மகிந்தவின் கதி தான் மங்களவுக்குமா?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 28 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகிய  கடந்த 2 ஆம் திகதி, சர்வதேச உதவி மற்றும் ஆதரவுடன் போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான உள்நாட்டு விசாரணைகளை மேற்கொள்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறது இலங்கை அரசாங்கம். 

இதற்கு முன்னதாக, கொழும்பிலும் லண்டன், வோஷிங்டன், நியூயோர்க், ஜெனிவா ஆகிய நகரங்களிலும் புதிதாக பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம், உள்நாட்டு விசாரணை குறித்த வாக்குறுதிகளை அளித்திருந்தது. அவை அனைத்தும் இருதரப்பு சந்திப்புகள், பேச்சுக் களின்போது மூடிய அறைக்குள் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள்.

கடந்த ஜனவரி மாத பிற் பகுதியில், கொழும்பு வந்த அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால், அவர் வந்திருந்த காலகட்டத்தில் கொழும்பு வந்திருந்த கொமன்வெல்த் செயலர் கமலேஷ் சர்மா, கடந்த மாத முற்பகுதியில் கொழும்பு வந்த பிரித்தானிய வெளிவிவகார பணியக இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வயர், கடந்த வாரம் கொழும்பு வந்திருந்த ஐ.நா. பொதுச் செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் ஆகியோரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் உள்நாட்டு விசாரணை குறித்த வாக்குறுதிகளை அளித்திருந்தனர்.

அதுமட்டுமன்றி, இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணங்களின்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடமும் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிடமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் இதே வாக்குறுதியை அளித்திருந்தனர்.

ஜனாதிபதியின் விசேட தூதுவராக ஜெனிவாவுக்கு சென்றிருந்த அவரது வெளிவிவகார ஆலோசகர் ஜெயந்த தனபால, ஐ.நா. மனித உரிமைகள்  ஆணையாளர் செயிட் ராட் அல்ஹசேனிடம் உள்நாட்டு விசாரணைகளின் மூலம் பொறுப்புக்கூறல் பிரச்சினையை தீர்ப்பதாக உறுதி மொழி அளித்திருந்தார்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்கா சென்றிருந்தபோது,  வோஷிங்டனில் அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரி, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு  ஆலோசகர் சூசன் ரைஸ் போன்றோரிடமும் நியூயோர்க்கில் வைத்து ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன், ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் ஆகியோரிடமும் உள்நாட்டு பொறிமுறையின் மூலம் போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுப்பதாகவாக் குறுதி அளித்திருந்தார்.

இந்த வாக்குறுதிகள் எவையுமே பொது அரங்கில் பகிரங்கமாக பொதுமக்கள் முன்னிலையில் அளிக்கப்பட்டவை அல்ல.

ஆனால், கடந்த திங்கட்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28 ஆவது அமர்வில் ஆற்றிய உரையில் அவர் கொடுத்த உள்நாட்டு விசாரணை பற்றிய வாக்குறுதி பகிரங்கமானது, வெளிப்படையானது.

இந்த வாக்குறுதியின் கனபரிமாணத்தை இலங்கை அரசாங்க மும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் எந்தளவுக்கு புரிந்துகொண்டிருக்கின்றனர் என்று தெரியவில்லை.

ஆனால், இந்த வாக்குறுதி, 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தவுடன் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனுடன் இணைந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  கையெழுத்திட்ட கூட்டறிக்கையில் அளிக் கப்பட்ட வாக்குறுதிக்கு சற்றும் சளைத்ததல்ல.
அந்தக் கூட்டறிக்கையில் தெரிந்தோ, தெரியாமலோ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டிருந்தார். அந்தக் கூட்டறிக்கை தமது அரசாங்கத்தை மிக மோசமான நெருக்கடிக்குள் தள்ளிவிடப் போகிறது என்பதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. அவ்வாறு உணர்ந்திருந்தால், நிச்சயமாக அதில் கைச்சாத் திடுவதிலிருந்து எப்படியாவது நழுவிக்கொண்டிருந்திருப்பார்.

