
போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகள் தேவையில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அதிகாரபூ ர்வமாக அறிவித்தபோது எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சம்பந்தன் பதில் ஏதுவும் கூறாமல் மௌனமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச விசாரணை தேவையில்லை என்றும் உள்ளக விசாரணை பொறிமுறையின் கீழ் போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
அப்போது சபையில் எதிர்க்கட்சித் தலைவா் ஆசனத்தில் அமர்ந்திருந்த சம்பந்தன் அமைதியான முறையில் ரணில் விக்கிரமசிங்கவின் உரையை செவிமடுத்தார். ஜெனீவா மனித உரிமை பேரவையின் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் எதிர்ப்பையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரபூர்வமாக வெளியிட்டார். கலப்புமுறை நீதிமன்றத்தை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் ஏற்காது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடித்துக் கூறினார்.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பை பிரதமர் ரணில் வெளியிட்டு உரையாற்றி நிறைவடைந்ததும் சம்பந்தன் அதற்கு பதில் ஏதுவும் கூறவில்லை.
பொதுவாக சர்வதேச நிலைப்பாடுகள் தொடர்பாக அரசாங்கம் அதிகாரபூர்வமாக தமது நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினால் அதற்கு ஆதரவாகவோ அல்லது எதிராக எதிர்க்கட்சித் தலைவர் பதிலளிக்க வேண்டும்.
ஆனால் சம்பந்தன் அவ்வாறு எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை- அவர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பதில் வழங்காது விட்டாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையிலாவது பதிலளித்திருக்க வேண்டும். ஆனால் ஏன் மௌனமாக இருந்தார் என நாடாளுமன்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் சர்வதேச விசாரணைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் இதுவரை இரட்டை நிலைப்பாட்டுடன் இருக்கின்றது
இதனால் எவ்வாறு பதிலளிப்பது என்ற சங்கடமான நிலை சம்பந்தனுக்கு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறிய நாடாளுமன்ற செய்தியாளர்கள் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஏனைய சிங்கள கட்சிகளைப் போன்று சர்வதேச விசாரணைக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு வெளியிட்டிருந்தால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் தமிழ் மக்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்ற சிக்கலான நிலை சம்பந்தனுக்கு ஏற்பட்டிருக்கும் எனவும் குறிப்பிட்டனர்.
சுர்வதேச விசாரணைதான் அவசியம் என சம்பந்தன் கூறியிருந்தால் அவர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக பதவி வகிக்க தகுதியற்றவர் என ஏனைய சிங்கள எதிர்க்கட்சிகள் கூறியிருக்கும்
ஆகவே அவ்வாறான குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்க சம்பந்தன் பதிலளிக்காமல் அமைதியாக இருந்திருக்கலாம் என்றும் கூறிய செய்தியாளர்கள் எவ்வாறாயினும் சம்பந்தன், சா்வதேச விசாரணை விவகாரத்தில் சிங்கள கட்சிகளுக்கு ஒரு முகத்தையும் தமிழ் மக்களுக்கு இன்னுமொரு முகத்தையும் காண்பிப்பதாக குறிப்பிட்டனர்.
இதேவேளை நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜாவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உரைக்கு பதலளிக்கவில்லை- மாறாக வேலை வாய்ப்பு விடயங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது தொடர்பாகவே உரையாற்றியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.