ரவூப் ஹக்கீமின் காலம் கடந்த ஞானமும், கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரமும்!

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் செய்வதையெல்லாம் செய்வார். பின்பு அரசிடம் எதிர்பார்த்தது எதுவும் கிடைக்கவில்லையென்றால் சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற நரிக் கதைக்கு வந்து விடுவார். இப்படியாகத்தான் கடந்த காலம் மஹிந்த அரசுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டு நரிக் கதை சொல்லி வந்தார்.
19வது திருத்த மசோவுக்கு ஆதரளித்து விட்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் பேசும் போது 18ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்தது குறித்து தான் வருந்துவதாக நேற்று வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.
18ம் திருத்த மசோதாவுக்கு வாக்களித்து செய்த பிழைகளை திருத்திக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் ஹக்கீம் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய ஒரு பாவத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உடந்தையாகி விட்டது என்று ஹக்கீம் கடந்த வருடம் தெரிவித்திருந்தார்.
அதாவது 17,18வது திருத்தச் சட்டத்திற்காக வாக்களித்து மஹிந்த அரசுக்கு மு.கா ஆதரவளித்ததைத்தான் மிகப் பெரிய பாவமாக ஹக்கீம் கடந்த காலங்களில் சொல்லியிருந்தார்.
18வது அரசியல் திருத்தச் சட்டம் என்பது மூன்றாவது முறையும் மற்றும் ஆயுள் வரையும் ஜனாதிபதியாகப் போட்டியிடும் அரசியல் திருத்தம். ஹக்கீம் அரசுக்கு அப்போது ஆதரவளித்த போது பாவமாகத் தெரியவில்லையாம். இப்போது இவருக்கு பாவமாகத் தெரிகிறதாம்.
இது எப்படி இருக்கிறது தெரியுமா ஒன்றும் தெரியாத பாப்பா இராத்திரி 9 மணிக்குப் போட்டாளாம் தாப்பாள்.
எந்த விதமான அதிகாரங்களுமற்ற நீதி என்கின்ற அநீதி அமைச்சுக்கு ஆசைப்பட்டு முழு நாட்டையும் மஹிந்தக் கம்பனிக்கு அடகு வைத்த பெருமை ஹக்கீமையே சாரும்.
அப்போது இந்த 18வது திருத்தத்தில் ஹக்கீம் கம்பனி ஆதரவளிக்க வில்லையென்றால் எதிர் கட்சிகளுக்கென்று ஒரு மானம் மரியாதை இருந்திருக்கும்.
சிறுபான்மை மக்களின் வாக்கு வேட்டைக்காக சிறுபான்மைக் கட்சிகளின் தயவுக்காக மண்டியிட்டிருப்பார்கள். அவ்வாறான ஒரு வாய்ப்பையே இல்லாமல் செய்து விட்டார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலை வர் ரவூப் ஹக்கீம்.நீதி அமைச்சர் பதவிக்காக மஹிந்தருக்கு ஆதரவு அளித்து விட்டார்.
இந்த 18வது திருத்தச் சட்;டத்திற்கு ஹக்கீம் ஆதரவளித்ததனால் தான் மஹிந்த கம்பனி இறக்கும் வரைக்கும் ஆட்சிக் கதிரையை விடமாட்டேன் என்று அடம்பிடித்தார்..
அரசியல் அனுபவமில்லாது முதிர்ச்சியில்லாது வெறும் அமைச்சர் என்ற பந்தாவுக்காகத்தானே அரசுக்கு ஹக்கீம் கம்பனி ஆதரவளித்தது. அப்போது அதற்கான பலனை ஒட்டு மொத்த முஸ்லிம்களும் அனுபவித்திருந்தார்கள்.
ஹக்கீம் இந்தப் பாவத்தைச் செய்யவில்லையென்றால் மஹிந்த கம்பனி இவ்வளவு தூரம் ஆட்டம் போட்டிருக்கமாட்டார்கள். ஹக்கீம் செய்துள்ள வரலாற்றுத் துரோகங்களில் மறக்க முடியாத மன்னிக்க முடியாத பட்டியலில் இது மிகவும் முக்கியமானது.