பொறுப்புக் கூறுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அந்தக் கூட்டறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதுவே, இலங்கைக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களுக்கு காரணமென்று இப்போதைய அரசாங்கம் கூறி வந்தது.

இப்போது அதே அரசாங்கம் தான், சர்வதேச ஆதரவு, ஆலோசனை, உதவியுடன் உள்நாட்டு விசாரணையை நம்பகமான முறையில் முன்னெடுக்கப்போவதாக உறுதியளித்திருக்கிறது.

முன்னைய அரசாங்கம், தாமே குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று ஒருபோதும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தெளிவான வாக்குறுதியை அளித்திருக்கவில்லை.

இராணுவ நீதிமன்றம் அமைத்து விசாரிக்கிறோம், காணாமற் போனோர் குறித்து ஆணைக் குழு அமைத்து விசாரிக்கிறோம் என்று மட்டுமே கூறிவந்தது.

போர்க் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளவோ, அது குறித்து சர்வதேச ஒத்துழைப்புடன் உள்நாட்டிலேயே விசாரிக்கிறோம் என்றோ உறுதியளிக்கவில்லை.

அத்தகைய நம்பகமான விசாரணையொன்றை முன்னைய அரசாங்கம் முன்னெடுக்க இணங்கியிருந்தால், நிச்சயமாக சர்வதேச சமூகம் அதற்கு எதிராக திரும்பியிருக்காது.
சர்வதேச சமூகம் கொடுத்த அழுத்தங்களே,  இலங்கையின் இன்றைய மாற்றங்கள் எல்லாவற்றுக்கும் காரணம்.

ஜெனிவா கூட்டத்தொடரில் உரையாற்றியிருந்த அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன்கெரி, இதனை தெளிவாக சுட்டிக்காட்டியிருந்தார். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத நாடுகளை அழுத்தங்களின் மூலம் வழிக்கு கொண்டு வரமுடியும் என்று அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.

குறிப்பாக, இலங்கையிலும் பர்மாவிலும் நிகழ்ந்த மாற்றங்களின் பின்னணியில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் பங்களிப்பை அவர் பெரிதும் புகழ்ந்துரைத்திருந்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஊடாக கொடுக்கப் பட்ட அழுத்தங்கள், இலங்கையின் இப்போதைய அரசாங்கத்தை நம்பகமான உள்நாட்டு விசாரணையை நோக்கி திருப்பியிருக்கிறது.

அதுமட்டுமன்றி, சர்வதேச அழுத்தங்களுக்கு பணிய மாட்டேன் என்ற பிடிவாதமே மஹிந்த ராஜபக்ஷவையும் வீழ்ச்சி நிலைக்கு கொண்டு சென்றிருந்தது.

நம்பகமான உள்நாட்டு விசாரணையை ஆரம்பிக்குமாறு 2012, 2013 ஆம் ஆண்டுகளில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானங்களை நிறைவேற்றியபோது, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அதனை ஏற்றுக்கொண்டு செயற்பட்டிருந்தால், ஒருவேளை ஆட்சி மாற்றம்கூட சாத்தியமற்றதாகியிருந்திருக்கலாம்.

என்றாலும், ஐ.நா. பொதுச் செயலர்பான் கீ மூனுடன் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டு விசாரணை பொறிமுறை யொன்றுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பிள்ளையார் சுழி போட்டிருந்தார். அதுவே, அவரதும் அவரது அரசாங்கத்தினதும் வீழ்ச்சிக்கும் காரணமாகியது.

அதற்கு பின்னர், இப்போதைய அரசாங்கம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வைத்து நம்பகமான உள்நாட்டு விசாரணையை மேற்கொள்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறது.  இந்த வாக்குறுதியை எப்படியாவது நிறைவேற்றியே தீரவேண்டிய நிலை அரசாங்கத்துக்கு உள்ளது.
                                                                                                                                                                 (தொடரும்)
                                                                                                                                                                                              --கே.சஞ்சயன்-
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila