புரிந்துணர்வுடனும் ஒத்துழைப்புடனும் செயற்படுங்கள்

யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் கடந்தும் வட மாகாணத்தின் உற்பத்தி பங்களிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 4 வீதம் மாத்திரமே பதிவாகியுள்ளது.
கடந்த அரசாங்கம் மேற்கொண்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டம் ஒரு பாரிய பிரசார நாடகமேயன்றி அது வட மாகாண மக்களுக்கு பொருளாதார நன்மைகளை வழங்குவதற்கு துணைபோகவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மற்றும் அதை அண்டிய பிரதேசங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக 2016 ஆம் ஆண்டில் உதவி மாநாடு ஒன்றை கூட்டுவது சம்பந்தமாக நாம் ஜப்பானுடன் கலந்துரையாடியுள்ளோம்.
திருகோணமலைத் துறைமுகம் மற்றும் நகரத்தை அபிவிருத்தி செய்வதற்கு விசேட திட்டம் ஒன்று தயாரிக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த இரண்டு வருடங்களில் பொருளாதார ரீதியில் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடமாகாணத்தின் உண்மை நிலையை எடுத்துரைத்திருக்கிறார்.
உண்மையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் உரிய முறையில் நல்லிணக்க செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வடமாகாணம் பொருளாதார ரீதியில் வலுப்படுத்தப்படும் என்றும் முதலீட்டு தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும் எனவும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
அதுமட்டுமன்றி வடமாகாணம் விரைவாக அபிவிருத்தி செய்யப்பட்டு தேசிய பொருளாதாரத்தின் அதன் பங்களிப்பை மேலோங்கச் செய்ய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்ற நம்பிக்கையும் வெளிப்படுத்தப்பட்டது.
ஆனால், தலைகீழான நிலைமையே யதார்த்தமாக இருந்தது. வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியுமின்றி வடமாகாணம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வந்ததே தவிர பொருளாதார வளர்ச்சியை உரிய வகையில் அடையவில்லை.
பாரிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்டாலும் அதன் உண்மையான பயன் மக்களை சென்றடையவில்லை என்பதே யதார்த்தமாக உள்ளது.
இவ்வாறான நிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடமாகாணத்தின் யதார்த்த நிலையை விளக்கிக் கூறியுள்ளதுடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஜப்பான் நாட்டின் உதவியுடன் உதவி வழங்கும் மாநாடொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த வகையில் பார்க்கும்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்த தூர நோக்கான வேலைத்திட்டம் வரவேற்கப்படவேண்டியது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை கட்டியெழுப்புவதற்கான அக்கறையை பிரதமர் வெளிக்காட்டியுள்ளதுடன் அதற்கு தேவையான செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார்.
அண்மையில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அந்நாட்டு பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றுகையிலேயே இந்த உதவி வழங்கும் மாநாடொன்றை இலங்கையில் நடத்துமாறும் பிரதமர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இவ்வாறான சூழலில் அண்மையில் ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு வடக்கு முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனுடன் விரிவான பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
அதன் போது விசேடமாக மத்திய அரசாங்கமும் வடமாகாண அரசாங்கமும் ஒத்துழைப்புடன் இணைந்து செயற்படவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்டிருந்த வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடக்கு மாகாணத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள், சர்வதேச நாடுகள் உதவிகள், செயற்திட்டங்களை மேற்கொள்ளும் போது வடக்கு மாகாண அரசிற்கும் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் தரவுகளை வழங்க வேண்டும் என்றும் அப்போதுதான் அத்திட்டங்களில் மக்களுக்கு எவை நன்மை பயக்கும் நீண்ட கால பலன் கிடைக்கும் என்பதை நாம் அறியமுடியும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பான முழுமையான தரவுகள் எங்களுக்கு தரப்படுவதில்லை. நேரடியாகவே மத்திய அரசு பல திட்டங்களை செய்கின்றது.
வடக்கிற்கு திட்டம் ஒன்றை மேற்கொள்ளும்போது எமக்கும் அது தொடர்பில் தெரியப்படுத்துவதினால் அதன் பலன்களை முழுமையாக மக்களுக்கு தெரிவிக்க முடியும். நல்லிணக்கம் என்பதை எம்முடன் கலந்து பேசாது வெளியிலிருந்து கொண்டுவந்து திணிக்கமுடியாது. எமக்குத் தேவையான விடயங்களில் நல்லிணக்கத்தைக் காட்டவேண்டும் எனவும் வடக்கு முதல்வர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை, இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் வடக்கு அரசும் மத்திய அரசும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளமுடியும் என்ற விடயத்தை வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் உண்மையான கள நிலைவரங்களை பார்க்கும் போது வடமாகாண சபைக்கும் மத்திய அரசாங்கத்திற்குமிடையில் ஒரு புரிந்துணர்வு இல்லாத நிலைமையை எம்மால் அவதானிக்க முடிகிறது.
ஆனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசங்களை கட்டியெழுப்புவதில் மத்திய அரசாங்கமும் வடமாகாண அரசும் புரிந்துணர்வுடனும், ஒத்துழைப்புடனும் செயற்படவேண்டியது மிகவும் அவசியமாகும்.
உண்மையில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஊடாக வடக்கின் மத்திய அரசாங்கம் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும்போது அது தொடர்பில் வடமாகாண சபைக்கு கட்டாயம் விபரங்களை தெரிவிக்கவேண்டும்.
இல்லாவிடின் அது மக்களினால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபையை மத்திய அரசாங்கம் புறக்கணிப்பதாக அமைந்து விடும்.
எந்தவொரு விடயத்தையும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் தீர்க்கலாம் என்ற நம்பிக்கை அனைவர் மத்தியிலும் காணப்படுகின்ற நிலையில் அந்த சூத்திரத்தை உரிய முறையில் பயன்படுத்தி புரிந்துணர்வு இன்மை, நம்பிக்கையின்மை ஆகியவற்றை அகற்றிக் கொள்வது அவசியமாகும்.
அதன் மூலமே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை விரைவாக அபிவிருத்தி செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் திட்டமிடல்களை மேற்கொள்ள முடியும்.
அதனை விடுத்து தொடர்ச்சியாக புரிந்துணர்வு இன்மை மற்றும் நம்பிக்கை இன்மை என்பவை நீடிக்குமானால் அது பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பாதிப்பதாகவே அமையும்.
விசேடமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை கட்டியெழுப்புவதற்காக இலங்கையில் உதவி வழங்கும் மாநாட்டை நடத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளுவதும் அது தொடர்பில் ஜப்பான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமையும் வரவேற்கத்தக்க விடயங்களாகும்.
ஆனால் அடுத்த வருடம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் இந்த உதவி வழங்கும் மாநாட்டின் ஊடாக முழுமையான பயன் பெறப்பட்டு பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்யவேண்டும்.
வடமாகாணத்தில் வீழ்ச்சி கண்டுள்ள கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, தொழிற்றுறை, சமூக அபிவிருத்தி என்பவற்றை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த விடயத்தில் மத்திய அரசாங்கமும் வடமாகாண அரசாங்கமும் கிழக்கு மாகாண அரசாங்கமும் புரிந்துணர்வுடனும் ஒத்துழைப்புடனும் செயற்பட முன்வரவேண்டும். நம்பிக்கைகளை கட்டியெழுப்புவதன் மூலமே நல்லிணக்கத்தின் உண்மையான இலக்கை அடையமுடியும்.
எனவே, அதற்கு மூலகாரணமாக இருக்கின்ற புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்புவதற்கு மத்திய அரசாங்கமும் வடமாகாண அரசாங்கமும் எத்தனிக்கவேண்டும். அவ்வாறு செயற்படும் போதுதான் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படும் சாத்தியம் காணப்படுகின்றது.
விசேடமாக பிரதமரும் வடமாகாண முதலமைச்சரும் புரிந்துணர்வுடனும் ஒத்துழைப்புடனும் செயற்பட முன்வரவேண்டும். அதனைவிடுத்து முரண்பட்டுக்கொண்டிருப்பதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது.
முக்கியமாக வடமாகாணத்தின் அபிவிருத்தி தேவையை மத்திய அரசாங்கம் புரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும்.
அவ்வாறு புரிந்து கொண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.
இந்த விடயத்தில் அனைத்துத் தரப்பினரும் இதய சுத்தியுடன் நடந்து கொள்ளவேண்டும். மாறாக எந்தவொரு தரப்பும் ஏனைய தரப்புகளை ஏமாற்றுவதற்கு முயற்சிக்கக் கூடாது.
இதய சுத்தியுடன் செயற்படுவதன் மூலமே உண்மையான அபிவிருத்தியையும் நல்லிணக்கத்தையும் அடைய முடியும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila