இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் மூவர், சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்கவைக் கொழும்பில் சந்தித்துப் பேசினர். இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்புக் குறித்து கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் - வடக்கில் புதிய ஆட்சிக்குப் பின்னர் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டமை, கைது செய்யப்பட்டமை, வேறு குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி தடுத்துவைக்கப்பட்டுள்ளமை போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறான நடவடிக்கைகளை அவதானிக்கும்போது வடக்கில் ஊடகத்துறையை அடக்கும் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவே எண்ணத் தோன்றுகிறது. இது குறித்து சட்டம் ஒழுங்கு அமைச்சர் என்ற வகையில் தாங்கள் அதிக கவனம் செலுத்தி, வடக்கிலுள்ள ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன், ஊடகத்துறை வடக்கில் சுதந்திரமாக இயங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று நாம் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தோம். எமது கோரிக்கைகளைச் செவிமடுத்த அமைச்சர், இதுகுறித்து தான் அதிக கவனம் செலுத்துவார் என்றும், உடனடியாக இந்த விடயங்களை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளுக்கு உத்தரவிடுவார் என்றும் எம்மிடம் உறுதியளித்தார். என்றார் சுரேஷ் எம்.பி. |
வடக்கில் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை அதிகரிப்பு! - ஜோன் அமரதுங்கவிடம் கூட்டமைப்பு குழு முறைப்பாடு.
Add Comments