நான் அண்மையில் எனது முகநூலில் 'மைத்ரியும் மகிந்தவும்' என்றதலைப்பில் ஒருபதிவினை இட்டிருந்தேன். இதுதான் அந்தப்பதிவு:
தேர்தலின் முன்பு:
ஊடகம்: மகிந்தவுக்கு வேட்புமனு கிடையாது என்றீர்கள். இப்போது குருநாகல் மாவட்டத்தில் தலைமை வேட்பாளராகப் போட்டியிடுகிறாரே?
மைத்ரி: எனக்கு இதில் உடன்பாடுகிடையாது.
தேர்தலின்பின்பு:
ஊடகம்: சுதந்திரக்கட்சி வெற்றியீட்டினால் மகிந்த பிரதமராக நியமிக்கப்பட மாட்டார்என்றீர்கள். இப்போது மகிந்தபிரதமர் ஆகிவிட்டாரே?
மைத்ரி: எனக்கு இதில் உடன்பாடுகிடையாது.
எனது இப்பதிவையும் உள்ளடக்கி மைத்ரி மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களைக் கேள்விக்கு உள்ளாக்கி ஒருபதிவை உலகத்தமிழர் இணைய (GTN) ஆசிரியர் நடராஜா குருபரன் எழுதியிருந்தார். தனக்கு உடன்பாடில்லாத போதும் கூட மைத்ரி மகிந்தவுக்கு தேர்தலில் வேட்பு மனு வழங்கியமை கட்சியின் உட்கட்சி ஜனநாயகத்தின் பாற்பட்டது எனவும், இதனைஏன் (என் போன்றவர்களால்) புரிந்து கொள்ள முடியவில்லை எனகேள்வியும் எழுப்பியிருந்தார்.
தமிழ்மக்களின் உரிமை விடயத்தில் மைத்ரி பெரிதாக எதுவும் செய்து விடுவார் எனத் தான் கூறவரவில்லை எனத் தெரிவித்த குருபரன் கடந்தகாலங்களில் இருந்த அரசதலைவர்களில் இருந்து மைத்ரி வேறுபட்டவராக இருக்கிறார் என்பதற்குப் பல்வேறு உதாரணங்களை சுட்டிக்காட்டியிருக்கிறார். அதன் மூலம்மைத்ரியின் அரசியல் மீது ஒரு சாதகமான பார்வையையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
மைத்ரியின் அரசியல் தொடர்பான எனது புரிதலுக்கும் குருபரனின் புரிதலுக்கும் இடையே வேறுபாடுகள் இருக்கின்றன. ஓர் ஆராக்கியமான விவாதத்துக்கும் குருபரன் அழைப்பு விடுத்துள்ளமையால் மைத்ரியின் அரசியல் குறித்தும் ஆட்சிமாற்றம் குறித்தும் எனது கருத்துக்களை இங்குபதிவு செய்யவிரும்புகிறேன்.
அதற்கு முதல் நான் முகநூலில் இட்டபதிவு குறித்து சிலவார்த்தைகளைக் கூறவேண்டும். இப்பதிவில் தேர்தலின் முன் எனக் குறிப்பிடப்பட்டது உண்மையிலேயே நடந்தவிடயம். தேர்தலின் பின் எனக் குறிப்பிடப்பட்ட விடயம் நடைபெறாது என முற்றாக நிராகரிக்கப்பட முடியாதது. சுதந்திரக் கட்சிதலைமையிலான ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணி தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி, தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் மகிந்த இராஜபக்சவை பிரதமராகத் தெரிவு செய்ய விரும்பின் மைத்ரியால் அதனை இலகுவில் நிராகரிக்கமுடியாது. மகிந்தவை பிரதமராக நியமித்த பின்னர் தனக்கு அதில் உடன்பாடு இல்லை என்றே கூற வேண்டிவரும்.
எனது இந்தப் பதிவு மகிந்த மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதனையோ அல்லது மகிந்தவுக்கு மைத்ரி தேர்தலில் வேட்புமனு கொடுத்ததையோ கேள்விக்கு உள்ளாக்கவில்லை.
மைத்ரி சொல்வதும் செய்ய வேண்டி வருவதும் வெவ்வேறாக உள்ளமையினைச் சற்றுக் கேலியுடன் இப்பதிவு சுட்டிக்காட்டுகிறது. தான் மக்கள் மத்தியில் கூறுவதைதானே மீறவேண்டியதோர் அரசியலைச் செய்யும் நிலைக்கு மைத்ரி உள்ளாகியிருக்கிறார். தானே அங்கீகரித்த ஒரு முடிவினைத் தானே பின்னர் நிராகரித்து மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
இதனை ஒரு ஜனநாயக நடைமுறையாக நாம் கொண்டாட முடியாது. மைத்ரி சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர். கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு அவர் பொறுப்பெடுக்க வேண்டும். பொறுப்பெடுத்தலும் ஜனநாயகக் கடமைகளில் முக்கியமானது. கட்சியின் பெரும்பான்மை விருப்புக்கமைய அவர் முடிவெடுத்தால், அல்லது முடிவெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டால், அல்லது எடுக்கப்படும் முடிவுகளுக்கு அழுத்தத்தின் அடிப்படையில் சம்மதம் தெரிவித்தால் அந்தமுடிவுகளை அவர்தாங்கி நிற்கவேண்டும். அல்லது அவரை மீறி முடிவுகள் எடுக்க்கப்படாமல் தடுத்துநிறுத்த வேண்டும். முடியாவிடின் கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து அவர் விலக வேண்டும். அதனைவிடுத்து கட்சித் தலைவராகவும் இருந்து கொண்டு கட்சியின் சார்பில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்குப் பொறுப்பும் எடுக்காமல் அம்முடிவில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதனை முடிவு எடுக்கப்பட்ட பின்னர் மக்களுக்கு வெளிபடுத்துவதனை நhம் எப்படி விளங்கிக்கொள்வது? இதுஎ னக்கு உட்கட்சி ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் செயற்பாடாகத் தெரியவில்லை. கட்சிக்குள் இருக்கும் குழப்பத்தின் வெளிப்பாடாகத்தான் தெரிகிறது.
மைத்ரி ஏன் இவ்வாறு நடந்தகொள்ள வேண்டிவருகிறது? எனது பார்வையில் மைத்ரியின் அரசியல் தற் போது இரட்டை விசுவாசத்துக்குட்பட்டு அந்த விசுவாசம் ஒருபிளவுண்ட விசுவாசமாக மாறியிருப்பதே இதற்குக் காரணம். இங்கு பிளவுண்ட விசுவாசம் என்பது இரு முரண்பட்டு நலன்களுக்களுக்கிடையில் ஒருவரின் விசுவாசம் சிக்கிக்கொள்வதனைக் குறிக்கிறது. இது குறித்து நான் ஏற்கனவே தினக்குரல் பத்திரிகையில் «ஆட்சிமாற்றத்தின் பலிக்கடாக்கள் யார்» என்ற கட்டுரையில் பதிவு செய்திருக்கிறேன். அக்கட்டுரையின் ஓரிடத்தின் நான் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறேன். «கட்சிக்குள் மகிந்தவுக்கு அதிகரித்துவரும் ஆதரவுக்கு அவர் விடுதலைப்புலிகளை வெற்றி கொண்டதலைவர் என்பது மட்டும்தான் காரணமா? இனவாதிகள் எல்லோரும் மகிந்தவின்பக்கம் தான் உள்ளனரா? மைத்திரியின்பக்கம் இனவாதிகள் பலர் இல்லையா? இங்கு அதிககவனம் கொடுக்கப்படாத முக்கியமான பிரச்சினையாக இருப்பது மைத்திரியின் விசுவாசம் சுதந்திரக்கட்சிக்கும் தன்னை ஜனாதிபதித் தேர்தலில் வெல்லவைத்த தரப்பினர்க்கும் இடையே பிளவுண்டு இருப்பதுதான். இதனால் மைத்திரியால் சுதந்திரக்கட்சியை முழுவீச்சுடன், முழுமனதுடன் தலைமைதாங்க முடியவில்லை. அவ்வாறு சுதந்திரக் கட்சியைத் தலைமைதாங்குவதானால் மைத்திரி ஐக்கியதேசியக்கட்சியினை மூர்க்கமாக எதிர்த்து அரசியல் செய்யவேண்டும். தேர்தல் காலத்தில் ஐக்கியதேசியக் கட்சியினைத் தோற்கடிப்பதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யவேண்டும். அதனைத் தற்போதய சூழலில் மைத்திரியால் செய்யமுடியாது. இதுவே சுதந்திரக்கட்சிக்குள் தோற்றம் கண்டுள்ள முரண்பாடுகள் மகிந்தவுக்குச் சாதகமாக வளர்ச்சியடைந்து செல்வதற்கு முக்கியமானகாரணம்.» (தினக்குரல்21.06.2015)
மைத்ரி 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுதந்திரக்கட்சியில் இருந்தவர். சுதந்திரக்கட்சியின் மீது அவருக்கு விசுவாசம் உண்டு. ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் அவரது சுதந்திரக்கட்சியினை எதிர்த்துப் போட்டியிட்டவர். அவரது வெற்றிக்குக்காரணமாக இருந்தவை ஐக்கியதேசியக்கட்சி, ஜாதிககெல உறுமய போன்ற கட்சிகளின் சிங்களவாக்குகளும், தமிழ், முஸ்லீம்மககளின்; வாக்குகளுமே. மேலும் மகிந்தவுக்கு எதிரான ஆட்சிமாற்றத் திட்டம் வெறுமனே உள்நாட்டு முயற்சியல்ல. இதற்கு அனைத்துலகப்பரிமாணம் உண்டு. அனைத்துலகக் கண்காணிப்பாளர்களும், காப்பாளர்களும் உண்டு. இவ் ஆட்சிமாற்றத்தின் சூத்ரதாரிமைத்ரி அல்ல. அவர் இதில் ஒருகரு விமட்டுமே. இதனால் அவர் அதிகாரம்மிக்க ஜனாதிபதியாக இருந்தாலும் வகுக்கப்பட்ட திட்டத்துக்கு அமைவாகவே நடக்கமுடியும்.
இந்தச் சூழ்நிலையில் மைத்ரி ஜனாதிபதியாகிய பின்னர் சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். ஆட்சி மாற்றத்துக்காக மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சுதந்திரக் கட்சியினை பயன்படுத்த முனைகிறார்.
இதேவேளைசுதந்திரக்கட்சியின்நலன்களுக்கும்ஆட்சிமாற்றத்தின்நலன்களுக்குமிடையேஉள்ளமுரண்பாடுகளுக்குள் சிக்கிக் கொள்கிறார். அவரது தலைமையில் உள்ளசுதந்திரக் கட்சி பிளவுபடுவதனையும் அவர் விரும்பவில்லை. அதேவேளை சுதந்திரக் கட்சி மீதான அவரது விசுவாசத்தை விட ஆட்சிமாற்றத்தின மீதான விசுவாசமும் கடப்பாடும் அவரை அழுத்துகிறது. இத்தகையபிளவுண்ட விசுவாசமே மைத்ரியின் அரசியல் ஊடாக வெளிவருகிறது. இத்தகைய பிளவுண்ட விசுவாசத்துடன் மைத்ரி நீண்டகாலம் இயங்கமுடியாது.
இறுதியாக மைத்ரி நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையுடன் ஆட்சிமாற்றத்தின் மீதான அவரது விசுவாசத்தை சுதந்திரக்கட்சியினை விடமுக்கியமானதாக அவர் வெளிப்படுத்திவிட்டார். இதன்பின்னர் அவர் நீண்டகாலம் சுதந்திரக்கட்சியின் தலைவராக இருப்பது கடினம். அவர்சுதந்திரக்கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகவேண்டியநிலை விரைவில் வரும் என்றே தோன்றுகிறது.
மைத்ரி ஏனைய தலைவர்களை விட வித்தியாசமானவராக இருக்கிறார் என குருபரன்சுட்டிக் காட்டியவற்றை; இப்பின்னணியுடன்தான் நாம் விளங்க முயற்சிக்க வேண்டும். ஏனையதலைவர்கள் எவரும் தாம் சாந்ந்திருந்த கட்சியை எதிர்க்கும் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகியதில்லை.
மைத்ரி கட்சி நலன்பாராது இயங்கும் தலைவராக உள்ளார்என குருபரன் விதந்துரைப்பதனையும் மைத்ரி தேர்தலில் வெற்றி பெற்ற விதம் குறித்தகவனத்துடன் தான் நோக்கவேண்டும். தனக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தும் ரணிலுக்கு ஆலோசனை சொன்னார் என்பதனையும் அவர் ரணிலிடம் வாக்குக்கடன் பெற்றிருக்கிறார்எ ன்பதனையும் இணைத்துத்தான் பார்க்க வேண்டும். மற்றைய தலைவர்களை விடமைத்ரி கண்டுண்டு இருக்கும் அரசியற் சூழல் வேறுபட்டது. இந்த அரசியற் சூழலுக்குள் இருந்து தான் மைத்ரி தனது முடிவுகளைஎடுக்கிறார்.
இங்கு மைத்ரி மீது வைக்கப்படும் விமர்சனம் அரசியல்ரீதீயானது. அவரது தனிப்பட்ட குணாம்சங்கள் சார்ந்தது அல்ல. முன்னர் இருந்த அரசதலைவர்களை விட மைத்ரி எளிமையானவராகத் தெரிகிறார். நல்ல பலபண்புகளையும் அவர்கொண்டிருக்கக் கூடும். ஆனால் ஒருவரின் தனிப்பட்ட குணாம்சங்களுக்கு தேர்தல் முறைக்குட்பட்ட ஜனநாயக அரசியலில் மிக வரையறுக்கப்பட்ட பாத்திரம்தான் உண்டு. சிறிலங்காவின் சிங்கள இன மேலாதிக்க அரசகட்டமைப்பை அவர் தலைமை தாங்குகிறார். அதற்கு விசுவாசமாக இருக்கிறார். அதற்குள் இருந்துதான் அவர்முடிவுகளை எடுப்பார். எடுக்கமுடியும். ஒற்றையாட்சி அரசியற் கட்டமைப்பை மாற்றத்துக்கு உள்ளாக்க அவர்தயாராக இல்லை. வடக்கு கிழக்கு இணைப்புக்கு அவர்தயாராக இருக்கிறார் என நம்புவுதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. தமிழ் மக்களுக்கு உரிமைகள் எதனையும் பெரிதாக மைத்ரி வழங்கப் போதில்லை என்பதனை குருபரனும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இங்கு எனக்கு எழும் கேள்வி என்னவெனில் எவ்வளவு காலம்தான் நாம் ஆட்சிமாற்றத்தைக் கொண்டாடப் போகிறோம்? ஆட்சிமாற்றம் தொடர்பான பரவசநிலையில் எவ்வளவுகாலம்தான் நாம் இருக்கப் போகிறோம்? ஆட்சிமாற்றம் ஒப்பீட்டளவில் அதிகரித்த சிவில் வெளி உள்ளடங்கலான சிலநன்மைகளை கொண்டுவந்தது உண்மைதான். அதேவேளை சிறிலங்கா மீது அதிகரித்துவந்த அனைத்துலக அழுத்தத்தைத் தணித்து சிறிலங்கா அரசை அதுபாதுகாத்தும் இருக்கிறது. ஆட்சிமாற்றத்தின் சாதக பாதகங்களைக் காலம் தான்தீர்மானிக்க வேண்டும். ஆட்சிமாற்றத்தின் ஊடாக மகிந்த இராஜபச்சவை நிறைவேற்று அதிகாரத்தில் இருந்து அகற்றும் இலக்கு நிறைவேறியிருக்கிறது. இனி மகிந்த பிரதமராகவந்தால் கூட மைத்ரியின் அதிகாரத்துக்கு உட்பட்டுத்தான் செயற்படவேண்டும்.
இதனால் ஆட்சிமாற்றத்தைப் பாதுகாப்பது என்ற பெயராலோ அல்லது சிங்கள பௌத்த தேசியவாதம் திரட்சியடைவதைத் தடுப்பது என்ற பெயராலோ தமிழ்மக்களின் அரசியல் அடிப்படைகளையும் உரிமைகளையும் கைவிடுவதனை தமிழர் அரசியற் தலைமைகள் செய்யுமானால் அது அரசியற் தற்கொலைக்கு ஒப்பானதொரு விடயமாவே இருக்கும். ஆனால் நடைபெறும் விடயங்களைப் பார்க்கும் போது இந்த அரசியல் தற்கொலைப் பாதையில் கூட்டமைப்பு அரசியற்தலைவர்கள் பயணிக்கத் தொடங்கிவிட்டனர் போலத்; தெரிகிறது. இது தொடர்பான சிலஉதாரணங்களை இங்குசுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்ரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சி நிலைப்பாட்டை உள்ளடக்கினால் தமிழ்மக்களை மைத்ரிக்கு வாக்களிக்கவைப்பது கடினமாக இருக்கும் எனகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் மைத்ரி தரப்புக்கு எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது. இதன்காரணமாக அரசியலமைப்பு மாற்றத்துக்கு மக்கள் வாக்கெடுப்புத் தேவைப்படும் விடயங்களில் மைத்ரி எந்தமாற்றத்தையும் செய்யட்ட்டார் எனத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டு ஒற்றையாட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தில் மறைத்துவைக்கப்படடிருக்கிறது. (ஒற்றையாட்சி முறையினை மாற்றுவதனால் அதற்குமக்கள் வாக்கெடுப்புத் தேவைப்படும்.) இவ்வாறு திட்டமிட்டவகையில் தமிழ்மக்களை ஏமாற்றும் நோக்குடன் மைத்ரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சி நிலைப்பாடு மறைத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது. ஒற்றையாட்சி தொடர்பாக ஜாதிக கெலஉறுமயவுடன் ஒப்பந்தமும் செய்யப்பட்டிருக்கிறது. மைத்ரி ஒற்றையாட்சி நிலைப்பாட்டைத் தான்கொண்டிருக்கிறார் என்பதுவும், மைத்ரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சி மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதுவும் சுமந்திரனுக்கும் ஏனைய கூட்டமைப்பத் தலைவர்களுக்கும் மிகநன்றாகத் தெரியும். மக்களுக்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் இருக்கும் அரசியற் தலைவர்கள் எவரும் ஒற்றையாட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதனை மக்களுக்கு கூறியிருப்பார்கள். மைத்ரிக்கு வாக்களிக்கக் கோரினாலும் கூட மக்களை விழிப்பாக இருக்க வேண்டும் எனக் கூறி எச்சரித்திருப்பார்கள். ஆனால் எவரும் வாய்திறக்கவில்லை. மாறாக மைத்ரி ஜனாதிபதியாகிய பின்னரும் மைத்தரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சி என்பது குறிப்பிடப்படவில்லை எனவும் அதுசாதகமான விடயம் எனவும் மேமாதம் 15 ஆம்திகதி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் நடை பெற்றவிவாதத்தின்போது சபையில் சுமந்திரன்கூ றியிருக்கிறார். (விபரம்தேவைப்படுவோர் குமாரவடிவேல் குருபரன்எழுதிய இக்கட்டுரையினப்படிக்கவும் http://maatram.org/?p=3366 ) மைத்ரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சி மறைத்து வைத்திருக்கப்பட்டிருக்கிறது என்பதனை நன்கறிந்தும் ஏன் இவர் இப்படிக்கூறினார்? இவரால் எப்படி மனதறிந்து இப்படிப் பொய்கூற முடிகிறது? இவ்வாறு பொய்கூறுவதனை நாம்எவ்வாறு விளங்கிக் கொள்வது? ஆட்சி மாற்றத்தினப் பலப்படுத்துவதனை நோக்கமாகக் கொண்ட பொய்என்றா? தமிழ்மக்களின் தேசியப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு தொடர்பாக முக்கியமான தொருவிடயத்தில் பொய்கூறும் இவர்களை மக்கள்எவ்வாறு நம்பமுடியும்?
கூட்மைப்பின் தலைவர் சம்மந்தன்தமக்கு 20 உறுப்பினர்களைத் பெற்றுத்தருமாறும் தாங்கள் கட்டாயம் 2016 ஆம் ஆண்டுக்குள் அரசியல்தீர்வை எட்டுவோம் எனவும் தேர்தல்பரப்புரை செய்கிறார். எத்தகைய தீர்வைப் பெற்றுத் தருவார் என்பதுதொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை. தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதனைத் தெரிவிப்போம் என்கிறார். 2010 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தல் விஞ்ஞாபனத்துக்கே இவர்கள் உண்மையாக நடக்கவில்லை. இவர்கள் ஆதரித்துநிற்கும் ஆட்சிமாற்றத்தின் நாயகர்களான மைத்ரியும் ரணிலும் தாம் ஒற்றையாட்சி முறையினை மாற்றமாட்டோம் எனத்தெளிவாக வெளிப்படுத்திவிட்டனர். அப்படியானால் சம்மந்தன் பெற்றுத்தரப் போகுத்தீர்வு எத்தகையது? ஒற்றையாட்சிக்கு உட்பட்டதீர்வா? சமஸ்டித்தீர்வை கூட்டமைப்புக் கைவிட்டுவிட்டதா?
மகிந்த பிரதமராக வருவதனைத்தடுத்து மாற்றத்தைப் பலப்படுத்த கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் என்றொரு பரப்பரையும் நடைபெறுகிறது. பொதுத் தேர்தலில் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் ஊடாக மகிந்த பிரதமராகவருவதனை எவ்வாறு தடுக்கமுடியும்? அப்படிதடுப்பதானால் ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டு அரசாங்கத்துடன் சேருவதுதான் வழி. (இது தேர்தல்முடிவுகளிலேயே தங்கியுள்ளது). இவ்வாறு உடன்பாடு எதனையும் கூட்டமைப்பு ரணிலுடன் இரகசியமாகச் செய்துள்ளதா? இதற்காகத்தான் 20 உறுப்பினர்களை கூட்டமைப்புத் தலைவர் சம்மந்தன் கேட்கிறாரா? தமிழரசுக் கட்சித்தலைவர் மாவைசேனாதிராஜா கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணையாது என்கிறார். அதுஉண்மையா? அதனைக் கூட்டமைப்பு தனது தேர்தல்விஞ்ஞாபனத்தில் வெளிப்படுத்துமா?
இக்கட்டுரையில் இவற்றைக் குறிப்படுவதன் நோக்கம் மாற்றத்தைப் பலப்படுத்துவது என்ற பெயரில் கூட்டமைப்பு தமிழ்மக்களின் அடிப்படை நிலைப்பாடுகளையும் உரிமைகளையும் கைவிடுகிறதா என்ற கேள்வி எழுவதன் காரணமாகத்தான். தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு இரகசியப் பேச்சுக்கள் எதுவும் உதவப்போதில்லை. ஒற்றையாட்சி முறையில் மாற்றம் ஏற்படாமல் தமிழரின் தேசியப்பிரச்சினை தீரப் போவதுமில்லை. தேர்தலின்பின் கூட்டமைப்பு அரசாங்கத்தில் பங்குபற்றி அமைச்சர்பதவிகளைப் பெற்றுக் கொண்டாலும் கூட ஒற்றையாட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தமுடியாது. ஒற்றையாட்சியில் மாற்றம் எற்படுத்துவதற்கு சிங்கள பௌத்ததேசியவாதம் அனுமதியாது என்றால் மகிந்த மட்டுமல்ல அதே சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பக்கம்தான் மைத்ரி, ரணில், சந்திரிகா எல்லோருமே நிற்கிறார்கள்.
இதனால் ஆட்சிமாற்றம் தொடர்பான பரவசநிலையில் இருந்து விடுபட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழிமுறைகள் குறித்துச் சிந்திக்க வேண்டும். இதற்குத் தமிழ்மக்கள் தாம்விரும்பும் அரசியல் தீர்வு என்ன என்பதனைத் தெளிவாக முன்வைக்க வேண்டும். அத்தீர்வை எட்டுவதற்கு வியூகம் அமைத்துச் செயற்பட வேண்டும். அது எத்தகைய வியூகமாக இருந்தாலும் மக்கள் மயப்பட்ட அரசியலில் இருந்து கட்டி எழுப்பப்பட வேண்டும். எந்தவொரு அரசியல் தீரவுக்கான அடிப்படையும் தேசியம், தாயகம், சுயநிர்ணம் என்ற திம்புக் கோட்பாடுகளில்ருந்துதான் எழமுடியும். இது குறித்தவிவாதங்கள் ஆரோக்கியமான முறையில் நடைபெறின் நாம் செல்ல வேண்டிய திசையைக் கண்டறிய அவை உதவும்.