யாழ்.மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் சேவையில் நீண்ட கால அனுபவமுடைய ஸ்ரனிஸ்லஸ் என்ற தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்.மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை உண்மையில் வரவேற்கத்தக்கது.
அதிலும் யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் மற்றும் போதைவஸ்துப் பாவனைகள் அதிகரித்து வருகின்ற நிலையில்,
தமிழர் ஒருவரை பொலிஸ் அதிகாரியாக நியமித்தமை குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கான ஒரு சிறந்த மார்க்கமாக அமையும்.
இதைக் கூறுவதற்காக சிங்கள பொலிஸ் அதிகாரிகள் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவில்லை என்று யாரும் பொருள் கொண்டு விடக்கூடாது.
தமிழ்ப் பிரதேசத்தில் தமிழர் ஒருவர் பொலிஸ் உயர் அதிகாரியாக இருக்கும் போது அவருக்கும் மக்களுக்குமான தொடர்பாடல் இலகுபடக்கூடியதான வாய்ப்பு ஏற்படும்.
இதற்கு மேலாக மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், அதன் தாற்பரியங்களை புரிந்து கொள்வதற்கான வழிகள் இலகுபடுத்தப்படும்.
ஆகையால் தமிழர் பிரதேசங்களில் பொலிஸ் அதிகாரிகள் தமிழர்களாக இருப்பது மிகவும் நல்லது.
இதேவேளை யாழ்ப்பாணத்தின் பொறுப்பதிகாரியாக இருந்த வூட்லர் போன்ற நேர்மையான சிங்கள பொலிஸ் அதிகாரிகளும் யாழ்ப்பாணத் தில் கடமையாற்றியுள்ளனர் என்பதை மறுதலித்து விடக்கூடாது.
எதுவாயினும் யாழ்ப்பாண மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியாக தமிழர் ஒருவர் பதவி யேற்றுள்ளமையால் அவர் மீதான நம்பிக்கைகள் மக்களிடம் அதிகரிக்கப்படுவதுடன் குற்றச் செயல்கள் குறித்த தகவல்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொள்வதும் சுலபமாக இருக்கும்.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவிவரும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடனேயே சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர் ஒருவரை பொலிஸ்மா அதிபர் நியமித் துள்ளமை ஒரு சரியான புரிதல் ஏற்பட்டுள்ளமை தெரிகிறது.
அந்த வகையில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் யதார்த்தம் சார்ந்த நிர்வாகத்தை தமிழ் மக்கள் மனத் தூய்மையுடன் வரவேற்கின்றனர்.
அதேவேளை யாழ்.மாவட்டத்தில் ஒரு நேர்மையான பொலிஸ் நிர்வாகத்தை கட்டி எழுப்புவதன் மூலம் மக்களின் ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும்.
ஒரு நாட்டில், பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட வேண்டுமாயின் பொலிஸ் நிர்வாகம் மிகவும் உன்னதமான சேவையை வழங்க வேண்டும்.
எனவே யாழ்.மாவட்டத்தில் குற்றச்செயல்களை அடியோடு கட்டுப்படுத்தல் என்ற வேலைத் திட்டத் திற்குள் யாழ்.மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் நேர்மையான சேவை கிடைப்பதை உறுதி செய்வதும் அவசியமாகும்.
இத்தகையதோர் நேர்மையான பொலிஸ் சேவை கிடைப்பது உறுதி செய்யப்படும் போது குற்றச் செயல்கள் கடுமையாகச் சரிவடையும் என்பதால், புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் நிர்வாகத்தில் கூடிய கவனம் செலுத்துவார் என்று நம்பலாம்.