நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி (3ம் இணைப்பு)

437527819Ravi

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 94 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.  குறித்த பிரேரணைக்கு எதிராக 145 வாக்குகளும், ஆதரவாக 51 வாக்குகளும் கிடைத்திருந்தன. அத்துடன் 28 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் பிரேரணை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவிருந்தது.
எனினும், நாடாளுமன்றத்தின் ஒலி வாங்கிக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சபை நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டன.
இதற்கமைய இன்று குறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. மேலும் மங்கள சமரவீர, டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன, சந்திரசிறி கஜதீர, ஆறுமுகன் தொண்டமான், அங்கஜன் ராமநாதன் ஆகியோரும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
இதேவேளை, டக்ளஸ் தேவானந்தா, ஜாதிக ஹெல உறுமய ஆகியன குறித்த பிரேரணைக்கு எதிராகவும், மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாகவும் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
விவாதத்தை கண்காணிக்க ஜனாதிபதி நாடாளுமன்றில் பிரசன்னம் (2ஆம் இணைப்பு)
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை கண்காணிப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
அரசாங்கத்திற்கு இன்று பலப்பரீட்சை : தோற்கடிக்கும் முயற்சியில் மஹிந்த அணி!
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, இன்று (வியாழக்கிழமை) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 9 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், குறித்த பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அதன் பின்னர் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
அரசாங்கம் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வரி அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக, பொது எதிரணியால் கடந்த மாதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, நேற்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், நாடாளுமன்ற உள்ளக ஒலி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக, சபை நடவடிக்கைகள் இன்று காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.
இன்றைய தினம், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன நிதியமைச்சருக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளதோடு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஒன்றிணைந்த எதிரணி ஆகியன எதிராக வாக்களிப்பதற்கு தீர்மானித்துள்ளன. அத்தோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நிதிமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்க தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆதரவு அணியினர் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றிகொள்ள முடியுமென அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila