ஊழல் குற்றச்சாட்டுக்களினை எதிர்கொண்டுள்ள முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் வடக்கில் அடாத்தாக சுவீகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களது உரித்துக்களினை வடமாகாணசபை கையகப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தத்தின் பின்னராக விடுதலைப்புலிகளது என அடையாளப்படுத்த பெருமளவிலான காணிகள் மற்றும் வங்கி மீதிகள் கட்டடங்கள் பாதுகாப்பு அமைச்சிற்கென கூறப்பட்டு கோத்தாவால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக வன்னியில் விடுதலைப்புலிகளால் பேணப்பட்டு வந்த மரமுந்திரிகை தோட்டங்கள், தென்னம் தோட்டங்கள் இன்று வரை படையினரது பராமரிப்பின் கீழ் கோத்தா வசமேயுள்ளது. அவருடன் சகோதரனான பஸில் மற்றும் பெறாமகன் நாமல் வரை இத்தகைய பண்ணை தோட்டங்கள் சொத்துக்களாக உள்ளன. குறிப்பாக ஏ-9 வீதியின் புதுக்காட்டு சந்தி-பளைப்பகுதியில் கோத்தா கொம்பனி எனும் பேரில் பாரிய தென்னம் தோட்டங்கள் படையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.அதற்கான பெயர்பலகைகள் பகிரங்கமாகவே நாட்டப்பட்டுள்ளது.
அது போன்று யாழ்.நகரிலுள்ள முன்னணி ஹோட்டல்கள் மற்றும் வர்த்தக மையங்களில் கோத்தாவே பிரதான பங்காளியாக இருக்கிறார். வருடத்திற்கொரு முறை இலாப நட்டக்கணக்கை சொன்னால் சரி.மற்றையபடி பணம் அவர் குறிப்பிடும் வங்கிக்கணக்கிற்கு அனுப்பப்பட்டுவிடுமென பெயர் சொல்ல விரும்பாத ஹோட்டல் முகாமையாளர் ஒருவர் தெரிவித்தார். மகேஸ்வரி நிதியம் முதல் நெய்தலென சாதாரண கட்டட மணல் விற்பனை வரை அவரது அதிகாரம் பரந்திருந்ததாக கூறுகின்றார் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ஒருவர்.
விடுதலைப்புலிகளது வருவாய் பிரிவுடன் தொடர்புபட்டு உள்ளுரிலும் சர்வதேச மட்டத்திலும் பலர் யாழ்,வவுனியாவிலிருந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மாதம் மாதம் அனுப்பி வைக்கப்பட்ட இலாப பங்கு கிளிநொச்சி படையினர் வசம் வீழ்ந்ததும் அங்கு அனுப்பப்பட்டிருக்கவேயில்லை. பல பில்லியன்களில் சேர்ந்திருந்த அவற்றினை கோத்தபாய வர்த்தகர்களை நாலாம் மாடிவரை ஏற்றி பிடுங்கிக்கொண்டார். இன்று வரை இலாப பங்குகள் அந்த வர்த்தகர்களால் அனுப்பப்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதே போன்று வடக்கிற்கான தொலைக்காட்சி கேபிள் இணைப்பிலும் அவர் முக்கியபங்காளி எனவும் இணைப்பிற்கு மாதாந்தம் அவரிற்கு 250 ரூபா வீதம் ஒதுக்கி வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. பெயருக்கு பாதுகாப்பு அமைச்சில் படையினரது நலனிற்கென 8ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கிலுள்ள மக்கள் வருடக்கணக்காக இவ்வாறு பணத்தை கட்டியழுது கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இதற்கப்பால் யாழ்.நகரில் தனக்கென சுவீகரித்துக்கொண்ட கட்டடங்களை பாதுகாப்பு அமைச்சினதும் ரி.ஜ.டியினரதும் பயன்பாட்டிற்கு வழங்கி வாடகை பெற்றுக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவ்வாறு தன்னிச்சையாக சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகள் அனைத்துமே பொதுமக்களுடையவையே. நாட்டை விட்டு வெளியேறியவர்கள், விடுதலைப்புலிகள் அமைப்புடன் முரண்பட்டவர்கள், பலாத்காரமாக பறிக்கப்பட்டவையென காணிகள் மற்றும் கட்டடங்கள் புலிகளது சொத்துக்களாயின. ஆனால் அவற்றினை தெற்கு ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாதுள்ள நிலையில் வடமாகாணசபை சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விவசாயப் பண்ணைகளினை மீட்டெடுப்பதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பினை வழங்கமுடியுமெனவும் அவர்கள் கூறுகின்றனர்.