நினைவேந்தலை அரசியல் ஆக்காதீர்கள்!

மே-18 முள்ளிவாய்க்காலில் முடிவுற்றுப்போன யுத்தத்தில் பறிகொடுத்த எங்கள் உறவுகளை நினைவு கூருகின்ற நாள்.

இந்த நாள் இனவிடுதலைப் போரில் ஆகுதியாகிப்போன அத்தனை உறவுகளையும் நினைவுகூருகின்ற நாளாகக் கொள்ளக் கூடியது.

நினைவு கூருவதற்கும் நாள் உண்டா? என்று யாரேனும் கேள்வி எழுப்பினால் அதில் நூறுவீத நியாயம் உண்டு.

எந்நாளும் நினைக்க முடியுமாயினும் மே 18 என்ற நினைவேந்தல் நாள் தமிழினம் முழுவதும் இணைந்து தமிழின உறவுகளுக்காக அஞ்சலிக்கின்ற நாளாக இருப்பதால், இந்நாள் முதன்மையானதும் மரியாதைக்குரியதுமான நாள்.

எனினும் இந்த நாளை அனுஷ்டிப்பதற்கு முன்னைய அரசு கடும் எதிர்ப்புக் காட்டியது. போரின் போது பறிகொடுத்த எங்கள் உறவுகளைக் கூட நினைவு கூருவதற்குத் தடைவிதித்த ஆட்சி அழிந்து போனதன் காரணமாக இப்போது ஒரு மாற்றம்.

ஆம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் மே 18 போர் வெற்றிக்குரிய நாள் அன்று எனக்கூறப்பட்டிருப்பது மிக முக்கியமான விடயம். அதிலும் அமைச்சர் ராஜித சேனாரட்ண அவர்கள் மே 18 பற்றிக் குறிப்பிடுகையில், நாட்டின் ஒரு பகுதி மக்களின் மனங்களை நோகடிக்கக்கூடிய போர் வெற்றியைக் கொண்டாட மாட்டோம் எனக் கூறியுள்ளார்.

அமைச்சர் ராஜிதவின் உரை கண்டு கண்கள் குளிர்ந்தன.

இதுகாறும் சிங்கள தேசத்தின் உரைகளும் அறிக்கைகளும் கண்களைக் கலங்கச் செய்ய, அமைச்சர் ராஜிதவின் உரை கண்களைக் குளிர் மைப்படுத்தியது. ஆம், ஒரு மனிதத்தின் குரலாக அமைச்சர் ராஜிதவின் உரையை தமிழர்கள் பார்க்கிறார்கள்.

ஒரு இனம் ஒப்பாரி வைக்க; இன்னொரு இனம் கொண்டாடி மகிழுமாக இருந்தால், இந்த நாட்டில் இன ஒற்றுமை எங்ஙனம் சாத்தியமாகும்? இந்தக் கொடுமைத்தனங்கள் 2015 ஜனவரி எட்டோடு கழிந்து போனது என்பதற்கு அமைச்சர் ராஜிதவின் வார்த்தைகள் நல்ல சாட்சியமாக அமையும் என நம்பலாம்.

அதேநேரம் எங்கள் இனத்தின் அரசியல் நாடக நடிகர்களிடமும் ஒரு அன்பான வேண்டுகோள். அன்புக்குரிய பெருந்தகைகளே! மே 18 ஐ அரசியலாக்கி விடாதீர்கள். மே 18 நினைவேந்தல் புனிதமான நாள். அதனை புதிய அரசும் ஏற்றுள்ளது.

இந்நிலையில் இதனையும் உங்கள் அரசியல் உழைப்பின் இலாபப் பங்குகளாக ஆக்குவீர்களாக இருந்தால், அந்தப் புனிதமான ஆத்மாக்கள் நிச்சயம் கலங்கும்.

ஓ! தமிழ் அரசியல்வாதிகளே! 2009 மே 18இல் இருந்து 2014 மே 18 உள்ளிட்ட காலப்பகுதியில் நீங்கள் யாராவது நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டவர்களாயின் உங்கள் கரங்களில் அந்த ஈகைச் சுடரை ஏந்துங்கள். ஈகைச் சுடர் ஏந்தும் காலங்களில் ஒளிந்து மறைந்து இருந்தவர்களாயின் அதனையே நீங்கள் செய்யக் கடவீர்கள்.

இதனை விடுத்து மே 18 நினைவேந்தல் புனித நாளில் உங்கள் நடிப்பை உச்சமாக்கி விடாதீர்கள். முள்ளிவாய்க்கால் ஈறாக எங்களால் காப்பாற்ற முடியாமல் போன எங்கள் உறவுகளின் மரணிப் பிற்கு நாங்களும் ஏதோ ஒரு வகையில் காரணம் என்பதை மறந்து விடக்கூடாது.

இந் நிலையில் அவர்களை நினைவு கூருகின்ற நாளில், நீங்கள் சுடர் ஏந்தினால் அந்தப் புனித ஆத் மாக்களின் அமைதி குலைவுறும். ஆகையால் உங்கள் நடிப்பை அந்தப் புனித நாளில் செய்து விடாதீர்கள்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila