திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சின்னக்கரச்சை உப்பளத்தை அவ்விடத்தில் நிறுவாது அம்மக்களின் பாரம்பரிய தொழிலை செய்ய அனுமதிக்குமாறு கும்புறுபிட்டி மக்கள்கோரிக்கைவிடுத்தனர்.
இவ்வுப்பளத்தை தனியார்கம்பனி ஆரம்பிப்பதற்கு கடந்த பல வருடங்களாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவந்தது. மக்களால் எதிர்ப்பு போராட்டங்களும் முன்னெடுத்து வந்ததாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜனார்த்தனன் சுட்டிக்காட்டுகின்றார். இதனால் உப்பள பணிகள் இழுபறிநிலையில் இருந்து இருகின்றன.
இந்நிலையில், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் இச்செயற்றிட்டத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கும் உப்பள உரிமையாளர்களுக்கும் இடையில் கும்புறுப்பிட்டி கிராம பொதுக்கட்டடத்தில் கலந்துரையாடலொன்று கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது,
குச்சவெளி பிரதேச உதவி பிரதேச செயலாளர் எஸ்.அமலினி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்தனன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கும்புறுப்பிட்டி வடக்கு மற்றும் கிழக்கு, நாவற்சோலை, இறக்ககண்டி ஆகிய கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள், சிறுகடல் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றை சேர்ந்தோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
குச்சவெளி உப்பள திட்டம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு இங்கு அதிகமான மக்கள் இத்திட்டத்திற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டனர். இதன்போது கருத்துத் தெரிவித்த பொதுமக்கள், ஏற்கெனவே குச்சவெளி பிரதேச செயலகப்பிரிவில் பெரியகரைச்சை களப்பு தனியார் உப்பளக் கம்பனியொன்றுக்கு வழங்கப்பட்டது.
தற்சமயம் 40 பேர் மட்டுமே இக்கம்பனியில் பணியாற்றுகிறார்கள். இவ்வாறான நிலையில் மேலும் ஒரு நிறுவனத்துக்கு சின்னக்கரைச்சை களப்பை வழங்குவதன் மூலம் தாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்’ என மக்கள் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
இப்பகுதியில் உப்பளம் அமையுமானால் நிலத்தடி நீர் உவர் தன்மையடையும். மேலும் கடல் உயிரினங்களான நண்டு, இறால் போன்றவற்றின் உற்பத்தி இல்லாது போகும்.என மீனவசங்கப்பிரதிநிதிகள்சுட்டிக்காட்டினர்.
வெங்காயச் செய்கை தோட்டச் செய்கை, பழமரச் செய்கை என பல நீண்டகாலமாக முன்னெடுக்கப்படும் பாரம்பரிய விவசாய செய்கைக்குரிய காணிகள் பாதிக்கப்படும். கால்நடைகளுக்கு நீர் இல்லாது போகும். மேலும் பெரிய கரைச்சையில் உப்பளம் அமைக்கப்பட்டதனால் பாதிக்கபட்ட மீனவர்கள் சின்னக்ரைச்சையில்தான் தொழில் செய்கிறார்கள். அவர்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே, சின்னக்ரைச்சை உப்பளத்தை அவ்விடத்தில் நிறுவாது அம்மக்களின் பாரம்பரிய தொழிலை செய்ய அனுமதிக்குமாறு தெரிவித்தனர்.
காணி அபகரிப்பு
திருகோணமலை மாவட்டம் கடந்த அரசின் கடுமையான காணி அத்துமீறல் அபகரிப்புக்குள்ளான பிரதேசமாகும்.குறிப்பாக இந்த குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் தான் அதிகமான காணி கம்பனி என்ற போர்வையிலும் சுற்றுலாத்துறை என்ற வகையிலும் வனவளம், தொல் பொருள் என்ற அடிப்படையிலும் வளமான காணிகள் கபளிகரம் செய்யப்பட்டன. இந்த அடிப்படையில் மக்கள் நெருக்குதல்கள் அச்சங்களுக்குள்ளான சூழலில் இந்த காணிகள் இவ்வாறு அபகரிக்கப்பட்டதாக மக்கள் தரப்பில் முறையிடப்பட்டு வந்தன.பல அச்சுறுத்தலுக்கு மத்தியில் பகிரங்க எதிர்ப்பு போராட்டங்கள் குச்ச வெளியிலும் புல்மோட்டையிலும் பல முறை முன்னெடுக்கப்பட்டு வந்தன. புல்மோட்டையில் அரிசிமலை என்ற அழகான கடற்கரைக் குன்றுப்பகுதியில் தொல் பொருள் திணைக்களம் என்ற போர்வையில் மறைமுகமாக விகாரை ஒன்றும் நிறுவப்பட்டது என முஸ்லீம் மக்கள் தமது கடுமையான எதிர்ப்பபை வெளியிட்டனர். இதன்காரணமாக போராட்டக்காரர்களை ஒடுக்க வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இவ்விடயத்தில் 500 எக்கர் காணி அபகரிக்கப்பட்ன என முன்னர் முறையிடப்பட்டது..
