பலமான சட்டத்தை நிறைவேற்றும் வாய்ப்பு நழுவி விட்டது! - ஜேவிபி குற்றச்சாட்டு.


நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ள 19 வது திருத்தச்சட்டத்தினை விடவும் அதிக பலம் பொருந்திய சட்டம் நிறைவேற்றப்படும் அரிய சந்தர்ப்பம் கை நழுவிப்போயுள்ளதாக ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பிளவு, மற்றும் அதிகாரத்தினை தக்கவைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் காரணமாகவே இந்த வாய்ப்பு கை நழுவிப்போயுள்ளதாக ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ள 19 வது திருத்தச்சட்டத்தினை விடவும் அதிக பலம் பொருந்திய சட்டம் நிறைவேற்றப்படும் அரிய சந்தர்ப்பம் கை நழுவிப்போயுள்ளதாக ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பிளவு, மற்றும் அதிகாரத்தினை தக்கவைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் காரணமாகவே இந்த வாய்ப்பு கை நழுவிப்போயுள்ளதாக ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்.
       
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
ஜனவரி 8 ஆம் திகதி ஜனநாயகம், மக்களின் உரிமை, சுதந்திரம் என்பவற்றை பாதுகாப்பதற்காக மக்கள் ஆணையை கோரி ஜனாதிபதியாக தெரிவான மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமராக தெரிவான ரணில் விக்கிரம சிங்கவிற்கும் இதனை நிறைவேற்றுவதற்கான பொறுப்பு காணப்படுகின்றது. இதற்கமைய நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 ஆம் நிறைவேற்றச்சட்டத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் பல குறைக்கப்பட்டுள்ளன.
18 ஆம் திருத்தச்சட்டத்தின் மூலம் தந்தை, சித்தப்பா, மகன் என குடும்பமே இந்த நாட்டை ஆட்சி செய்யும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்த 18 ஆம் திருத்தச்சட்டம், இந்த 19 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் முற்றாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகம், மக்கள் சக்திக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றத்திற்கும் மக்கள் தனித்தனியான மக்கள் ஆணைகளை வழங்கியுள்ளனர். இவ்வாறு வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணை ஒன்றே ஒன்று எதிர்த்து அடிமைப்படுத்த எத்தனிக்கின்றது.
நாடாளுமன்றத்திற்கு வழங்கிய ஆணையை ஜனாதிபதி கட்டுப்படுத்துகின்றார். நாடாளுமன்றத்தினை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் காணப்பட்டது. இது சாதாரண விடயமல்ல. 1978 ஆம் ஆண்டு தொடக்கம் நேற்று வரையில் நடைமுறையில் இருந்த இந்த முறைமை நேற்றுடன் நீக்கப்பட்டுள்ளது. அத்துடன், அரசியலமைப்புச் சபையினூடாக சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கப்பட்டு, அரச நிர்வாகச் செயற்பாடுகள் சுயாதீனமாக செயற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டதும் அங்கே எல்லாம் சுயாதீனமாக இயங்கும் எனக் கருத முடியாது. எனினும், பொலிஸ், நீதிமன்றம், தேர்தல், அரச நிர்வாகம் போன்ற ஆணைக்குழுக்களில் சுயாதீனமாகவும், நேர்மையாகவும் செயற்பட விரும்புவோருக்கு இது ஒரு சந்தர்ப்பமாகவும் வாய்ப்பாகவும் ஏற்படும்.
தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19 ஆம் திருத்தச்சட்டத்தை மேலும் பலமுள்ள ஒரு திருத்தச்சட்டமாக நிறைவேற்றி இருக்கலாம். ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இருபிரிவினருக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக அந்த வாய்ப்பு கைநழுவிப் போயுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் மைத்திரி பிரிவினர், மஹிந்த பிரிவினர் என இரு பிரிவினர் செயற்படுகின்றனர். மஹிந்த பிரிவினரை வீழ்த்தி மைத்திரி பிரிவினர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கும் அதேவேளை, மைத்திரியை வீழ்த்தி மஹிந்த குழுவினர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்ற முயற்சிக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக 19ஐ பலப்படுத்த முடியாமல் போனது.
மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் நுழைந்தால் அவரைக் கட்டுப்படுத்துவதறக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வசம் சில அதிகாரங்கள் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என எண்ணிய மைத்திரி ஆதரவு குழுவினர் அதற்கான யோசனையை முன்வைத்து 19 ஆம் திருத்தச்சட்டதை பலமில்லாமல் செய்துவிட்டனர். இதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டீ சில்வா, அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் 19 ஆம் திருத்தச்சட்டத்தில் முன்மொழியப்பட்ட சில அர்த்தமுள்ள சரத்துக்களை நீக்கி கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் அதனை நீக்கியுள்ளனர்.
அதேவேளை மஹிந்த ஆதரவுப் பிரிவினர் இந்த 19 ஆம் திருத்தச்சட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டனர். முதலில் அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுவற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பின்னர் அதன் மீதான விவாதத்தின்போதும், வாக்கெடுப்பின் போதும் குழறுபடிகளை மேற்கொண்டனர். இறுதியில் நடாளுமன்ற சபையில் பிரச்சினைகளைத் தோற்றுவித்து பல மாற்றங்களுக்கு வித்திட்டனர்.’ என்றும் கூறினார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila