உள்ளூராட்சி அமைப்புக்கு உட்பட்ட பிரதேச சபைகள், நகரசபைகள், பட்டின சபைகள் மற்றும் மாநகர சபைகளில் இப்போது மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சி அமைப்பு இல்லை.
காலமுதிர்வு காரணமாக சகல உள்ளூராட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதித்துவம் கலைபட்டுப் போக, நிர்வாக ரீதியில் செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்களின் கீழ் உள்ளூராட்சி நிர்வாகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
எனவே இப்போது பிரதேச, நகர, பட்டின, மாநகர சபைகளின் நிர்வாகம் செயலாளர்களின் தலைமையிலும் மாநகர சபை ஆணையாளர்களின் தலைமையின் கீழும் இயங்குகின்றன.
வட பகுதியைப் பொறுத்தவரை உள்ளூராட்சி சபைகளுக்கு நடந்த தேர்தலின் போது மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் எதிர்பார்த்ததில் ஐந்து சதவீதத்தையேனும் செய்து முடிக்கவில்லை.
தவிசாளர்களின் தன்னிச்சையான போக்கு (எல்லோரையும் இங்கு குறிப்பிடவில்லை) உள்ளூராட்சி சபைகளின் இயங்குநிலையை மந்தமாக் கின. இதனால் மக்கள் சார்ந்த சேவை என்ற பேச்சுக்கே இடமில்லாது போயிற்று. மக்களின் முறைப்பாடுகளை ஆராய்வதற்குக் கூட சபையால் முடியவில்லை என்று கூறிக்கொள்ளலாம்.
மாறாக, ஊழல் மோசடிகள் தாண்டவமாடின. அடிக்கக் கூடியதை அடித்துக் கொண்டு போய் விடுவோம் என்ற நினைப்பே மேலோங்கி நின்றதால், உள் ளூராட்சி சபை அரசுகள் அமைந்தால் மக்களுக்கு அதிகமான சேவை கிடைக்கும் என்ற நம்பிக்கை வீண்போய் விட்டன.
தெருவில் கிடக்கும் செத்த நாயைக் கூட அடக்கம் செய்வதற்கு முடியாத அளவிலேயே உள்ளூராட்சி அரசுகள் இருந்தன என்ற உண்மையை இவ்விடத்தில் கூறித்தானாக வேண்டும்.
இதுதவிர, சபைகளைச் சார்ந்த பணியாளர்கள் சிலர் தம்பாட்டில் செயற்பட்டதையும் காணமுடிந்தது. இப்போது உள்ளூராட்சி அரசுகள் கலைபட்டுப் போனதால் ஓரளவுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் என்ற மோசடிகள் கணிசமாக நின்று விட்டன. இனி தேர்தல் நடந்தால்தான் அந்த நோய் பரவும் என்று கூறிக்கொள்ளலாம்.
இந்நிலையில் உள்ளூராட்சி அமைப்புகளின் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டுள்ளவர்கள் தங்களிடம் இருக்கக்கூடிய அதிகாரத்தைப் பயன்படுத்தி உள்ளூராட்சி அமைப்புகள் எத்தகையை பணிகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமோ அந்தப் பணிகள் அனைத்தையும் வழங்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக வட மாகாணத்தில் குப்பை கூழங்களை அகற்றுவது தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. வீதிகளில் குப்பை கூழங்களை கொட்டுவதால் பொதுமக்கள் அனுபவிக்கும் அசெளகரியங்கள் சொல்லிமாளா. எனவே குப்பைகளை இங்கே கொட்டாதீர்கள் என்று பெயர்ப் பலகை நாட்டுவது போல, குப்பைகளை இங்கே கொட்டுங்கள் என்றும் பெயர்ப் பலகை நாட்டி இடத்தை சுட்டிக் காட்டுவதன் மூலம் குப்பை கூழங்கள் மற்றும் கழிவுகள் வீதிகளில் போடப்படுவதை தடுக்க முடி யும் என்பதால் ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுங்கள்.
உள்ளூராட்சி சபைகளின் மரியாதைக்குரிய பணியாளர்களே! உங்கள் பணியை மக்களுக்காக வழங்குங்கள். உள்ளூராட்சி அரசுகள் தேவையில்லை என்று கூறும் அளவில் மக்கள் உங்களைப் போற்றுவர். நீங்கள் செய்கின்ற பணிகள் மக்கள் நோயற்றவர்களாக வாழ்வதற்கு பேருதவி புரியும்.