ஐ.நா.அறிக்கையின் பரிந்துரைகளை பின்பற்றியதாக அமெரிக்காவின் பிரேரணை? முதல் வரைவு வெளியானது

இலங்கைக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா எதிர்வரும் 24ம் திகதி கொண்டுவரவுள்ள பிரேரணையானது ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையின் பரிந்துரைகளை பின்பற்றியதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்காவின் இலங்கைக்கு ஆதரவான பிரேரணையானது உள்ளக விசாரணை பொறிமுறையை வலியுறுத்தினாலும் அது சர்வதேச ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவேண்டும் என பரிந்துரை செய்யப்படும் என்றும் ஜெனிவா தகவல்கள் தெரிவித்தன.
இலங்கைக்கு ஆதரவான பிரேரணையை எதிர்வரும் 24ம் திகதி கொண்டுவருவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றத்தை வெளிக்காட்டும் நோக்கில் உள்ளக விசாரணை பொறிமுறையை முன்னெடுப்பதற்கு இலங்கைக்கு போதிய கால அவகாசம் ஒன்றை வழங்கவேண்டும் என்ற நோக்கில் இந்த பிரேரணையை அமெரிக்கா கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையானது எவ்வாறான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும் என இதுவரை அறிவிக்கப்படவில்லை.
எனினும் அமெரிக்காவின் பிரேரணையானது ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் வெளியிட்ட இலங்கை குறித்த அறிக்கையின் பரிந்துரைகளை பின்பற்றியதாக அமையும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இது இவ்வாறு இருக்க கடந்த புதன்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தினால் இலங்கை தொடர்பில் வெளியிட்ட விசாரணை அறிக்கையானது போர்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள், மற்றும் விசாரணையாளர்களை உள்ளடக்கிய கலப்பு விசேட நீதிமன்றம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டுமென பரிந்துரை செய்திருந்தது.
இலங்கையானது பொறுப்புக்கூறலை அடையவேண்டும். அது உள்நாட்டு பொறிமுறை விசாரணையை விட அப்பால் சென்றதாக இருக்கவேண்டும். குறிப்பாக இவ்வாறான விடயங்களில் வெற்றிகண்ட அனுபவமிக்க நாடுகளிடம் இலங்கை பாடங்களை கற்று கலப்பு விசேட நீதிமன்றத்தை அமைக்கவேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் அதற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பதிலளித்திருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் பரிந்துரைத்துள்ள விசேட கலப்பு நீதிமன்றத்தை அமைப்பதா இல்லையா என்பது குறித்த இறுதி தீர்மானம் அடுத்த வருடம் ஜனவரி மாத இறுதியில் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் ஜனவரி மாதம் தொடக்கம் 18 மாதங்களில் உள்ளக விசாரணை பொறிமுறை முன்னெடுக்கப்பட்டு முடிவு செய்யப்படும் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருந்தார்.
இதேவேளை இலங்கை குறித்து எதிர்வரும் 30ம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் விவாதம் நடத்தப்படவுள்ளது.
இந்த விவாதத்தில் அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
இறுதியில் இலங்கையின் பிரதிநிதி பதிலளித்து உரையாற்றவுள்ளார்.
அமெரிக்க தீர்மான வரைவு வெளியானது – கலப்பு விசாரணைக்கு அழைப்பு விடுக்கிறது
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தின் முதல் வரைவு ஆவணம் வெளியாகியுள்ளது.
இதில, போரின் இறுதி ஆண்டுகளில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக, அனைத்துலக நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டவாளர்களை உள்ளடக்கிய நீதிப் பொறிமுறையை உருவாக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது.
போரின் போது இழைக்கப்பட்டதாக தனது பணியகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மோசமான குற்றங்களை விசாரிக்கும் ஆற்றலை உள்நாட்டு குற்றவியல் நீதிப் பொறிமுறைகள் கொண்டிருக்கவில்லை என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டே அமெரிக்காவும், ஏனைய நாடுகளும் தீர்மான வரைவில் அனைத்துலக நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டவாளர்களை உள்ளடக்கிய நீதிப்பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று இந்த தீர்மான வரைவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தீர்மான முன்வரைவு வரும் திங்கட்கிழமை ஜெனிவாவில் நடக்கவுள்ள இலங்கை மீதான தீர்மானம் குறித்த முதலாவத முறைசாரா கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படவுள்ளது.
ஆறு பக்கங்களில் 26 பந்திகளைக் கொண்ட இந்த முன்வரைவுத் தீர்மானத்தின் பிரதி கடந்த வியாழக்கிழமை இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மான வரைவு அமெரிக்கா தலைமையில் பிரித்தானியா, மசிடோனியா, மொன்ரெனிக்ரோ ஆகிய நாடுகளின் இணை அனுசரணையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவில்இ ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கையின் பரிந்துரைகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து அடுத்த ஆண்டு- 2016 செப்ரெம்பரில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது அமர்வில் வாய்மூல அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
தற்போதைய தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி முன்னேற்றங்கள் தொடர்பான விரிவான விசாரணைகளை 2017 மார்ச் மாதம் நடைபெறவுள்ள  பேரவையின் 34வது அமர்வில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இந்த தீர்மானம் கோருகிறது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila