கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ இன்று சனிக்கிழமை மட்டக்களப்புக்கு சென்று போருக்குப் பின்னரான சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் நேரடியாக ஆராய்ந்துள்ளார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள பௌத்த அமைப்புகளின் அழைப்பின் பேரிலேயே அவர் மட்டக்களப்பு சென்றிருந்ததாக கூறப்படுகின்றது.போர்க் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வெளியேறிய சிங்கள குடும்பங்களின் மீள்குடியேறுவதில் உள்ள காரணிகள் மற்றும் மீள்குடியேறிய குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக ஆளுநர் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை செங்கலடி மற்றும் ஏறாவூர் பிரதேசங்களில் உள்ள சிங்கள மக்களுடனான சந்திப்புக்களிலும் அவர்கள் கலந்து கொள்கின்றனர்.
தமது காணிகளில் வெளியாரின் குடியேற்றம், அச்சம் காரணமாக குறைந்த விலைக்கு காணியை விற்க நேரிட்டமை, குடியிருப்புகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவைப்படுகின்றமை போன்ற பிரச்சனைகள் குறித்து சிங்கள மக்கள் இன்றைய சந்திப்புக்களின் போது எடுத்துக்கூறியுள்ளனர்.
மக்களால் முன்வைக்கப்பட்ட காணி உரிமை தொடர்பான பிரச்சனைகளுக்கு பதில் அளித்த ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ, இந்தப் பிரச்சனைகளுக்கு 100 சத வீதம் சாதகமான முடிவுகளை எதிர்பார்க்க முடியாவிட்டாலும் முடிந்தவரை தீர்வுகளை பெறுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்றார்.