புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலிய கடற்பரப்பிற்கு வெளியே அழைத்துச் செல்வதற்காக இவ்வாறு சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு அவுஸ்திரேலிய சுங்க அதிகாரிகள் பெரும் தொகை பணம் வழங்கியுள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
54 இலங்கையர்கள் உள்ளிட்ட 65 புகலிடக் கோரிக்கையாளர்களைக் கொண்ட படகு ஒன்று அண்மையில் இந்தோனேசியாவை சென்றடைந்திருந்தது.
சட்டவிரோத ஆள்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் படகைச் செலுத்தியோருக்கு ஆயிரக் கணக்கான அமெரிக்க டொலர் பணம் வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அதிகாரிகள் சட்டவிரோத ஆள்கடத்தல்காரர்களுக்கு லஞ்சம் வழங்கியமைக்கான ஆதாரங்கள் தம்மிடம் உண்டு என இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பணம் வழங்கியமைக்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து கேள்வி எழுப்பும் பொறுப்பு ஏனைய அமைப்புக்களைச் சாரும் எனவும், இந்தோனேசியாவின் தென்காரா திமோர் மாகாண காவல்துறைப் பொறுப்பதிகாரி ஜெனரல் என்டாங் சுன்ஜியா தெரிவித்துள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்களை இந்தோனேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட அவுஸ்திரேலிய அதிகாரிகள் பணம் வழங்கியதனை சட்டவிரோத ஆள்கடத்தல்காரர்கள் ஒப்புக் கொண்டுள்ளதுடன், புகலிடக் கோரிக்கையாளர்களும் அதனை உறுதி செய்துள்ளனர்.
போலியான புகலிடக் கோரிக்கையாளர்களை படகில் ஏற்றி அவுஸ்திரேலியாவிற்கு சென்று அங்கு பணம் பெற்றுக் கொள்ளும் ஆபத்தான முயற்சியில் சட்டவிரோத ஆள்கடத்தல்காரர்கள் ஈடுபடக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலான விசாரணை நடத்தப்பட்டு காவல்துறை தலைமையகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தலைமையகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 65 படகுப் பயணிகளையும் இரண்டு படகுகளில் ஏற்றி சிறிதளவு எரிபொருளையும் வழங்கி திருப்பி அனுப்புவது தற்கொலை முயற்சியாகும் எனவும், இதுவா மனிதாபிமானம் எனவும் மற்றுமொரு அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்களை கிராம மக்கள் மீட்டுள்ளதாகவும், காலநிலை சீர்கெட்டிருந்தால் ஆபத்துக்களை சந்தித்திருக்க நேரிட்டிருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.