
இலங்கையின் 68வது சுதந்திரதின நிகழ்வில் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சுதந்திர நாள் நிகழ்வில் முதற்கட்ட நிகழ்வுகள் காலிமுகத் திடலில் இன்று காலை 8.45 மணியளவில் இடம்பெற்றது.
68 வது சுதந்திர தின நிகழ்வில் எதிர்க்கட்சித்தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உட்பட அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் என பலர் கலந்து கொண்டதுடன், வெளிநாட்டு தூதுவர்கள், அழைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, மகிந்த தரப்பு அணியினர் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை.
இலங்கையின் சுதந்திர நாள் நிகழ்வை தமிழர்கள் நீண்ட காலமாகவே புறக்கணித்து வருகின்றனர். இந்த நிலையில், இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கடந்த வருடம் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றமை குறித்து பரவலான விமர்சனங்கள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் உரையினைத் தொடாந்து இலங்கை முப்படை மற்றும் பொலிஸாருடைய மரியாதை அணிவகுப்புக்கள் இடம்பெற்றறன. மரியாதை அணிவகுப்புக்களைத் தொடர்ந்து இலங்கை யுத்தப்படடையினரின் கனரக ஆயுதங்களினதும், ஆயுதப் படைப்பிரிவினரின் இராணுவ வாகனங்களினதும் அணிவகுப்பு கண்காட்சிகள் இடம்பெற்றன.
அத்துடன் இலங்கைக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள், கடற்கலங்கள், மற்றும் விமானப்படையினருக்குச் சொந்தமான விமானங்களினதும் சாகசங்களும் இடம்பெற்றன. இதன்போது பராசூட் வீர, வீராங்கனைகள் சுமார் 6000 அடி உயரத்திலிருந்து பராசூட் மூலம் பறந்து சாகசங்களை நிகழ்த்தி, தேசிய நிகழ்விற்கு மரியாதை செலுத்தினர்.
இராணுவ அணிவகுப்புக்களைத் தொடர்ந்து தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய சுதந்திர தினத்தின் முதற்கட்ட நிகழ்வுகள் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தேசிய நிகழ்வினை உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்கள் பலவும் நேரலையாக ஒளிப்பரப்புக்களை மேற்கொண்டிருந்தன.