இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றில் ஆணித்தரமான, அழிக்க முடியாத வீரமும் நியாயமும், இலட்சிய உறுதியும் கொண்ட சாதனைகள் விடுதலைப் புலிகளினால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்று தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தேசிய நீரோட்டத்தில் பிரதான பாத்திரம் வகிப்பதற்கும், சர்வதேசம் எமக்காக குரல் கொடுக்கும் நிலை உருவாகியிருப்பதற்கும் விடுதலைப்புலிகளும், எமது மக்கள் சிந்திய இரத்தமும், அனுபவித்த பேரிழப்புகளுமே மூலாதாரம் என்பதை எவருமே மறந்து விட முடியாது. தமிழ் மக்களின் ஒப்பற்ற தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் அர்ப்பணம் மிக்க வழிகாட்டலும், அதன் மூலம் ஈட்டிய வரலாற்று பெருமை மிக்க வெற்றிகளுமே தமிழ் மக்களை இன்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க வைத்துள்ளது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போர் முள்ளிவாய்க்காலில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்பு சிங்கள ஒடுக்குமுறை ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் உண்மைப் போராட்டத்தை நசுக்கவும், நிரந்தர அடிமைகளாக்கி அதிகாரம் செலுத்தவும், விடுதலை உணர்வை தமிழ் மக்கள் மத்தியில் கொழுந்து விட்டெறிய வைத்த விடுதலைப் புலிகளின் அடையாளங்களை அழிப்பதை ஒரு வழிமுறையாக கையாளுகின்றனர். உலகையே வியக்க வைத்த எமது வீரம் செறிந்த விடுதலை வரலாற்றை உலக வரலாற்றுப் பக்கங்களிலிருந்து அழித்துவிட பல்வேறு முறைகளிலும் ஒரு ஒடுக்குமுறை போரை கட்டவிழ்த்து விட்டனர்.
மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டன. தலைவர் இருந்த இடங்கள் எனக்கருதப்பட்ட கட்டிடங்கள் கூடத் தகர்க்கப்பட்டன. விடுதலைப் புலிகளையோ, விடுதலைப் போராட்டங்களையோ நினைவு கூரும் விடயங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும் மக்கள் மத்தியிலிருந்து விடுதலைப் புலிகளையோ, விடுதலைப் போராட்ட உணர்வுகளையோ அழித்து விட முடியவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளினால் தமிழ் மக்களின் நாடாளுமன்ற அரசியலை முன் கொண்டு செல்லவே உருவாக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைத்து அழித்து விடும் வகையில் பல முனைகளிலும் பல்வேறு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. எனினும் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய பேராதரவின் மூலம் அந்த முயற்சிகளை முறியடித்து வந்தனர்.
சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழிக்க முயல்வதில் ஆச்சரியமில்லை. அவர்கள் தங்கள் ஒடுக்கு முறையைத் தொடர அவர்களுக்கு அது தேவை. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழிப்பதில் தமிழ் அரசியல்வாதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் கைப்பற்றிக் கொண்டு முயற்சி செய்வது தான் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
கடந்த ஆறு வருடங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இழுபறியிலேயே இருக்கின்றது. இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இடத்திற்கு தமிழரசுக் கட்சியை கொண்டு வர பல திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் தமிழரசுக் கட்சியே தீர்மானம் எடுக்கும் சக்தியாகவும், ஏனைய கட்சிகளை அதற்கமைய தமக்கு வேண்டிய சந்தர்ப்பங்களில் தலையாட்டிகளாக செயற்பட வைக்கவும் முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன.
அவ்வகையில் மாவை சேனாதிராஜா அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வதானால் 51 வீதம் பங்கு தமிழரசுக் கட்சியிடமும், ஏனைய 49 வீதமே ஏனைய கட்சிகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். ஏனைய கட்சிகள் இதற்கு சம்மதிக்காத நிலையில் அது கைவிடப்பட்டது.
தற்சமயம் மாவை சேனாதிராஜா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படாது எனவும், அதில் உதிரிக்கட்சிகள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயற்படப் போவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கடந்த காலத்தில் வாக்களித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கேயன்றி தமிழரசுக் கட்சிக்கோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிக்கோ, ரெலோவிற்கோ அல்லது புளட்டுக்கோ அல்ல. அந்தக் கூட்டமைப்பின் பேரில் அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் விடுதலைப்புலிகளின் அடையாளமான இதை அழித்து விடத் திட்டமிட்டுச் செயற்படுகின்றனர்.
விடுதலைப்புலிகளின் நேரடி ஆதரவாளர்களாகப் போட்டியிட்டு அதி கூடிய வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக 2005 ஆம் ஆண்டு தெர்தலில் வெற்றி பெற்றவர்களை ஓரங்கட்டியமையும், ஆனந்த சங்கரி போன்ற புலிகளின் எதிரியை உள் வாங்கியமையும் நாம் மறந்து விட முடியாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதில் மாவை மட்டுமே பலத்த எதிர்ப்பை தெரிவிப்பவர். தமிழரசுக் கட்சியை முதன்மைபடுத்துவதன் மூலம் சரணாகதி அரசியல்வாதிகளால் கூட்டமைப்பை நிரப்பி அதன் இலட்சிய உறுதியை சிதைக்கும் நோக்கமே இங்கு மேலோங்கி நிற்கின்றது.
மக்களிடம் வாக்கு பெற மட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பயன்படுத்தும் தமிழரசுக்கட்சி தன் மேலாதிக்கத்தை பயன்படுத்தி விடுதலைப்புலிகளின் அடையாளங்களையும், இலட்சியங்களையும் அழிப்பதை தமிழ் மக்கள் அனுமதிக்கப்போவதில்லை
.
நாம் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்கின்றோம். விடுதலைப் புலிகளின் அடையாளங்களை அழிக்க முயன்றால் அமிர்ந்தலிங்கத்தை போல், ஆனந்த சங்கரியைப் போல் மக்களால் ஒதுக்கப்படும் நிலை உருவாகும் என்பது மட்டும் நிச்சயம். இந்தியாவையும், சிங்கள ஆட்சியாளர்களையும் திருப்தி செய்யும் அரசியல் மாவையை அரசியல் அரங்கில் இருந்தே தூக்கி வீசி விடும்.
- தமிழ்லீடர் ஆசிரியர் பீடம் -