ஹக்கீம் மட்டும் மஹிந்த கம்பனிக்கு 18வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளிக்க வில்லையென்றால் நாட்டு மக்களுக்கு ஒரு விடிவு காலம் அப்போது கிடைத்திருக்கும். அதாவது மஹிந்தர் 3வது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில். போட்டியிட முடியாது.
18 க்கு ஆதரவளிக்க வேண்டாம்!-  சம்பந்தன் அறைகூவல்
இந்தப் 18வது திருத்தச் சட்டத்திற்கு சிறுபான்மைக் கட்சிகள் அரசுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அப்போது பகிரங்க அறைகூவல் விடுத்திருந்தார்.
அந்த அறைகூவலை ஹக்கீம் மற்றும் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோர்கள் காதில் எடுக்கவில்லை. இப்போது ஹக்கீம் அண்ணன் அழுது புலம்பி என்ன பயன். ஆண்டாண்டுகள் கடந்தாலும் அழுது புரண்டாலும் மாண்டார்கள் வருவதில்லை ஹக்கீம் ஐயா.
ஹக்கீம் இந்தப் 18வது திருத்தச் சட்டத்திற்கு அரசுக்கு ஆதரவளிக்கிவில்லையென்றால் மஹிந்த கம்பனி இந்தளவுக்கு ஆட்டம் போட்டிருக்காது என்பது நாட்டு மக்களின் கணிப்பீடு.
18வது திருத்தத்திற்கு அரசுக்கு மு.கா ஆதரவு வழங்கிய ஹக்கீம் அப்போது பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசுக்கு வெளியேயும் மு.கா அரசுடன் இருந்து கொண்டும் அதிகாரப் பகிர்வை பெறுவதற்கு பாடுபடுவோம் என்று ஹக்கீம் அப்போது உரையாற்றினார்.
இப்போது என்ன நடந்தது. என்ன நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அப்போது 13 ஐ ஒழிக்கத் துடிக்கும் மஹிந்த அரசின் அணியில் இருந்து கொண்டு எப்படி ஹக்கீம் அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசமுடியும்.
ஹக்கீம் நீதி அமைச்சராக பதவி பெற்ற பின்பு எந்த அதிகாரம் பற்றிப் பேசியுள்ளார். எந்த உரிமைக்காகப் பேசியுள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்கு எவ்விதமான அநீதியும் நடக்கவில்லை என்றும் எந்தவொரு மனித உரிமை மீறல்களும் தமிழர்களுக்கு எதிராக நடக்கவில்லை என்றுதானே மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் உத்தியோபூர்வமாக எடுத்துரைத்தார்.
இதுக்கு மேலும் தமிழர்கள் ஹக்கீமை நம்ப வேண்டுமா? நம்பலாமா? தமிழர்களிடம் நான் வைக்கும் முதல் கேள்வி இது. இந்தக் கேள்வியை கடந்த வருடம் முன்வைத்தேன். அதன்பின்பும் கூட்டமைப்பு ஹக்கீமை நம்பி கிழக்கு மாகாண சபையில் பலதடவை ஏமாந்துள்ளார்கள்.
சிறுபான்மை மக்களின் அதிகாரங்களைப் பறிக்கும் திவிநெகும சட்ட மூலத்திற்கு ஆதரவாக கிழக்கு மாகாண சபையிலும் மேல் மாகாண சபையிலும் பாராளுமன்றத்திலும் மு.கா.அரசுக்கு ஆதரவளித்தது.
ஆனால் சிறுபான்மை மக்களுக்கு பாதகமான இச்சட்ட மூலங்களுக்கு மு.கா அரசுக்கு அதரவாக வாக்களிக்கக் கூடாது என்று தமிழ் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் மு.கா. உட்பட்ட சகல சிறுபான்மைக் கட்சிகளிடமும் பகிரங்கமாகவும் நேரடியாகவும் கேட்டிருந்தார்.
அப்போது சம்பந்தனின் கோரிக்கையை மு.கா. உட்பட எந்தவொரு கட்சியும் ஏற்றுக் கொள்ளவில்லையே.
