இராணுவத் தளபதி திருடர்களை பாதுகாக்கின்றாரா என பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் முப்படையினருக்கு உணவு வழங்கும் ஒப்பந்தம் தொடர்பில் வெளிப்படுத்திய உண்மைகளை பற்றி விசாரணை செய்யாது, அந்த தகவல்கள் எவ்வாறு கிடைக்கப் பெற்றது என்பது குறித்து தம்மிடம் விசாரணை நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் பிரதிநிதி, ஊடகவியலாளர் என்ற வகையிலும் தமக்கு தகவல் கிடைத்த, தகவல் மூலத்தை வெளிப்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
தேவை என்றால் தமக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர முடியும் எனவும், இந்த இடத்தில் வைத்து தம்மை ஆணியில் அறைந்தாலும் தகவல் மூலத்தை அம்பலப்படுத்தப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த தேர்தல் காலத்தில், முப்படையினருக்கு உணவு விநியோகத்தில் தொடர்பிலான மோசடிகளை அம்பலப்படுத்தியதாகவும் அது குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் மூலத்தை யார் வழங்கினார்கள் என்பதனை விடவும், இந்த மோசடியுடன் தொடர்புடைய இராணுவ மேஜர் பற்றி விசாரணை நடத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு செய்யாத காரணத்தினால் இராணுவத் தளபதி குற்றவாளிகளை பாதுகாக்கின்றாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குறித்த இராணுவ மேஜர், இராணுவத் தளபதியினால் கூட நிர்மானிக்க முடியாத வீடு ஒன்றை நிர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்
இந்த விடயம் குறித்து பாராளுமன்றில் கேள்வி எழுப்பப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து கடற்படை மற்றம் விமானப்படைத் தளபதி பதற்றமடையாத நிலையில், இராணுவத்தளபதி மட்டுமெ பதற்றமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.