
அரியாலை முள்ளிப்பகுதியில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக முன்னர் இருந்த பகுதியில் இருந்து மாணவி ஒருவர் உட்பட பெண்கள் இருவருடையது என நம்பப்படும் மண்டையோடுகள், எலும்புக்கூடுகள், மனித எச்சங்கள் என்பன சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள நிலையினில் முழுமையான ஆய்வுகள் செய்யப்படவேண்டுமென காணாமல் போனோரது குடும்பங்கள் கோரிக்கை விடுத்தள்ளன.
பெண்களிள் உள்ளாடைகள், பெண்களது என நம்பப்படும் நீண்ட தலைமுடிகள் மற்றும் ஆடைகள், பெண்களின் கைப்பை, பெண்கள் அணியும் பாதணிகள் என்பனவும் மீட்கப்பட்ட மனித எச்சங்களுடன் காணப்பட்டிருந்தன. இவற்றுடன் காணப்பட்ட சிறிய பேர்ஸ் ஒன்றுக்குள் பேனா, கலர்ப் பென்சில்கள், சிறிய அளவுகோல், சீப்பு என்பனவும் காணப்பட்டன. மீட்கப்பட்ட பொருட்களை வைத்து நோக்கும்போது இவர்களில் ஒருவர் மாணவியாக இருக்கலாம் எனவும் மற்றையவர் நடுத்தர வயதுடைய பெண்ணாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இவர்கள் பல வருடங்களுக்கு முன்னர் இப்பகுதியில் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதேவேளை, இப்பகுதியில் மேலும் பலர் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ளும்போதே அவை குறித்து தெரியவரலாம். 1996 முதல் 1998 வரையான காலப்பகுதியினில் யாழினில் காணாமல் போனபலரும் கொல்லப்பட்டு செம்மணி மற்றும் அரியாலைப் பகுதிகளில் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது. இந்நிலையில் அரியாலைப் பகுதியில் மேலும் சில மனித எச்சங்கள் மீட்கப்படலாமென்பதால் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.