பொய்யான முறைகேடான முயற்சி
அந்த வகையிலேயே இந்த உப்பளத்திட்டங்களும் மக்களுக்கான பொய்யான வாக்குறுதிகளின் அடிப்படையில் முன்னைய அமைச்சர் புஞ்சிநிலம, பசில் ராஜபக்ஷ போன்றோரின் ஆலோசனைக்கிணங்க அரசாங்க அதிபராகவிருந்த மேஜர் ஜெனரல் ரி.ரி. ஆர்டி.சில்வாவினால் தாராளமாக அள்ளி தெளிக்கப்பட்டன. இதன்காரணமாக பல வெளியார் அப்பிரசேத்தில் அபிவிருத்தி என்ற மாயைக்காட்டி தமிழ் மக்களின் அபிவிருத்திக்கு முற்றுபபுள்ளிவைத்துளனர்.
அதிக காணி அபகரிப்பு
இவை சட்டத்திற்கு முரணான வகையில் மேற் கொள்ளப்பட்டன.குறிப்பாக புல்மோட்டையில் 2500 ஏக்கர் காணிகள் குச்ச வெளி தரியாய் பகுதியில் 3000 ஏக்கர் காணி என வகை தொகையின்றி காணிகள் எடுக்கப்பட்டன. மாறாக தமிழ் மக்கள் வாழும் தென்னமரவாடி,கங்குவேலி போன்ற இடங்களில் அத்துமீறல்கள் அடாவடித்தனங்கள் அபகரிப்புக்கள் இடம் பெற்றுள்ளன இவை தடுக்கப்பட வில்லை மாறாக மறைமுகமாக ஊக்கப்படுத்தப்பட்டுகின்றன என முன்னாள் காணி ஆணையாளர் க.குருநாதன சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அடிப்படையில் தற்சமயம் மாற்று வழியில் உப்பளம் அபிவிருத்தி என்ற போர்வையில் பாரம்பரிய மக்களின் காணிகள் கையகப்படுத்தப்படுகின்றன. திருகோணமலையைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கை இணைக்கும்பகுதி என்பதனால் இந்த உறவுப்பாலத்தை தமிழ்மக்கள் தொடர்பை பிரிப்பதில் அக்கறையைாக அரசுகள் காலம் காலமாக ஈடுபட்டு வந்துள்ளன.
அதன் உச்சகட்டமே திரியாய்பன்சாலைக்கான 3000 எக்கர் காணி ஒதுக்கீடு மற்றும் நாயாறு கொக்கிழாய் சிங்களகுடியேற்றம் சிங்கள மயமாக்கல் என்ற குற்றச்சாட்டு ஏலவே உள்ளன. இது ஒரு திட்டமிட்ட பாரம்பரிய தமிழ் தொடர்புகள் அழிப்பு என்றும் தமிழ் தரப்பில் வாதப்பிரதி வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை எது எப்படியிருந்தாலும் யுத்தம்காரணமாக பாதிக்கப்பட்டு மீண்டெழத் துடிக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை மறுதலிக்கும் நடவடிக்கைள் இதன்மூலம் முன்னெடுக்கப்படுகின்றன. இதுவே இன்று மக்கள் மத்தியில் எழுந்துள்ள முக்கியமான பிரச்சனையும் ஏக்கமுமாகும்
யுத்தமில்லை அதன் சத்தமில்லை என்ற நிலையில் நாமுண்டு நமது தொழில் உண்டு என வாழமுடியாத நிலமை தொடர்கின்றன. யுத்தகாலத்தில் இருந்தது போன்ற வேறுவிதமான பயம் பீதி பதற்றம் தொடர்கின்றன. இவற்றிக்காக போராடவேண்டிய நிலைக்கும் நாம் தள்ளப்பட்டுள்ளோம்.இது ஏன் என மக்கள் கவலை வெளியிடுகின்றனர். தாம்முன்னர் வாழ்ந்த சூழலை மீளத்தாருங்கள் என கேள்வி எழுப்பு கின்றனர்.