ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட சில நாடுகளினால் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச தீர்மானத்தில் போர்க் குற்றச் செயல் விசாரணைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்படுவதற்கு சாத்தியமில்லை என அவர் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் பொறுப்பாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்படுவதற்கு சாத்தியமில்லை என அவர் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் பொறுப்பாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
மாறாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், புனரமைத்தல் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் ஆகியனவற்றுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.குறிப்பாக யுத்தக் குற்றச் செயல்களை விடவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் தொடர்பில் கூடுதல் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் யுத்தத்தின் போது யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒப்புக்கொண்டிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2009ம்ஆண்டு மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுடன் இணைந்து இவ்வாறு கூட்டறிக்கை வெளியிட்ட போது குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றுக்கு தீர்வு வழங்கப்படும் எனவும் மஹிந்த ராபஜக்ஸவே ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அப்போதைய இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி தயான் ஜயதிலக்க 11அம்ச வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் உறுதிமொழி வழங்கியிருந்ததாகவும் இவை எவற்றையும் அப்போதைய அரசாங்கம் கருத்திற்கொள்ளாமையே சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினை நீண்டிருந்தால் இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் தடைகள் விதிக்கப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.மஹாநாயக்கத் தேரர்கள் மற்றும் ஏனைய மதத் தலைவர்களின் தலைமையிலான குழுவொன்றின் ஊடாக கருணைப் பேரவை ஒன்றை நிறுவி அதன் ஊடாக நல்லிணக்க முனைப்புக்கள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றக் கட்டமைப்பிற்கு வெளியே மனிதாபிமான ரீதியான பல பிரச்சினைகளுக்கு இந்தப் பேரவையின் ஊடாக தீர்வு காண முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தென் ஆபிரிக்காவில் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவினை நிறுவுமாறு பேராயர் டெஸ்மன் டுடுவே கோரியிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு பொறிமுறையை வலியுறுத்தி நிறுவப்பட உள்ள உண்மை ஆணைக்குழுவின் தலைமைப் பொறுப்பு ஒர் சிவிலியனிடம் வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசேட சட்டக்காரியாலத்திற்கு வெளிநாட்டு சட்ட நிபுணர்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்வதற்கு உச்ச நீதிமன்றின் பூரண அனுமதி பெற்றுக்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.வெளிநாடுகளில் கடமையாற்றி வரும் இலங்கை சட்ட நிபுணர்களின் ஒத்துழைப்பெற்றுக் கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சிங்கள அரசியல் சமூகத்தை விடவும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் அரசியல் சமூகத்திற்கு பாரிய அழிவினை ஏற்படுத்தினர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் சர்வதேச உறவுகள் நல்லாட்சி நடவடிக்கைகளினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோரை மின்சார நாற்காலி தண்டனையிலிருந்து தாம் மீட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.