ஜே.ஆரின் இனப்படுகொலை ஆசை! முள்ளிவாய்க்காலில் நிறைவேற்றிய மஹிந்த: பாராளுமன்றில் சிறிதரன் சூளுரை

தமிழ் மக்களை அழிப்பதில் காட்டும் அரசியல் திட சித்தத்தை (Political Will) தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் சிங்களத் தலைவர்கள் காட்டுவதில்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிறீதரன் எம்.பி பாராளுமன்றில் ஆற்றிய உரை பின்வருமாறு,
நான் நீதியின் குரலாய் எழுந்து நிற்கின்றேன்.
நான் பேசப் போவது நீதியைத் தவிர வேறொன்றும் இல்லை.
நான் பேசப் போவது உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை.
நான் பேசப் போவது ஜனநாயகத்தைத் தவிர வேறொன்றும் இல்லை.
யார் எவர் இங்கு நீதிமான்களாய் இருக்கின்றீர்களோ! அத்தகைய நீதிமான்களின் இதயங்களை எனது வார்த்தைகள் துளைக்கும்.
யார் எவர் இங்கு தர்மவான்களாக இருக்கின்றீர்களோ! அவர்களின் கண்களை என் வார்த்தைகள் கசிய வைக்கும்.
இப்போது நம்பிக்கைகள் பற்றியும், நல்லிணக்கம் பற்றியும், நீதி பற்றியும் அதிகம் பேசப்படுகின்றது.
நம்பிக்கைக் கொள்ள காரணங்கள் எதுவும் இல்லை.
நல்லிணக்கத்திற்கான நடைமுறைகள் எதுவும் இல்லை.
நீதி பற்றிய அனுபவமும், வரலாறும் இங்கு இல்லை.
நாங்கள் எதை நம்புவது, எங்கிருந்து எதை ஆரம்பிப்பது என்பதை நீங்கள் தான் நடைமுறையில் செய்துகாட்ட வேண்டும்.
நம்பிக்கையை கட்டியெழுப்புவது இலகுவான காரியமல்ல.
நீங்கள் எதை செய்து காட்டுகிறீர்களோ, எதை நிரூபிக்கிறீர்களோ அதில் இருந்துதான் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும்.
எமது மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள காயங்களும், வடுக்களும், துயரங்களும் மிகவும் ஆழமானவை. எங்கள் மக்கள் உங்களில் யாரையும் நம்பத் தயாராக இல்லை. ஆயினும் நாங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஒரு சந்தர்ப்பத்தை உங்களுக்குத் தர எங்கள் மக்கள் முன்வந்திருக்கிறார்கள்.
நாங்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டவர்களாய் வெறுங் கையுடன் எங்கள் மக்களிடம் போகமுடியாது. வரலாற்றில் நீங்கள் ஏற்படுத்திய களங்கமான பக்கங்களை கழுவு உங்களுக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறோம்.
அதைப் பயன்படுத்த நீங்கள் தயாரா என்பதை உங்கள் செயல்களால்தான் நீங்கள் நிரூபிக்க வேண்டும். வாக்குறுதிகளும் வேண்டாம், பசப்பு வார்த்தைகளும் வேண்டாம், உண்மைக்கும் நீதிக்கும் சாட்சியாய் நீங்கள் செயற்பட்டுக் காட்டுங்கள்.
“ஒன்றுபட்டு வாழ்வோம்” என்று கண்களை விழித்தபடி கனவு காண முடியாது. ஏனெனில் எங்கள் கண் முன் நடந்தேறிய அநீதிகளும், கொடுமைகளும், படுகொலைகளும் அந்தளவுக்கு மோசமானவை, மனித நேயத்திற்கு அப்பாலானவை, சகிக்க முடியாதவை, நாகரீக சமூகத்தால் கண்கொண்டு பார்க்கப்பட முடியாதவை.
நான் இரத்தமும், தசையுமான பச்சைக் கண் முன் தோன்றுகின்ற எளிமையான உண்மையை உங்கள் முன் ஒருகணம் காட்சிப் படுத்துவதுடன் பேரழிவுக்கான பின்னணியை முன்வைக்கப் போகிறேன்.
இந்த நாடாளுமன்றத்தால் பிரதமரானவரும், முழு நாடு தழுவிய மக்களால் ஜனாதிபதியாக ஆக்கப்பட்டவருமான திரு. ஜே.ஆர்.ஜெவர்த்தன லண்டன் மாநகரில் இருந்து வெளியாகும் ‘லண்டன் டெய்லி டெலிகிராப்’ என்ற பத்திரிகைக்கு 1983 யூலை 11ஆம் திகதி அளித்த நேர்காணலில்,
அதாவது கறுப்பு யூலைக்கு 12 நாட்களுக்கு முன் கூறிய வார்த்தைகள் மட்டும் போதும் இலங்கை அரசின் தமிழின அழிப்புக் கொள்கையை தெளிவாக பறைசாற்ற.
“யாழ்ப்பாண மக்களின் அபிப்ராயத்தைப் பற்றி எமக்கு எதுவும் கவலையில்லை. அவர்களைப் பற்றி எம்மால் எதுவும் யோசிக்க முடியாது. அவர்களின் உயிர்களைப் பற்றியோ, எங்களைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றியோ எமக்குக் கவலையில்லை.”
“I th not worried about the
Opinion of the Jaffna people…
Now we can’t think of them.
Not about their lives or of
their opinions about us.”

President J.R. Jayawardene
London Daily Telegraph, 11 July 1983

1934ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து அரை நூற்றாண்டுக்கும் மேலான 56 ஆண்டுகள் இலங்கையின் அரசியலை வழிநடத்திச் சென்ற ஒருவர், பல உயர் அமைச்சுப் பதவிகளை வகித்த ஒருவர், பிரதமர் பதவி வகித்த ஒருவர்,
ஒன்றுக்கு இரண்டு முறைகள் தொடர்ந்து ஜனாதிபதி பதவி வகித்த ஒருவர் இப்படி தமிழ் மக்களை படுகொலை செய்வதில் தமக்கு கவலையில்லை என்று கூறியிருந்தார் என்றால் காலத்திற்குக் காலம் தமிழ் மக்களை கொலைவெறி ஆடிய பாமர சிங்கள மக்களை எப்படி குறை சொல்ல முடியும்.
தலைவர்களால் தூண்டப்பட்டு ஒரு படுகொலை கலாச்சாரம் சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டது என்பதே உண்மை. ஜே.ஆர். கூறிய இந்த இனப்படுகொலை பேரராசையைத்தான், அந்த பெருவிருப்பத்தைத்தான் ராஜபக்ஷ அரசாங்கம் முள்ளிவாய்க்காலில் நிறைவேற்றியது.
இங்கு ஒரு தனிநபர் அல்ல பிரச்சனை, சிங்களத் தலைவர்களால் உருவாக்கப்பட்ட கொலைக் கலாச்சாரமும், அக்கொலைக் கலாச்சாரத்திற்கு ஏதுவாகவும், பொருத்தமாகவும் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பும், அரச இயந்திரமும் தான் பொறுப்பு.
யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்த போது Zero Casualty  என்று மக்களுக்கு பொய் சொல்லி இனப்படுகொலை யுத்தத்தை நிகழ்த்தினீர்கள். ஒரு வேளை அதை சிங்கள மக்கள் நம்பினார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.
ஆனால் யுத்தம் முடிந்த சிலவாரங்களிலேயே உண்மை வெளிவரத் தொடங்கி விட்டது. லட்சக்கணக்கில் தமிழ் மக்கள் ஆண், பெண், சிறுவர், சிறுமி, கர்ப்பிணித் தாய்மார், முதியோர் என வேறுபாடின்றி சுமாராக ஒன்றரை லட்சம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு விட்டனர் என்ற திடுக்கிடும் தகவல் நம்பகமான வகையில்,
ஒளி, ஒலி நாடாக்கள் மூலமும் மற்றும் யுத்த களத்தில் இருந்து வெளியே வந்த மக்களின் பேட்டிகளின் வாயிலாகவும், உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களின் வாயிலாகவும் வெளிவந்த வண்ணம் இருந்தன.
மறுக்க முடியாத நவீன சாதன ஆதாரங்களுடன் சனல்-4 தொலைக் காட்சி வெளியிட்ட ஆவணப்படங்கள் உலகின் மனசாட்சியை உலுக்கியதுடன் இலங்கையின் கௌரவம், நன் மதிப்பு என யாவுமே காற்றில் பறந்தன.
இலங்கை இராணுவத்தை கொலை இயந்திரம் (Killing Machine) என்று சர்வதேச சமூகத்தால் வர்ணிக்கப்படும் நிலை உருவானது. ஐ.நா. சபையும் 40,000 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் கொல்லப்பட்டதாக அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா சர்வதேச விசாரணை கோரி ஐநா சபைக்கு சென்றது.
இத்தனையும் நடந்த பின்பும் கொடூரமாக கொல்லப்பட்ட தமிழ் மக்கள் பற்றி சிங்கள மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட வில்லை, அனுதாபம் பிறக்க வில்லை,
ஆறுதல் வார்த்தைதானும் கூற சிங்கள மக்கள் மத்தியில் நீதிமான்கள் எவரும் இருக்கவில்லை. மத நிறுவனங்களுக்கும், சமூக நிறுவனங்களுக்கும், ஊடகங்களுக்கும் கூடவே இது பொருந்தும்.
நீதிக்காக குரலெழுப்பாத, ஒரு சிறு அனுதாபம்தானும் தமிழ் மக்களுக்கு தெரிவிக்காத, குறைந்தபட்ச படுகொலையை ஒப்புக்கொள்ளத்தானும் தயாரில்லாத சிங்கள கட்சிகளிடமும், சிங்கத் தலைவர்களிடமும், சிங்களத் சமூத்தவர்களிடமும், சிங்கள அறிஞர்களிடமும் இருந்து நாம் எவ்வாறு நீதியை எதிர்பார்த்து காத்திருக்க முடியம்.
இலட்சக்கணக்கான ஆண்டுகால மனித நாகரீகமும், ஆயிரக்கணக்கான ஆண்டுகால மத தர்மங்களும், மத போதனைகளும், நூற்றாண்டுக்கணக்கான ஜனநாயகமும் முள்ளிவாய்க்காலில் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டன. நீங்கள் பெருமைபடும் உங்கள் இராணும்தான் இதனை நிறைவேற்றியது.
புதைகுழி வழிபாட்டில் இருந்தே நாகரீகங்கள் தோன்றியது என்பர். மறுக்கப்பட்ட நீதிக்காகவும், உரிமைக்காகவும் போராடி மடிந்த வீர மறவர்கள் புதைக்கப்பட்ட துயிலும் இல்லங்களை உங்கள் இராணும்தான் கனரக பீரங்கி வண்டிகளைக் கொண்டு இடித்து தரைமட்டமாக்கியது.
அந்த பீரங்கி வண்டிகள் வெறுமனே கட்டங்களை; மட்டும் நொருக்க வில்லை கூடவே பெற்றோரினதும், உறவினரினதும், நண்பர்களினதும் இதயங்களையும் நொருக்கின. உங்கள் பீரங்கி வண்டிகளினால் துயிலும் இல்லங்களை மட்டுமல்ல உங்கள் நாகரீகத்தையும், பண்பாட்டையும் கூடவே நொருக்கியுள்ளீர்கள்.
இதற்கு இனியாவது நிவாரணம் தேட நீங்கள் தயாரா. பெற்றோரின் ஆத்ம திருப்திக்காக இவற்றை மீள கட்டியெழுப்ப நீங்கள் தயாரா. உங்கள் பதிலிற்தான் ஐக்கியத்திற்கும், ஒன்றுபட்ட வாழ்வுக்குமான தொடக்கம் ஆரம்பமாக முடியும்.
ஜனவரி 8ஆம் திகதி புரட்சி நிகழ்ந்து விட்டதாக பேசுகிறீர்கள். இந்த புரட்சி ஈழத்தமிழர்களின் வாக்குக்களாற்தான் ஏற்பட்டது என்பதே உண்மை.
இன்று நீங்கள் பெற்றிருக்கும் ஆட்சி மாற்றமும், சுவாசிக்கும் ஜனநாயக காற்றும் ஈழத்தமிழர்களின் வாக்குச் சீட்டுக்களால் உங்களுக்கு கிடைத்தவைதான்.
அப்படி இருந்தும் 100 நாள் வேலைதிட்டத்தில் எங்களுக்கு என்ன செய்தீர்கள்? யாரை இனப்படுகொலைக்கு பொறுப்பான தலைமை இராணுவ தளபதி என்று சர்வதேச சமூகமும், ஈழத்தமிழர்களும்,
மனித உரிமை அமைப்புக்களும் விரல் சுட்டிக் காட்டியதோ அந்த தளபதிக்கு ஃபீல்ட் மார்ஷல் என்ற அதி உயர் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளதன் மூலம் தமிழ் மக்களின் இதயங்களை புண்படுத்தியுள்ளீர்கள்.
இது இனப்படுகொலைக்கான ஒரு கௌர அங்கீகாரமல்லவா? அப்படி என்றால் நாங்கள் யாரை நம்புவது? எந்த நம்பிக்கையில் இருந்து எதிர்காலத்தை நோக்குவது. எல்லாம் வெறுமையாக அல்ல, மாறாக எதிர்மறையாக உள்ளன.
1987ஆம் ஆண்டு ஐதேக பதவியில் இருந்த போது, லலித் அதுலத்முதலி தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் போது அவரால் மேற்கொள்ளப்பட்ட ஆப்பரேஷன் லிபரேஷன் என்ற இன அழிப்பு இராணுவ நடவடிக்கை இந்தியாவின் எச்சரிக்கையால் இடையில் கைவிடப்பட்டது.
அந்த இராணுவ நடவடிக்கையைத்தான் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் கோத்தபாய, பொன்சேகா தலைமையில் மேற்கொள்ளப்பட்டு முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான மக்களின் படுகொலையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனவே இங்கு ஐக்கிய தேசிய கட்சியும் சரி, சுதந்திர கட்சியும் சரி ஒரே கொள்கையைத்தான் கொண்டுள்ளன என்பதால் நாங்கள் உங்களில் யாரிடம் இருந்து நீதியை எதிர்பார்க்க முடியும்.
2000ஆம் ஆண்டு திருமதி.பண்டாரநாயக சந்திரிக குமாரதுங்காவின் அரசாங்கத்தின் கீழ் Union of Regions  என்ற ஒரு தீர்வு திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது அந்த தீர்வு திட்ட நகலை,
பல நூறு துண்டாக அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய பிரதமர் கிழித்தெறிந்த காட்சியை நேரடி தொலைக் காட்சி வாயிலாக கண்ட மக்கள் இந்த அரசாங்கத்தின் கீழ் எப்படி சமாதனமும், நீதியும் எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.
பிரதமராக பதவியேற்றதும் திரு.ரணில் விக்ரமசிங்க சர்வதேச விசாரணையை ஏற்றுக் கொள்வது என்பது இலங்கையின் நீதித்துறையை அவமதிப்பதாக அமையும் என்று கூறி சர்வதேச விசாரணையை முற்றிலும் நிராகரித்தார்.
இலங்கையின் நீதித்துறைக்கு நீதியின் பெயரால் ஆன சிறப்பான வரலாற்றை யாரால் காட்ட முடியும். உங்களின் ஆயுதம் தாங்கிய படைப்பிரிவின் பாதுகாப்பில் உள்ள உங்களின் வெலிக்கடை சிறைச்சாலையில் 53 தமிழ்க் கைதிகள் படுகொலை செய்யப்பட்டமைக்காக இதுவரை இலங்கையின் நீதித்துறை நீதி விசாரணை நடத்தியது கிடையாது.
1956ஆம் ஆண்டு கல்லோயாவில் நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழ் விவசாயிகள் படுகொலை. 1958 இனப்படுகொலை கலகம், 1977, 1981, 1983 கறுப்பு யூலை என தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட எந்தொரு இனப்படுக்காகவும் இதுவரை எந்தொரு நீதி விசாரணையும் நடைபெற்றது கிடையாது.
அப்படி இருக்கையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்காக உள்நாட்டு நீதி விசாரணை நடத்தப் போவதாக கூறுவது நம்பமுடியாத, ஏற்ற முடியாத விந்தையாகும்.
இப்போது யுத்தத்தால் அழிக்கப்பட்ட மக்களுக்கு ஜீவாதார நிவாரணம் பற்றி பேசுகிறீர்கள். யுத்தால் நீங்கள் ஏற்படுத்திய அழிவுக்கான மேம்போக்கு நிவாரணங்களையே தமிழ் மக்களின் பிரச்சனையாகவும் அதுவே தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை என்றும் திசை திருப்ப பார்க்கிறீர்கள்.
அதாவது போரால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைகளைப் பற்றி பலர் பலவாறு பேசலாம். ஆனால் போருக்கு காரணமான பிரச்சனைகள் உங்களால் தோற்றுவிக்கப்பட்டவை.
இப்போது அதைப் பற்றி பேசாமல் போருக்குப் பின்னான நிவராணம் பற்றி பேசுவதன் மூலம் தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை திசை திருப்புவதாக உள்ளது.
உலகப் பேரரசான, ஜனநாயகத்தின் காவல்காரனான அமெரிக்காவின் கண்முன், திரு.ஒபாமா தலைமையில் அமெரிக்க ஜனநாயக கட்சி பதவிக்கு வந்த ஆறுமாதத்திற்குள் ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் இலங்கையில் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.
உலகப் பெரும் பேரரசான அமெரிக்காவாலும், உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவாலும் அதுவும் இந்தியாவின் அண்டையில் கல்லெறி தூரத்தில் ஒன்றரை லட்சம் மக்களை இலங்கை அரசால் படுகொலை செய்ய முடிந்தமை என்பது அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும், உலக நாகரீகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் விடப்பட்ட சவாலாகவே உள்ளது.
அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீது தாக்குதல் நடத்தி அதில் 3000 அமெரிக்கர்களை படுகொலை செய்த பின் லேடனையும், அவருக்கு ஆதரவான ஆப்கான் அரசையும் நீதியின் பேரால் அமெரிக்கா இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
பின்லேடன் எங்கிருந்தாலும் அவனை வேட்டையாடுவேன் என அன்றைய அமெரிக்க ஜனாதிபதி புஷ் சூளுரைத்தார்.
அதனை இன்றைய அமெரிக்க ஜனாதிபதி திரு. ஒபாமா நிறைவேற்றும் முகமாக பாகிஸ்தானுக்குள் மறைந்திருந்த பின்லேடனை கொன்றுவிட்டு ‘Justice has been done என்று உலகத்திற்கு அறிவித்தார்.
ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்பட்ட பின்னணியில் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற தீர்மானத்தை ஐநா மனிதஉரிமை ஆணையத்தில் அமெரிக்கா முன்மொழிந்தமை எமக்கு ஆறுதல் அளித்தது.
இப்போது உலகப் பேரரசான அமெரிக்காவும், பெரிய ஜனநாயக நாடான, அதுவும் அண்டை நாடான இந்தியாவும் எமக்கான நீதியின் பொருட்டு சர்வதேச விசாரணை நடாத்தப் பாடுபட வேண்டும்.
அமெரிக்காவாலும், இந்தியாவாலும், சர்வதேச சமூகத்தாலும் தரப்பட்ட நம்பிக்கையின் பின்னணியிற்தான் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட தமிழ் மக்கள் வாக்களித்தார்கள்.
ஆட்சிமாற்றத்தால் சீனா பின்தள்ளப்பட்டு விட்டது என்பதோடு எமது பிரச்சனை கைவிடப்பட்டுவிடக் கூடாது.
தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்தில் நம்பிக்கை வைக்கக்கூடிய வகையில் அமெரிக்காவும், இந்தியாவும், சர்வதேச சமூகமும் செயற்படும் என்ற எதிர்பார்க்கையை இவர்கள் வீணாக்கிவிடக் கூடாது.
எமக்குத் தேவை முதலில் நீதி. நீதி வழங்கப்பட்டால் மட்டும் போதாது. நீதி வழங்கப்பட்டதாக கருதப்படவும் வேண்டும்.
எனவே சர்வதேச விசாரணையால் மட்டுமே அந்த நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். இந்த வாக்குறுதியைத் தான் மாகாணசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சர்வதேச விசாரணைக்கான தீர்மானத்தின் மூலமும், கடந்த பொதுத் தேர்தலுக்கான அறிக்கை மூலமும் மக்களுக்கு வழங்கியுள்ளோம்.
கடந்த முக்கால் நூற்றாண்டுக்கும் மேலான நாடாளுமன்ற பதிவேட்டை படித்துப் பாருங்கள். அதில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஒரு பெரும் நேர் கோடாய் விழுகிறது.
அந்த விவாதங்களை படித்துப் பாருங்கள், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றிய சித்திரம் பல வர்ணத்தில் காட்சியளிக்கிறது.
உங்கள் தலைவர்களின் பேச்சுக்களின் வாயிலாகவே அநீதியின் சித்திரமும் தெரியும், நீதி எப்படி கொல்லப்பட்டது என்பதும் தெரியும். ஒரு பானை சோற்றுக்கு பதமாக உங்கள் தலைவர்களின் வார்த்தைகளையே இங்கு எடுத்துக் காட்டாய் கூற முடியும்.
சிங்கள மொழியினதும், இலக்கியத்தினதும் வளர்ச்சிக்கு செழிப்பான தமிழ் பின்னணியாக இருந்தமை பற்றி 1944ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கூறிய திரு.ளு.று.சு.னு. பண்டாரநாயக்கா தமிழ் மொழி பற்றி மிகப் பெரும் பாராட்டாக அந்த உரையில் பேசியுள்ளார்.
மேலும் தமிழும், சிங்களமும் சம அந்தஸ்துடன் உத்தியோக மொழி ஆவதுதான் என்று கூறியதுடன் தமிழ் உத்தியோக மொழியாக்கப்பட வேண்டும் என்பதற்கு தமிழ்த் தலைவர்களைவிடவும் மிகத் திறமையாக வாதம் புரிந்துள்ளார். 1944 மே 25ஆம் தேதி அரசாங்க பதிவேடு (Hansard பக்கம் 807-812).
;1955ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ் மொழியும் உத்தியோக மொழியாக வேண்டும் என்பதற்கு எதிராக பண்டாரநாயக்கா நாடாளுமன்றத்தில் பேசிய போது அவருக்கு பதிலளிக்கும் முகமாக டாக்டர் என்.எம்.பெரேரா பின்வருமாறு பேசியமை இங்கு எடுத்துக் காட்ட தக்கது.
…. if you [S.W.R.D. Bandaranaike] mistreat them (The Tamils) if you illtreat them, if you misuse them, if you  oppress and harass them, in that process you cause to emerge in Ceylon, from that particular racial stock with its own particular language and tradition a new nationality to which will have to concede more claims that it puts forward now. It is always wiser statemenship to give generously early instead of being niggardly too late”  (Hansard, Oct.19, 1955)
மேலும் 1944ஆம் ஆண்டு தமிழும் உத்தியோக மொழியாக்கப்படக் கூடாது என்று எதிர்த்து வாக்களித்த 8 பேரில் பின்னாளில் ஐதேக தலைவராகவும், பிரதமராகவும் இருந்து டட்லி சேனநாயகாவும் ஒருவர் என்பது இங்கு வேதனையுடன் குறிப்பிடத்தக்கது.
அதில் அவர் பேசிய இனவாத கருத்துக்கள் இரத்தத்தை உறைய வைக்கும் தன்மை வாய்ந்தவை.
இறுதியாக நான் ஒன்றைக் கூறலாம். முதலில் மகாவம்ச சிறையில் இருந்து வெளியே வந்தாலே தவிர நவீன ஜனநாயகத்தைப் பற்றியும், தமிழருக்கான நீதியைப் பற்றியும் சிந்திக்க முடியாது.
கி.மு.ஐந்தாம் நூற்றாண்டில் முதல் முறையாக இலங்கைக்கு மனிதர் வந்து குடியேறியதாகவும், அப்படி வந்த விஜயனின் வரவோடுதான் வரலாறு ஆரம்பமாவதாகவும் சிறிதும் உண்மையற்ற,
முற்றிலும் உண்மைக்கு புறம்பான கற்பனை நிறைந்த நூலை நம்பி தமிழரை இந்தத் தீவின் அந்நியர்களாக கருதுகிறீர்கள். உண்மை அப்படியில்லை.
இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித எலும்புக்கூடு இதனை பொய்யாக்குகிறது. Balangoda Man  என்ற அந்த எலும்புக்கூடு விஜயன் வருகைக்கு முற்பட்ட மனித வாழ்வை நிருபிக்கிறது.

இற்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன் இலங்கை கடலால் பிரிக்கப்படாது தென் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது என்றும் தென் இந்தியாவில் அப்போது வாழ்ந்து வந்த மக்களின் தொடர்ச்சியே இலங்கை என்றும் 7000 ஆண்டுக்கு முன்னான் கடைசி பனியுகத்தின் போது,
பனி உருகியதுதால் கடல்நீர் மட்டம் 120 மீட்டர் உயர்ந்ததால் இலங்கை இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்ட ஒரு தீவானது. இந்த பிரிப்பின் போது தென் இந்தியாவில் வாழ்ந்த மக்களும் இலங்கையில் வாழ்ந்த மக்களும் கூடவே கடலால் பிரிக்கப்பட்டார்கள் என்று சிங்கள தொல்லியியல் நிபுணரான ளுசையn னுநசயnலையபயடய கூறியுள்ளார்.
தமிழரும் சிங்களரும் வந்தேறு குடிகள் அல்ல. ஒரு அடிப்படையான பெருங்கற் பண்பாட்டில் இருந்து கிளைவிட்டு வரலாற்று வளர்ச்சிப் போக்கில் உருவான இரு தேசிய இனங்கள்.
இருவருக்கும் அடிப்படை பண்பாடு பொதுவானது. ஆனால் இந்த உண்மைக்கு மாறாக தமிழரை வந்தேறு குடிகள் என்றும் படையெடுப்பாளர்கள் என்றும் பட்டம் சூடி இன அழிப்பு செய்கிறீர்கள்.
பிற்காலத்தில் இந்தியாவில் இருந்து காலத்திற்கு காலம் படையெடுப்புகள் வந்தது உண்மைதான். அது இலங்கைக்கு மட்டும் உரிய தனிவிசேட இயல்பல்ல மன்னர்களள் படையெடுப்பது இயல்பு.
சிங்கள மன்னர்கள் சிங்கள இராஜ்ஜியங்களுக்கு எதிராக படையெடுத்து இருக்கிறார்கள். அதேவேளை சிங்கள சகோதர்களே ஒருவருக்கு எதிராக ஒருவர் படையெடுத்து இருக்கிறார்கள். இது பண்டைய வரலாற்றில் ஓர் இயல்பு.
இந்திய ஆதிக்கத்தின் மீது உள்ள பயந்தின் காரணமாக தமிழரை இந்தியாவுடன் இணைத்து, தமிழரை இந்திய ஆதிக்கத்திற்கான கருவிகளாக கருதி இந்தியாவிற்கு எதிரான உங்களது வரலாற்றுப் பகைமையைக் கொண்ட யுத்தத்தின் மீது புரிகிறீர்கள்.
ஐக்கிய இலங்கையை உருவாக்க எங்கள் தலைவர்கள் பாடுபட்டனர். இலங்கைக்கு விடுதலை கோரி முதலாவது தேசிய இயக்கத்தை ஆரம்பித்ததே சேர்.பொன் அருணாசலம் தான். வேசாக் தினத்தை விடுமுறை தினமாக்க பாடுபட்டவர் ஒரு தமிழரான சேர்.பொன் இராமநாதன் தான்.
ஆனாலும் நீங்கள் எங்களை அழிப்பதில் அக்கறையாக இருப்பதினால் உங்களுடன் இணைந்து வாழ முடியாத நிர்ப்பந்தத்திற்கு நாங்கள் உள்ளானோம். அது உங்களால் தான் ஏற்படுத்தப்பட்டது. அதற்கு நீங்கள் தான் பொறுப்பு.
தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத அரசியலை முன்னெடுப்பதில் காட்டும் அரசியல் திடசித்தத்தை , தமிழ் மக்களை அழிப்பதில் காட்டும் அரசியல் திடசித்தத்தை தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வுகாண்பதில் காட்டுவதில்லை.
இனிமேலாவது தீர்வுகாண வேண்டும் என்ற Political Will-ஐ நீங்கள் வெளிக்காட்டுவீர்களா? முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் எழுவதற்கான நீதிக்கான Political Will ஐ நீங்கள் வெளிக்காட்டுவீர்களா?
1982ஆம் ஆண்டு ஜனாதிபதி செயலகத்தில் சில மூத்த அமைச்சர்களுடன் பேராசிரியர் ஏ.ஜே.வில்சன் உரையாடியுள்ளார்.
The Breakup of Srilanka என்ற தனது நூலில் Before the Civil War என்ற அத்தியாயத்தில் இரண்டு மூத்த சிங்கள அமைச்சர்கள் உயர்நீதிமன்றம் பற்றி கூறிய கருத்தை பின்வருமாறு கூறுகிறார்.
உயர்நீதிமன்ற நீதியரசர்களிடம் இருந்து எமக்கு வேண்டியவாறான தீர்ப்பை எம்மால் எப்போதும் பெறமுடியும். வண்டி, பதவி உயர்வு, சொகுசு பங்களா போன்றவற்றை உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு கொடுத்தால் நாம் எதிர்ப்பாக்கும் தீர்ப்பு கையில் தயாராக இருக்கும் என்று எழுதியுள்ளார்.
இத்தகைய நீதித்துறையிடம் இருந்து நாம் ஒருபோதும் நீதியை எதிர்ப்பார்க்க முடியாது. தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள இனவாத Mind Set-I கொண்டுள்ள நீதிபதிகள் எப்பொழுதும் தமிழருக்கு எதிராகவே நீதி வழங்குவார்கள்.
கண் துடைப்புக்கு ஓர் இரு தமிழ் நீதிபதிகள் அமர்வுகளில் அமர்ந்திருந்தாலும் அவர்களும் சிங்கள இனவாத தன்மை கொண்ட நீதி நிர்வாகத்துறைக்கு கட்டுப்பட்டவர்களே ஆவர்.
ஆதலால் சர்வதேச விசாரணை மூலம் நம்பகமாக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் அவா. இதற்கு நீதி மனம் கொண்ட சிங்கள கனவான்களும், அமெரிக்க அரசும், இந்திய அரசும் ஆவன செய்ய வேண்டும்.
நீதியின்றி சமாதானம் இருக்க முடியாது. இலங்கையில் அமைதியின்றி இப்பிராந்தியத்தில் அமைதி நிலவ முடியாது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila