தமிழ் மக்கள் தனித்து வாழவே விரும்புவதாக வடக்கு மாகாண முதல மைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் வைத்துக் கூறியுள்ளார். அவரதுஅந்தக் கருத்து தமிழ் மக் களின் ஒட்டுமொத்த உணர்வைப் பிரதிபலிப்பதாகக் கொள்ள முடியும்.
ஏனென்றால் இந்த நாடு சுதந்திரமடைந்த நாளிலிருந்து தமிழ் மக்கள் அனுபவித்து வருகின்ற இன்னல்கள் மிகக் கொடுமையானவை. அன்னியர் இந்த நாட்டில் காலடி எடுத்து வைக்கும் வரை தமிழர்களுக்கென தனி அரசுகள் இருந்தன. தமிழர்கள் தம்மைத்தாமே ஆளுகின்ற வல்லமையையும் கொண்டிருந்தனர்.
எவருக்கும் கட்டுப்பட்டு அடிமைகளாக இருக்க வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இருக்கவில்லை. தமது மதத்தைப் போற்றி வழிபடுகின்ற சுதந்திரத்தையும் அவர்கள் பெற்றிருந்தனர். ஆனால் அந்நியரின் வருகை தமிழர்களைப் பல்வேறு வகையிலும் பாதித்து விட்டது. அது இன்றும் தொடர்கின்றது.
அந்நியரிடமிருந்து நாடு சுதந்திரம் அடைந்தது என்னவோ உண்மைதான். ஆனால் அதே சுதந்திர தினத்தன்று தமிழர்களுக்கு அடிமைச் சாசனமும் எழுதப்பட்டுவிட்டது. இலங்கையின் பழைய வரலாறுகள் தமிழர்கள் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் என்பதாகக் கூறுகின்றன. ஆனால் இன்று இதனை முற்று முழுதாக மூடி மறைத்து தமிழர்கள் வந்தேறு குடிகள் என்பதாகப் புதிதாக எழுதப்பட்ட பெளத்த நூல்களில் தெரிவிக்கப்படுகின்றது.
பெரும் பான்மையின மக்களும் இதையே உண்மையென நம்புவதோடு தமிழர்களை ஏளனமாகவும் நோக்குகின்றனர். வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பூமி என்பது பழைய வரலாறாக மாறிவிட்டது. திட்டமிட்ட குடியேற்றங்கள் காரணமாக கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் சிறுபான்மையினராக மாற்றப் பட்டுவிட்டார்கள்.
அந்த மாகாணத்தில் தமிழர்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலையிலும் தமிழர்கள் இல்லை. மாகாண அரசில் ஒட்டிக்கொண்டிருக்கும் நிலை தான் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்திலும் கிழக்கைப் போன்றதொரு நிலையை ஏற்படுத்துவதே அரசின் நோக்கமென்பதையும் புரிந்துகொள்ள முடிகின்றது.
இது நிறைவேறிவிட்டால் தமிழர் கள் தமது தாயக பூமியென எதையும் குறிப்பிட்டுப் பேச முடியாது.அதிலும் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் கேட்பதற்கு எவருமில்லை என்ற தோரணையில் காரியங்கள் இடம் பெற்று வருகின்றன. தமிழர்களும் பாதுகாப்பில்லாத ஏதிலிகளாக மாறி விட்டனர்.
அது மட்டுமல்லாது தமிழர் பகுதிகளில் இடம்பெறுகின்ற வன்முறைச் சம்பவங்கள், போதைப் பொருள் பாவனை, துஷ்பிரயோகங்கள் ஆகியனவும் அதிகரித்துச் செல்வதைக் காணமுடிகின்றது. இதன் காரணமாகத் தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவை காணாமற் போய் விடும் நிலையும் உருவாகிவிட்டது.
இறுதிப் போரின்போது தமிழ் மக்கள் எதிர்கொண்ட மனிதப் பேரவலத்தை வார்த்தைகளில் வடிக்க முடியாது. ஆனால் அந்த மக்கள் தமக்கு நேர்ந்த அநீதிகளுக்கு இன்னமும் நியாயம் கிடைக்காத நிலையில் ஏக்கத்துடன் உள்ளனர். சர்வதேச நாடுகள் கூட அவர்களைக் கைவிட்டு விட்டதாகவே கருத வேண்டியுள்ளது.
இதேவேளை முன்னரே எதிர்பார்க்கப்பட்டதைப்போன்று ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு எதுவுமின்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை அரசுக்கு ஒரு வகையில் சாதகமானதென்றே கூறமுடியும்.
இறுதிப் போரின்போது தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக போர் நிறைவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்த நிலையிலும் நியாயமான விசாரணைகள் எதுவும் இடம்பெறாததோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை.
அரசு பெயரளவுக்குச் சில ஆணைக் குழுக்களை நிறுவியபோதிலும் அவற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித பயனும் கிடைக்கவில்லை. மாறாக சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சியாகவே இந்த ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
விடுதலைப் புலிகளை அழித்த மாவீரன் தாமேயயன மார்தட்டிக் கொக்கரித்த மகிந்த ராஜபக்ச தாமொரு பெரும்பான்மையின மக்களின் தலைவர் என்பதைப் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளார். சிறுபான்மைத் தமிழ் மக்களை அவர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஆனால் பழிநின்று கொல்லும் என்பதற்கிணங்க ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளால் அவர் தோல்வியைத் தழுவ நேரிட்டது. தமிழர்களின் வாக்குகளே தம்மைத் தோற்கடித்ததாக மகிந்த பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறித் தமது வெஞ்சினத்தை வெளிக் காட்டியுள்ளார்.
இலங்கையில் தம்மால் வாழ முடியாது என்று கருதியதன் காரணமாகவே சுமார் 10 லட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வசித்துவருகின்றனர். இதனால் நாட்டில் தமிழர்களின் குடிப்பரம்பலில் பெரும் வீழ்ச்சி காணப்படுகின்றது. விரைவில் இரண் டாவது பெரிய இனம் என்ற கெளரவத்தையும் தமிழர்கள் இழந்து நிற்கப் போகின்றனர். இந்த நிலையில் தமக்குப் பாதுகாப்பானதொரு சூழலைத்தான் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் இன்று வரை அத்தகையதொரு சூழல் இந்த நாட்டில் உருவாக்கப்படவில்லை என்பதுதான் உண்மை நிலை. இன்றும் கூடத் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதிலேயே கருத்தாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் இது வரை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவில்லை. அவர்களது காணிகளைப் படையினர் ஆக்கிரமித்து நிற்கின்றனர். படை யினரை மீறி அரசினால் எதுவுமே செய்ய முடியாததொரு நிலையும் காணப்படுகின்றது. மேலும், தென்னிலங்கையிலுள்ள இனவாதிகளும் இனவாதக் கருத்துக்களைத் தாராளமாகவே பரப்பி வருகின்றனர்.
இறுதிப் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம் பெறக்கூடாது என்ற நிலைப்பாடே தென்னிலங்கையில் காணப்படுகின்றது. விமல் வீரவன்ச போன்ற இனவாதிகள் இந்தப் பிரச்சினையைப் பூதாகரமாக மாற்றி நாட்டில் மீண்டுமொரு அமைதியின்மையை ஏற்படுத்திவிடுவார்களென்ற அச் சமும் காணப்படுகின்றது.
ஏனென்றால் மகிந்த தரப்பினரும் வீரவன்சவின் செயல்களுக்கு ஊக்கமளிக்கும் நிலைப்பாட்டில் இருப்பதும் தெரிகின்றது. இந்த நிலையில் எதிர்காலத்திலும் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதற்கான சூழ்நிலை இந்த நாட்டில் உருவாகுமென எதிர்பார்க்க முடியாது. எதிர்காலச் சந்ததியினராவது அச்சமில்லாததொரு வாழ்க்கை வாழ வேண்டும். இதை உணர்ந்தவர் போன்று தான் வடமாகாண முதலமைச்சர் தமிழர்கள் தனித்து வாழ விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களுக்கு மேன்மேலும் இந்த நாட்டில் அநீதி இழைக்கப்படுமாயின் முதலமைச்சரின் கூற்று மட்டும்தான் ஒரு தீர்வாக அமைய முடியும்.