பிரேரணை குறித்து தமிழரசுக் கட்சியின் தலைமையிடம் விளக்கம்! சி.வி. விக்கி


கனடாவில் சேர்க்கப்படும் நிதிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி கணக்கு காண்பிப்பது இல்லை என வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தன்னிடம் கூறியதாக சுகாதார மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்வைத்த குற்றச்சாட்டு ஒன்றுக்கு பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு கூறினார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் விக்னேஸ்வரனுக்கு எதிராக பிரேரணை ஒன்றை சமர்பித்த சுமந்திரன், கனடாவில் நிதி சேகரிக்க வருமாறு கேட்டபோது அதற்குக்கூட விக்னேஸ்வரன் வரவில்லை என்றும் ஆகவே அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் சத்தியலிங்கம், கனடாவில் நிதி சேகரிப்பது தொடர்பாக விக்னேஸ்வரன் தன்னிடம் கூறியதாகவும் அங்கு நிதி சேகரித்து விட்டு கணக்கை யாருக்கும் காண்பிப்பதில்லை என்றும் அதனால் அந்த நிதி சேகரிப்பு நடவடிக்கைக்கு தன்னால் வரமுடியாது என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை சுமந்திரனின் பிரேரணைக்கு தமிழரசுக் கட்சியின் உப தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம் கடும் எதிர்ப்பு வெளியிட்டார் என்றும் சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுவரும் நேரத்தில் விக்னேஸ்வரனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது நியாயமற்ற செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உட்பட பலர் விக்னேஸ்வரனுக்கு எதிரான பிரேரணையை ஆதரிக்கவில்லை என்றும் தமிழரசுக் கட்சி தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கருத்துக்கள் எதனையும் கூறாமல் அமைதியாக இருந்தார் என்றும் பிரேரணையை கைவிடுமாறு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய சம்பந்தன் கூறினார் என்றும் தமிழரசுக் கட்சித் தகவல்கள் குறிப்பிட்டன.

அதேவேளை விக்னேஸ்வரனுக்கு எதிராக சுமந்திரன் சமர்ப்பித்த பிரேரணை தொடர்பாக கூட்டம் முடிவடையும் வரை அமைதிகாத்த சம்பந்தன், இறுதியில் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விக்னேஸ்வரனுடன் பேசுவதாக சுமந்திரனை பார்த்து கூறினார் என்றும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.

இதேவேளை தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் தலைவரிடம் விளக்கம் கோரவுள்ளதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறினார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila