வேலூரில் அனுமதி மறுப்பு - ஏழு பேர் விடுதலைக்கான பேரணி இடமாற்றம்!

perarivalan-murugan-santhan-nalini1a

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்காக நாளை (11-ம் தேதி) வேலூரில் இருந்து நடைபெறுவதாக இருந்த பேரணி சென்னையில் நடைபெறும் என அற்புதம்மாள் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்  வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்ற நிலையில் அவர்களை விடுதலை செய்யக் கோரி, நாளை (11-ம் தேதி) வேலூர் சிறை முன்பிருந்து தலைமைச் செயலகம் வரை வாகனத்தில் பேரணியாக சென்று முதல்வரை சந்தித்து மனு கொடுக்கப்படும் என அற்புதம்மாள் அறிவித்திருந்தார்.
இந்த பேரணிக்கு தமிழக அரசும் அனுமதி கொடுத்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த பேரணிக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் திரையுலக முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். பேரணிக்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில், இன்று (10-ம் தேதி) காலை ‘எழுவர் விடுதலைக்கான கூட்டமைப்பினர்’ பேரணிக்கு அனுமதி வேண்டி வேலூர் எஸ்.பி பகலவனை சந்தித்து மனு அளித்தனர். அதற்கு எஸ்.பி பகலவன், ”எவ்வளவு நபர்கள் கலந்துகொள்வார்கள், எத்தனை வாகனங்கள் வரும் போன்ற தகவல்கள் இல்லாததால் அனுமதி வழங்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து, எழுவர் விடுதலைக்கான கூட்டமைப்பினர் சென்னை கமிஷனரை சந்தித்துப் பேசினர். இதன்பின்னர் அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனக்கூறி வேலூரில் இருந்து பேரணி நடத்த அனுமதி தர மறுத்துவிட்டனர்.
எனவே, நாளை 11-ம் தேதி சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து கோட்டை நோக்கி  நண்பகல் 12 மணிக்கு பேரணி தொடங்குகிறது.
கோட்டையில்   7 பேரின் விடுதலைக்காக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து மனு அளிக்கப்படும். எனவே,  இந்த பேரணியில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் எழும்பூருக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila