மூடி, மறைத்து வைத்த பைல்கள் திறக்கப்படும்! பாரபட்சமின்றி விசாரணைகள்! ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டில் கடந்த காலங்களில் காணாமற் போன  ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளை எந்தவிதமான பாரபட்சமுமின்றி முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மூடி மறைக்கப்பட்டுள்ள பைல்கள் மீண்டும் திறக்கப்பட்டு முறையானதும் பாரபட்சமற்றதுமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு வழிகாட்டல்களை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சட்டத்தரணிகள் சங்க நிகழ்வொன்றில் இன்று உரையாற்றிய ஜனாதிபதி நல்லாட்சிக்கான வழி திறக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நீண்ட தூர பயணத்தில் சகல தரப்பினதும் ஒத்துழைப்பு கிட்டும் என்ற நம்பிக்கையும் தனக்குள்ளதாக தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி:

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் இடம்பெறும் மிக முக்கிய நிகழ்வொன்றில் கலந்துகொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். ஜனாதிபதியொருவர் சட்டத்தரணிகள் சங்க தலைமைப் பணிமனைக்கு வருகை தந்த முதலாவது சந்தர்ப்பம் இது என்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். அதற்கான வாய்ப்பைத் தந்த சங்கத்தினருக்கும் எனது நன்றிகள்,

இப்போது ஜனாதிபதி மாளிகையிலிருந்தோ ஜனாதிபதி செயலகத்திருந்தோ ஜனவரி 8ம் திகதிக்குப் பின் புதுக்கடைக்கு தொலைபேசி மூலமாக அழுத்தங்கள் வருவதில்லை. இப்போது முழுமையான சுதந்திரம் உள்ளது. சட்டத்துறை மற்றும் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு உட்பட்டுள்ள அனைவருக்கும் சுதந்திரமாக செயற்பட முடிகிறது.

கடந்த ஜனவரி 8ம் திகதிக்குப் பின்னர் நாட்டில் நல்லாட்சி இடம்பெறுவதாக பலரும் தெரிவிக்கின்றனர். நான் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

தார்மீகம், சட்ட ஆட்சி, சுதந்திரம், ஜனநாயகம், அடிப்படை உரிமை இவை அனைத்தும் சீரழிக்கப்பட்டிருந்த நாட்டில் அவற்றை மீளக் கட்டியெழு ப்புவது என்பது 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளக்கூடியதல்ல.

கடந்த சில வருடங்களாக எமது நாட்டில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் மனித உரிமை போன்ற விடயங்கள் ஐ. நா. உட்பட பல்வேறு அமைப்புக்களிலும் பேசப்பட்டு வருகின்றன.

ஊடகவியலாளர் எக்னெலிகொடயை நினைவு கூரும் இச்சந்தர்ப்பத்தில் கடந்த சில தசாப்தங்களாக, குறிப்பாக கடந்த மூன்று தசாப்தங்களை நோக்கும்போது ஊடகவியலாளர்கள் காணாமற் போதல் மற்றும் பலியாகியுள்ளமை, சுதந்திரமான ஊடகத்துறை எதிர்கொள்ள நேர்ந்த நெருக்கடிகள் என்பதை நாம் அறிந்ததே.

எனவே கடந்த காலங்களில் காணாமற்போன, ஊடகவியலாளர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் உரிய கோவைகளை மீள திறப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மறைக்கப்பட்டுள்ள பல விசாரணைகள் மீண்டும் மேலெழுப்பப்பட்டு முறையானதும் பாரபட்சமற்றதுமான விதத்தில் விசாரணைகளை முன்னெடுக்க வழிவகை செய்யப்பட் டு அதற்கான வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளோம்.

அரசாங்கம் என்ற வகையில் இது தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila