பார்த்த ரணில் இவ்வாறான பேச்சுகளுக்காக நவீனைக் கண்டிக்கவில்லை. மௌனமாக இருந்து ஆசீர்வாதம் செய்தார். அந்தத் தேர்தலில் தமிழரின் வாக்குகள் தனது சட்டைப் பையில் உள்ளதாகவும் கொஞ்ச அதிதீவிர பௌத்தர்களின் வாக்குப் பெற்றால் போதும் என்றும் கணக்கிட்டார்.
ஆகவே புலிகளைச் சமாளிக்க சந்திரசேகரன் இருக்கிறார் தானே என்று மெத்தனமாக இருந்துவிட்டார். அந் நிலையிலும் மகேஸ்வரன் 'புலிகளை நேரடியாகத் தான் கையாள வேண்டும் மூன்றாம் நபரூடாக கையாள்வது ஆபத்தாக முடியும் என்று ரணிலை எச்சரித்தார்.
அதைப் பொருட்படுத்தாத அவர் அதெல்லாம் சந்திரசேகரன் பார்த்துக் கொள்வார் என்று தட்டிக்கழித்தார். அன்றிரவு தமிழ் நாளேடு ஒன்றின் ஆசிரியருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மகேஸ்வரன் 'இந்த விசரன் தோற்கப்போகிறான் " என்று கூறிவிட்டு ரணிலைத் தான் எச்சரித்ததையும் நிலைமையைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் அவருக்கு இல்லை என்பதையும் விளக்கினார்.
கடைசியில் என்றைக்குமே ஜனாதிபதியாக முடியாதவர்களின் பட்டியலில் சிறிமாவுக்கு அடுத்ததாகத் தனது பெயரை ரணில் உறுதி செய்து கொண்டார்.
போரின் பின்னரான காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் தனக்குப் பக்கத்தில் நின்ற சம்பந்தன் ஜயாவின் கையில் சிங்கக் கொடியை திணித்தார். நான் பத்திரகாளியின் பக்தன் அதனால் தான் சிங்கக் கொடியை ஏந்தினேன் என்று தமிழ் மக்களிடம் சம்பந்தன் ஜயா கூறும் நிலையை உருவாக்கினார்.
இன்று கிழக்கு மாகாண சபையில் காணி அமைச்சு தமிழர் கையில் போய்விடக்கூடாது என்பதை உறுதிசெய்து கொண்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்கத் தயாரில்லை முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலையே என்பதை ஏற்காவிட்டால் இவரை எப்படித் தமிழர் நம்புவது.
மகிந்தா என்றாலும் சரி ரணில் என்றாலும் சரி தமிழர் தங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதில் உறுதியாக உள்ளனர். மகசீன் சிறையில் சிங்களக் கைதிகள் கலவரம் புரிந்தனர் அச்சமயம் தான் தமிழ்க் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பாக மகிந்தவுடன் தொடர்பு கொண்ட போது ' யுவ பீப்பில் ஆ சேவ் " என்று அவர் பதிலளித்ததாக களுத்துறையில் விநாயகமூர்த்தி எம்.பி தெரிவித்தார்.
தமிழர் தமது தரப்பு இல்லை என்ற எண்ணம் அவரின் அடிமனதில் இருந்ததால் தான் அவர் அவ்வாறு கூறினார். இல்லாவிட்டால் ' தெ ஆ சேப் " என்றல்லவா கூறியிருப்பார்.
இதேபோல் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் காணாமல்போனவர்களின் உறவுகளின் சோகத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்காமல் மாகாணசபையின் தீர்மானத்திற்கு எதிராக சீறி விழுவதும் தமிழர்களுக்குத் தான் பிரதமர் இல்லை என்ற ஆழமான எண்ணம் ரணிலின் அடிமனதில் இருப்பதன் வெளிப்பாடுதான்.
ஆகவே யாழ்ப்பாணம் போகும் போது விக்னேஸ்வரனைச் சந்திக்கமாட்டேன் என்று சொன்னதற்காக தமிழ் மக்கள் மகிழ்ச்;சியடைவர்.
சிங்களக் கொடியைக் கொடுத்து ஆட்டச் சொல்லி விடுவாரோ என்று பயப்படாமல் முதலமைச்சர் இருப்பார்.இந்த உருப்படாத சந்திப்புகளை விட உருப்படியான ஏதாவது செயலுக்கு தனது நேரத்தைச் செலவழிப்பார் வடக்கு முதலமைச்சர்.
தமிழ் மக்களின் மனங்களைப் புரிந்துகொள்ளாத மனிதர்கள் அவர்களின் தலைவர்களாகமுடியாது என்பது வரலாறு.
uthayan007@yahoo.com
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila