அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு கையுயர்த்துவதை விட வெறொரு கௌரவம் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்த சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மீண்டும் பாதுகாத்து வரலாற்றுமிக்க கௌரவம், கட்சி பேதங்கள் இன்றி சகல கட்சிகளுக்கும் கிடைப்பதற்கு இன்றிலிருந்து இன்னும் ஒன்றைநாட்கள் இருகின்றன.
அந்த அதிர்ஷ்டத்தை உதயமாக்கி கொள்ளுமாறு நான் சகலரிடமும் கேட்டுக்கொள்கின்றேன். அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு கையுயர்த்துவதை விட வெறொரு கௌரவம் இல்லை .
இந்த சட்டமூலத்தை சமர்ப்பிக்க கிடைத்தமை வரலாற்று வரபிரசாதமாகும் .இந்த வரலாற்று திருத்த சட்டமூலத்தை நாளை செவ்வாய்க்கிழமை நிறைவேற்றிக்கொள்வதற்கு எதிராப்பார்த்துள்ளேன்.
நல்லாட்சி, ஜனநாயக அரசியல் கலாசாரத்தை முன்வைப்பதற்கு முன்னின்று உழைத்த டி.எஸ். சேனாநாயக்க மற்றும் எஸ்.டப்ளியு. ஆர். டி பண்டாரநாயக்க ஆகியோர் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை நாம் முன்கொண்டு செல்லவேண்டும்.
நிறைவேற்று ஜனாதிபதி பதவியில் இருக்கின்ற வரம்பற்ற அதிகாரங்களை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அன்று எதிர்த்தது. அந்த வரம்பற்ற அதிகாரங்கள் நீக்கப்படவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சி 1991 ஆம் ஆண்டு அறிவித்தது.
அந்த எதேச்சதிகாரமான அதிகாரங்களை நீக்குவதாக அதற்கு பின்னர் வந்த அரசாங்கங்கள் பல சந்தர்பங்களில் கூறியிருந்த போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் போது இந்த எதேச்சதிகாரமான அதிகாரங்கள் நீக்கப்படும் என்று தெளிவாக கூறப்பட்டது. எனினும், அது நிறைவேற்றப்படவில்லை.
ஆனால், சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட நல்ல சட்டங்களை பாடசாலை மாணவர்களும் பாராட்டுவர்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட நபர் என்ற வகையில், அந்த அதிகாரங்களை குறைப்பதற்கு நான் விரும்பினேன்.
நான் என்னை பற்றி கூறவில்லை. அந்த அதிகாரங்களை குறைப்பதற்கு என்னை போல நெகிழ்வான நபர் இருப்பாரா என்று நினைக்க முடியாது.
இந்த அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக அரச நிர்வாகத்தின் நல்ல அம்சங்களுக்கு சர்வதேச ரீரியில் பெரும் ஆதரவு கிடைக்கும்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் பெரும் ஆதரவு கிடைக்கும். ஜனநாயகத்தை பாதுகாப்பு முறைமை, ஊழல், மோசடி, மனித உரிமைகள் ஒடுக்குமுறையின்றி எமது நாடு முன்கொண்டு செல்வதை பார்த்து அவர்கள் திருப்தி கொண்டுள்ளனர்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் இருக்கின்ற எதேச்சதிகாரமான அதிகாரங்களை நீக்குவதாக மகிந்த தேர்தல் விஞ்ஞாபனத்திலும் எனது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படவேண்டும் என்று 120 இலட்ச வாக்காளர்கள் தெளிவாக கூறியிருந்தனர். அந்த முறைமையை இல்லாமல் செய்வதற்கு கடந்த 28 மற்றும் 37 வருடங்களாக மக்கள் முயற்சித்தனர்.
எனினும், ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டமை மட்டுமே நிறைவேறியுள்ளது. ஜனாதிபதிக்கு எதேச்சதிகாரமான அதிகாரங்களை பெற்றுக்கொள்ளும் வகையில் 18ஆவது திருத்தத்தை நிறைவேற்றி கொண்டனர்.
ஜனாதிபதி பதவிக்காக இரண்டு தடவைகளுக்கு மேல் தேர்தலில் போட்டியிடலாம் என்று 18ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நான் உட்பட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த சகலரும் அதற்கு அன்று ஆதரவளித்தோம் என அவர் மேலும் தெரிவித்தார்.