கூட்டமைப்புக்குள் சிலர் ரணிலுக்கு ஆதரவா?

வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் நாட்டில் இருந்து ஒளிபரப்பாகும் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்தபேட்டி தமிழ் மக்களின் மனங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

முதல்வர் விக்னேஸ்வரன் பொறுப்பற்றவர். அவரை நான் சந்திக்கப் போவதில்லை என்றெல்லாம் பிரதமர் ரணில் தனது செவ்வியில் தெரிவித்திருப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனைத் தவிர, கூட்டமைப்பின் வேறு எந்த உறுப்பினர்களும் கண்டனம் தெரிவிக்கவில்லை. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா போன்றவர்கள் பிரதமர் ரணிலின் செவ்வி குறித்து கண்டு கொள்ளாமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் விக்னேஸ்வரனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டபாட்டில்-பொறுப்பற்ற முறையில் விமர்சித்தார் என்பதற்கு 06.03.2015 அன்று  தந்தி தொலைக்காட்சி ஒளிபரப்பிய பேட்டி சாட்சியமாகும்.

சர்வதேச மட்டத்தில் அனைவரும் அந்தப் பேட்டியைப் பார்த்திருப்பர். நிலைமை இதுவாக இருக்கும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அதுபற்றி வாய்திறக்காமல் இருப்பது ஏன்?

சில வேளைகளில் முதல்வர் விக்னேஸ்வரன் பற்றி இப்படி ஒரு கருத்தை வெளியிடுமாறு பிரதமர் ரணிலிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கூறிவைத்ததோ! என்று எண்ணவும் தோன்றுகிறது.

அப்படி ஒரு சாத்தியப்பாடு இல்லை எனின், முதல்வர் விக்னேஸ்வரன் பற்றி பிரதமர் ரணில் கூறிய குற்றச்சாட்டுக்களுக்காக சம்பிரதாயத்துக்கேனும் சம்பந்தர் கவலை வெளியிட்டிருக்கலாம் அல்லவா?

ஆக, பிள்ளையையும் நுள்ளி தொட்டிலையும் ஆட்டுகின்ற கலாசாரம் இங்கு வேலை செய்துள்ளது என்று கூறுவதில் தவறில்லை. இது ஒரு புறம் இருக்க,இலங்கையில் நடந்த யுத்தம் திட்டமிட்ட இன அழிப்பு என்ற தீர்மானத்தை முதல்வர் விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபையில் முன்வைத்து அதை நிறைவேற்றியதே, ரணில் விக்கிரமசிங்க அவர் மீது கொண்ட கடும் கோபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது. இதைத் தனது பேட்டியில் ரணிலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நடந்தது இன அழிப்பு என்ற தீர் மானத்துக்காக ரணில் இத்துணை கோபம் கொண்டு வடக்கின் முதல்வரை திட்டித் தீர்ப்பதற்கான நியாயம் புரியவில்லை.

குறித்த தீர்மானத்தை முதல்வர் விக்னேஸ்வரனே கொண்டு வந்தார். அதில் எங்களுக்குச் சம்பந்தம் இல்லை என்று கூட்டமைப்பின் தலைமை ரணிலிடம் கூறியிருக்கவேண்டும். அவ்வாறு கூறும்போது தான், இவ்வாறானதொரு கோபம் ரணிலுக்கு வந்திருக்க முடியும்.

இது இல்லையயனில், இன அழிப்பு என்ற தீர்மானம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையையும் அல்லவா? ரணில் சாடியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் விக்னேஸ்வரனை மட்டும் கடுமையாகக் குற்றம் சாட்டியமைக்குள் மர்மம் இருக்கவே செய்கிறது.   
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila