இம்மாத இறுதிக்குள் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் இல்லையேல் தொடர் போராட்டம்

இம்மாத இறுதிக்குள் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் இல்லையேல் தொடர் போராட்டம்:-

 
செப்டம்பர் மாத இறுதிக்குள் சிறைச்சாகைளில் விசாரணைகளின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில், அந்தக் கைதிகளையும் உள்ளடக்கி சாத்வீக ரீதியிலான தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக  அரசியல் கைதிகளின் விடுதலைக்கான மக்கள் அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றில் தெரிலித்துள்ளது.
 
அந்தக் கடிதத்தின் முழு வடிவம் வருமாறு:
 
அரசியல் கைதிகளின் விடுதலைக்கான மக்கள் அமைப்பு,
03ம் குறுக்குத்தெரு, 
யாழ்ப்பாணம்.
 
மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்,
இலங்கை சனநாயக சோசலிச குடியரசு,
இலங்கை. 
 
நீண்டகாலமாக சிறைகளில் துன்பப்படும் எமது உறவுகளை எம்முடன் வாழ விடுங்கள்.
 
இலங்கை சிறைகளில் அரசியல் கைதிகளாக பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எமது உறவுகளின் பெற்றோர் மற்றும் மனைவி, பிள்ளைகள் ஆகிய நாம், எமது உறவுகளின் உடனடி விடுதலை வேண்டி தங்களுக்கு இந்த பகிரங்க மடலை எழுத வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளோம்.
 
மிக நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எமது உறவுகளின் விடுதலை தொடர்பாக இதுவரை எந்த முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எமது உறவுகள் மூன்று விதமாக நோக்கப்படுகின்றனர்.
 
01. உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு மிக நீண்ட காலமாக விளக்கமறியலில் உள்ளோர். (8 முதல் 15-20 வருடங்கள் வரை)
 
02. குற்றச்சாட்டுகளை பாரமெடுத்தோர் (தண்டனைக் கைதிகள்)
 
03. வழக்கு தாக்கல் செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர்.
 
மேற்கூறப்பட்டுள்ளவர்களுள் பெரும்பாலானோர் விசாரணை அதிகாரிகளால் சிங்கள மொழியில் எழுதப்பட்ட உண்மைக்கு மாறான குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்களில் அந்த அதிகாரிகளின் வற்புறுத்தலினாலும், விடுதலை செய்வதாக கூறியும் பெறப்பட்ட ஒப்பங்களை அடிப்படையாக வைத்தே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
இதன் அடிப்படையில் உயர்நீதிமன்றங்களில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் அனைத்தும் சிங்கள மொழியிலேயே இடம்பெறுவதுடன், ஒவ்வொரு வழக்கு தவணைகளும் 3 முதல் 6 மாதங்கள் வரை தவணையிடப்படுகின்றன. 
 
1 முதல் 2 மாதங்கள் வரை தவணையிடப்படும்போது  அங்கு நீதிபதி, அரச சட்டத்தரணி அல்லது சாட்சியாளர்கள் வருவதில்லை. ஆயினும் எமது உறவுகள் சட்ட தரணிகளுக்கு எதுவிதமான நீதிமன்ற நடவடிக்கைகளுமின்றி பணத்தை மட்டும் தொடர்ந்தும் வழங்க வேண்டிய துன்பியல் சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
 
இந்தநிலையில் பலருடைய வழக்கு விசாரணை நடவடிக்கைகள் பல வருடங்களாக திகதியிடப்பட்டு 10 முதல் 15-18 வருடங்களையும் அண்மித்து விட்டது. எனவே இனியும் நீதிமன்றங்கள் ஊடாக எமது உறவுகளின் விடுதலையை எதிர்பார்ப்பதென்பது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல்முறையாகும். 
 
அவ்வாறே நீதிமன்றங்களில் விசாரணைகளை இனியும் எமது உறவுகள் எதிர்கொள்ள வேண்டுமாகவிருந்தால், இன்னும் பல வருடங்கள் எமது உறவுகள் சிறைகளுக்குள்ளேயே தமது வாழும் காலத்தை கழிக்க வேண்டிய அவலநிலைக்கு உள்ளாவார்கள். எனவே எமது உறவுகளின் உடனடி விடுதலைக்கான ஆக்கபூர்வமான செயல்முறையொன்று மிக விரைவாக உருவாக்கப்பட வேண்டும்.
 
எமது உறவுகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கான தண்டனைக்காலத்தை விடவும், மேலதிகமாக விளக்கமறியலில் தண்டனைக்காலத்தை அவர்கள் கழித்துவிட்டார்கள். எனவே இனியும் விசாரணைகளை தொடர்வது அல்லது அவர்கள் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பொறுப்பேற்று தண்டனைகளை பெறுவது என்பது எதுவித நியாயமும் அற்றதாகவே உள்ளது. மீறி அப்படி செய்வது என்பது தொடர்ந்தும் நாம் பழிவாங்கப்படும் செயல்முறையாகவே இந்த நல்லாட்சியிலும் நாம் நோக்க வேண்டியுள்ளது.
 
காலத்துக்கு காலம் ஆட்சிக்கு வருகின்ற ஆட்சியாளர்கள் ஆட்சி பீடம் ஏற முன்பு ஒரு கதையையும், அதன் பின்பு வேறுவிதமான கருத்துகளையும் எமது உறவுகளின் விடுதலை தொடர்பாக வெளியிட்டு தொடர்ந்தும் நாம் ஏமாற்றப்பட்டே வருகின்றோம். ஒவ்வொரு காலத்திலும் விசேட நீதிமன்றங்களை அமைப்பது, சிறு குழுக்களை அமைப்பது, ஆணைக்குழுக்களை நியமிப்பது, விசேட பிரதிநிதிகளை சிபாரிசு செய்வது போன்ற பல்வேறு கருத்துகளை மட்டும் வெளியிட்டு தொடர்ந்தும் எமது உறவுகளின் விடுதலைக்கான காலங்கள் இழுத்தடிக்கப்பட்டே வருகின்றன. 
 
கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தில் இனியும் இழப்பதற்கு ஏதுமற்று முழுமையாக அனைத்தையுமே இழந்து மிகுந்த வேதனைகளுடன் வாழுகின்ற நாம் தொடர்ந்தும் பொய் வாக்குறுதிகள் மூலம் ஏமாற்றப்பட்டே வருகின்றோம். இவ்விடயத்தில் எம்மை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் அரசியல் தலைவர்களும் எமது நிலையை உணர்ந்து உளத்தூய்மையுடன் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு எமது உறவுகளின் விடுதலைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றே நாம் கோருகின்றோம்.
 
பல வருடங்களாக நாங்கள் சமுகத்தில் பலவிதமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைகளுக்கு உள்ளாகியுள்ளதுடன், வழக்கு விசாரணைகளுக்கும் பெருந்தொகையான பணத்தை தொடர்ந்தும் எம்மால் பெற்றுக்கொடுக்க முடியாத அவலத்துக்குள்ளும் நாம் தள்ளப்பட்டுள்ளோம். 
 
உதாரணமாக வவுனியா மற்றும் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஐந்து வருடங்களுக்கு மேலாக வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டுவரும் குடும்ப பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்றுள்ள அரசியல் கைதி ஒருவரின் மனைவி, மனநிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மனைவியின் மருத்துவ செலவுக்கும், தனது வழக்கு விசாரணை செலவுகளுக்குமாக தனது சிறுநீரகம் ஒன்றை விற்பதற்கு வவுனியா உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருக்கின்றார். இது வேதனை மிகுந்த எமது வாழ்வில் இடம்பெறுகின்ற பல சம்பவங்களில் ஒரு உதாரணம் மட்டுமே!
 
இதனூடாக எமக்கான சலுகைகளையோ அல்லது உதவித்திட்டங்களையோ நாம் தங்களிடம் கோரவில்லை. நீதிக்கு புறம்பான முறையில் பல வருடங்களாக சிறையில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் எமது உறவுகளை விடுதலை செய்து தங்களின் உண்மையான நல்லாட்சியை வெளிப்படுத்துமாறே வேண்டுகின்றோம். இம்மாத இறுதிக்குள் எமது உறவுகளின் விடுதலைக்கான ஆக்கபூர்வமான செயல்வடிவங்களை நடைமுறைப்படுத்துவீர்கள் என்று நம்புகின்றோம்.   
 
மாறாக பொய் வாக்குறுதிகள் மூலம் நாம் ஏமாற்றப்பட்டால் சிறைகளில் இருக்கும் எமது உறவுகளையும் ஒன்றிணைத்து சாத்வீக ரீதியிலான தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். எனவே தங்களின் மேலான கவனத்துக்கு எமது நியாயமான பிரச்சினைகளை கொண்டு வருவதன் ஊடாக, தங்களின் காத்திரமான நடவடிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். 
 
தாமதமாகும் நீதியும் மறுக்கப்பட்ட நீதிக்கே ஒப்பானதாகும்!
 
இப்படிக்கு,
அரசியல் கைதிகளின் விடுதலைக்கான மக்கள் அமைப்பு-
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila