தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பதவிக்கு சிவாஜிலிங்கம் மற்றும் விக்னேஸ்வரன் போன்றவர்கள் வந்தால், என்ன நிலைமை ஏற்படும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன், புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு விசேடமாக எதையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசியலமைப்பு சபையின் இறுதி நாள் விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசுகையில்,
நாட்டை பிளவுபடுத்தி, தனி ஈழம் வழங்கக் கூடிய வடக்கு, கிழக்கை இணைக்கும் சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படாது. ஒரு போதும் அவ்வாறான அரசியல் அமைப்புக்கு ஆதரவு தரப் போவதில்லை.
அதிகாரங்கள் பகிரப்படவிருப்பது விடுதலைப் புலிகளுக்கோ, பயங்கரவாதிகளுக்கோ அல்ல. மற்றையவர் மீது சந்தேகம் இருக்கும் வரை இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது.
யுத்தத்தினால் நாம் கடந்த காலங்களில் மோசமாக பாதிக்கப்பட்டோம். இந்த இடைக்கால அறிக்கை தொடர்பில் பொய்யான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது உத்தேச அரசியலமைப்பு என பொய் பிரசாரங்கள் செய்யப்படுகிறன.
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடிய போது, நாடு பிளவுப்பட போவதாக பிரசாரம் செய்தனர். ஆனால் உணர்வு பூர்வமாக தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது. அதனால் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.
தேசிய பிரச்சினையை தீர்க்க இது தான் சிறந்த சந்தர்ப்பமாகும். 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் இந்த தீர்வு முயற்சிக்கு சாதகமான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்.
சம்பந்தன் தலைமையிலான குழுவும் இந்தவிடயத்தில் நேர்மையுடன் செயற்படுகின்றன. பௌத்த மதத்துக்கு முன்னுரிமையளிக்கும் யோசனையையும் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு சிறந்த இறுதி சந்தர்ப்பம் இதுவாகும்.
சிவாஜிலிங்கம் மற்றும் விக்னேஸ்வரன் போன்றோர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை பதவிக்கு வந்தால், என்ன நிலைமை ஏற்படும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்
வடக்கு முதலமைச்சர் மட்டுமன்றி சகல முதலமைச்சர்களும் மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குமாறு கோருகின்றனர். 13வது அரசியமைப்பு திருத்தித்தின் கீழ் அதிகாரங்களை சட்டபூர்வமாக வழங்குமாறு அவர்கள் கேட்கின்றனர்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தொடர்பில் சந்தேகத்துடன் செயற்பட்டால் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது.
நாட்டை துண்டாடும் எந்த விடயத்திற்கோ, தனி ஈழம் வழங்கும் யோசனைக்கோ எந்த இனத்திற்கும் பாதகமான யாப்பிற்கோ, நாம் ஆதரவு வழங்க மாட்டோம் என்றார்.
Add Comments