மு.கா. அரசுக்கு ஆதரவளிக்கும் ஒவ்வொரு பிரேரணையும் சிறுபான்மை சமூகங்களுக்கு பாதகமானது என்று அப்போது தமிழ் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் உரத்துச் சொன்னார்.
அப்போது சம்பந்தனின் கருத்துக்கள் மு.கா வுக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு போல்தான் இருந்தது.
மு.கா ஒரு பாவத்தை மட்டும் செய்யவில்லை அரசுடன் மு.கா இணைந்து கொண்ட பின்னர் அரசுக்கு ஆதரவாக சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிரான பாதகமான அத்தனை திருத்தச் சட்ட மசோதாக்களுக்கும் மு.கா.ஆதரவளித்து துரோகங்களை செய்துள்ளது.
அப்போது மு.கா.தவிசாளர் பஷீர் சேகுதாவுத்தை அரசின் ஊதுகுழல் என்று சொல்கின்ற ஹக்கீம் அரசை விட்டு வெளியேறச் சொன்னால் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.
ஹக்கீம் மஹிந்தவின் கூட்டுக்கள் இருந்து கொண்டு அரசு கொண்டு வந்த அத்தனை படுபாதகமான சட்ட மூலங்களையும் ஆதரித்து வாக்களித்து விட்டு மஹிந்தவுடன் இருந்து கொண்டு பஷீரைத் தூற்றியது என்பது காக்கையின் கூட்டுக்குள் இருந்து கூவும் குயில் போன்றதாகும்.
அரசுக்கு வக்காளத்து வாங்கிய ஹக்கீம்
நவநீதம்பிள்ளை இலங்கை அரசின் முன்னாள் நீதி அமைச்சர் ஹக்கீமை முதன் முதலாக கடந்த வருடம் கொழும்பில் சந்தித்தார்.
ஹக்கீம் ஏற்கனவே ஊடகத்திற்கு தெரிவிக்கப்பட்டது போன்று இலங்கைக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் பணிகளையும் நன்றாகவே செய்து முடித்தார்.  அதாவது சிங்கள தேசத்தின் சிங்கள அரசின் அமைச்சர் எதைச் செய்வாரோ அதைச் செய்தார்.
அதாவது இலங்கையில் தமிழர்கள் சொல்வது போன்று தமிழர்களுக்கு எவ்விதமான மனித உரிமைகள் மீறல்களும் நடைபெறவில்லை என்றும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் எதுவுமில்லை என்றும் சொல்லியிருந்தார்.
அதாவது இலங்கை முஸ்லிம்களுக்கு பிரச்சினை எதுவுமில்லை அண்மைக்காலமாக ஒரு சிறிய குழுவொன்று முஸ்லிம்கள் மீது சிறிய கசப்புணர்வுகளை வெளிக்காட்டி வருகின்றது.
அவைகள் பற்றி முஸ்லிம் எம்பிக்கள் இணைந்து கையொப்பம் இட்டு மகஜராக ஜனாதிபதியிடம் கையளித்துள்ளோம்.
இனிமேல் இப்படியான சம்பவங்கள் நடக்கக் கூடாது என்றும் இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைகளாகக் கொடுத்துள்ளோம். அவைகளை ஜனாதிபதி செய்வார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றும் ஹக்கீம் அப்போது நவநீதம்பிள்ளையிடம் தெரிவித்திருந்தார்.
முஸ்லிம்களுக்குப் பிரச்சினையில்லையாம்
அதாவது இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினையுமில்லை, சும்மா தெருச்சண்டை சிறுபிள்ளைகள் வீதிகளில் பிடிக்கும் சாதாரண சண்டைதான். இவைகளை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை நீங்களும் பெரிதுபடுத்த வேண்டாம் முஸ்லிம்களாகிய நாங்கள் ஜனாதிபதியிடம் பேசித் தீர்த்துக் கொள்வோம் வேறு ஒரு பிரச்சினையுமில்லை என்றவாறுதான் ஹக்கீம் நவநீதம்பிள்ளையிடம் பேசியிருந்தார்.
நவநீதம்பிள்ளையிடம் இப்படி ஹக்கீம் பேசிய பின்பு கண்டி, குருநாகல், தெகிவளை ஆகிய இடங்களில் பள்ளி உடைக்கப்பட்டது. மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான பல தாக்குதல் சம்பவங்கள் அப்போது நடைபெற்றது.
ஹக்கீம் நவநீதம்பிள்ளையிடம் பேசிய தகவல்கள் ஊடகங்களில் கசிந்த பின்புதான் மு.கா.பிரதிநிதிகள் குழுவொன்று நவநீதம்பிள்ளையைச் சந்திக்க வேண்டும் என்று தூக்கத்தில் இருந்து எழுந்தவன் போன்று நவநீதம்பிள்ளையைச் சந்திக்க முயன்றார்கள்.
அதாவது மு.கா. குழுவொன்று நவநீதம்பிள்ளையைச் சந்திக்க வேண்டும், அதற்கான நேரத்தை ஒதுக்கித் தர வேண்டும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் மு.கா. கோரியது.
அந்தக் கோரிக்கை வெளிநாட்டமைச்சினால் நிராகரிக்கப்பட்டது. காரணம் நவநீதம்பிள்ளையின் நிகழ்ச்சி நிரலில் முன்கூட்டியே நேரம் பெறுவதற்கு மு.கா.தவறிவிட்டது.
எந்தவொரு திட்டமும் இல்லாது நவநீதம்பிள்ளையைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் திடீரென்று மு.கா வுக்கு அப்போது எழுந்தது.
முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகள் என்று மார்தட்டுகின்ற இந்த வகையறாக்கள் தாங்களும் தங்களது குடும்பத்தினருமாக கொழுத்த பணத்துடன் வாழ்வார்கள், குருட்டுத் தனமாக வாக்களிக்கின்ற முஸ்லிம் வாக்காளர்கள் மட்டும் தெருத் தெருவாக புலம்பிக் கொண்டிருப்பார்கள்.
மஹிந்தவிடம், முஸ்லிம்களை விற்றுப் பிழைப்பு நடத்தியாச்சி. இனிமேல் ரணிலிடம் விற்று பிழைப்பு நடக்கப் போகின்றது. மொத்த வியாபாரிதான் மாறியுள்ளார். வியாபாரம் மாறவில்லையே. அது எப்படி மாறும்.
அதற்கு ஆதாரமாகத்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதற்காக ஹக்கீமுக்கு பிரதமர் ரணில் பெருந் தொகைப்பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் முஸ்லிம் இன உறவு
மு.கா.கட்சிக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒரு தலைவர் கிடைக்கும் வரைக்கும் தமிழ் முஸ்லிம் இன உறவு வராது. எதிர்வரும் தேர்தலின் பின்பு தமிழ் கூட்டமைப்பு ஒரு பெரும் சக்தியாக ஆட்சி அமைக்கும் சக்தியாக அமையக் கூடிய அதிக வாய்ப்புள்ளது. கூட்டமைப்புடன் முஜ்லிம் இணந்து செல்ல வேண்டிய தேவையுள்ளது.
முஸ்லிம் வாக்காளர்களே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் இணைந்து போட்டியிட்டு முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்போம். வாருங்கள் தமிழ் முஸ்லிம் இன உறவைப் பலப்படுத்துவோம் தந்தை செல்வா காலத்தைக் காண்போம்.
முஸ்லிம்களை விற்றுப் பிழைப்பு நடத்தும் இந்த முஸ்லிம் அரசியல் வர்த்தக வகையறாக்களை விரட்டியடிப்போம். வடகிழக்கில் தமிழ் மக்களுடன் முஸ்லிம்கள் இணைந்து செல்ல வேண்டிய பாரிய அவசிய தேவை தங்கியுள்ளது.
தமிழ் மக்களுடன் முஸ்லிம்கள் இணையவில்லையென்றால் பாரிய சேதாரத்திற்குள் முஸ்லிம்கள் தள்ளப்பட்டு விடுவார்கள் என்பதை இங்கு ஆணித்தரமாக எத்தி வைக்கின்றேன்.
எம்.எம்.நிலாம்டீன்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila