உள்நாட்டு பொறிமுறை மூலம் எம்மை அமைதியாக்க முயற்சி! - ஒருபோதும் நடக்காது என்கிறார் அனந்தி


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை. இழிநிலை அரசியல் செய்ய வேண்டிய தேவை எனக்கில்லை என வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை. இழிநிலை அரசியல் செய்ய வேண்டிய தேவை எனக்கில்லை என வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
           
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடும்பாவிகள் தங்களின் ஏற்பாட்டாளர்களால் எரிக்கப்பட்டதாக பேசப்படுகின்றதே? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், ஆர்ப்பாட்டம் என்றால் அனந்தி தான் மேற்கொள்வது என்ற கருத்து தற்போது உள்ளது. அரசியலுக்காக இவை மேற்கொள்ளப்படுகின்றது என்ற கருத்தும் உள்ளது. காணாமற்போனோரின் உறவினர்களின் ஆர்ப்பாட்டங்களில், அவர்களைப் போல நானும் பாதிக்கப்பட்டவள் என்ற அடிப்படையில் எனக்கு அந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கறையுண்டு. அதற்காக என்னால் இயன்ற செயற்பாடுகளை மேற்கொள்வேன். பெண்களுக்கு அநீதி நடைபெறுகின்றபோது, என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பாதிக்கப்பட்டது எந்த நாட்டு பெண்ணாக இருந்தாலும் நான் குரல் கொடுப்பேன்.
விடுதலைப்புலிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கையில் எழிலன் ஈடுபட்டதாகவும் அதற்கு அனந்தி பொறுப்பு கூறவேண்டும் எனக்கூறி அண்மையில் ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இராணுவப் புலனாய்வாளர்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் இது. இவ்வாறு பலதை நான் எதிர்கொண்டு பழகிவிட்டது. நான் போராளியாக இருக்கவில்லை. எனது கணவரை நானே இராணுவத்திடம் ஒப்படைத்தேன். போரை நடத்திய அரசு தான், காணாமற்போனவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும். காணாமற்போனவர்களை எழிலன் தான் பிடித்தார் என மக்கள் அவரைத் தேடினால் அவரையே நானும் தேடுகின்றேன். எழிலனை பிடித்து வைத்திருக்கும் அரசு அவரை வெளியில் விடவேண்டும் என்றார்.
காணாமற்போனவர்கள் தொடர்பில் புதிய அரசின் செயற்பாட்டின் முன்னேற்றம் ஏதும் உள்ளதா? என்று ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியதுக்கு அனந்தி பதிலளிக்கையில், இது தொடர்பாக சாதகமான பதில்; கடந்த அரசிலும் கிடைக்கவில்லை. புதிய அரசிலும் கிடைக்கவில்லை. தற்போது இது தொடர்பில் தமிழ் வழக்கறிஞர்கள் வாதாடி வருகின்றார்கள். அடுத்த தடவைகளில் எனது சாட்சியும் பதியப்படலாம். உள்நாட்டு பொறிமுறையில் எமக்கு நம்பிக்கை இல்லாததால் தான் ஐ.நா.வில் முறையிட்டோம். உள்நாட்டு பொறிமுறை மூலம் எம்மை அமைதியாக்கி, ஓய்வாக ஒருபக்கத்தில் இருக்கச் செய்யலாம் என எண்ணுகிறார்கள். அது ஒருபோதும் நடைபெறாது என்றார்.
பெண்கள், சிறுமிகளுக்கு பொறுப்பாக உள்ளவர் என்ற வகையில் அண்மையில் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமி தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டியவராக உள்ளீர்கள் என ஊடகவியலாளர் வினாவியதுக்கு பதிலளித்த அனந்தி, பாதிக்கப்பட்ட பெண்கள் சிறுவர் தொடர்பான பொறுப்பு, முதலமைச்சரிடம் இருந்து பின் எனக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான உத்தியோகபூர்வ கடிதம் எனக்கு வழங்கப்படவில்லை. அது தற்போது சுகாதார அமைச்சின் கீழ் உள்ளது. என்னிடம் இந்த பொறுப்பு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டால் என்னால் சிறப்பாக செயற்படமுடியும்.
இந்த விடயங்கள் தொடர்பில் நான் வெளியில் சென்று பேசுவதற்கு எனக்கான அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும். கட்சியில் இருந்து என்னுடன் இடைநிறுத்தப்பட்டவர்கள் தற்போது கட்சியில் செயற்பட்டு வருவதாக அறிந்தேன். மகிழ்ச்சியாகவுள்ளது. கட்சிக்குள் ஒருவருக்கு ஒரு தண்டனை. மற்றவருக்கு இன்னொரு தண்டனை. இது தான் அரசியலோ? என எண்ணத் தோன்றுகின்றது என்றார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila